Wednesday, July 06, 2011

வர்ணாஸ்ரம அதர்மம் .

வர்ணாஸ்ரம அதர்மம் ......

நண்பர் ஒருவரின் இடுகையில் பின்னூட்டமிடும் பதிவர் வர்ணாஸ்ரம தர்மம் என்பதுதர்மமா? அதர்மமா? என்று கேட்டிருந்தார்.

வர்ணாஸ்ரம தர்மம் என்பதே misnomer என்பது என கருத்து. பிறப்பை அடிப்படையாகக் கொண்டு ஒரு மனிதன் கண்டுகொள்ளப்பட விதி இருக்குமனால் அந்த விதி அதர்மமானது.வெள்ளையர்கள் கருப்பின மக்களை கொடுமைப்படுத்தியது நியாயப்படுத்தப்பட்டது சரி என்றாகிவிடும்.இந்தியர்களை brown dog என்றது நியாயமாகி விடும்.காந்தி அடிகள் தென் ஆப்பிரிக்காவில் நடத்திய யுத்தம் தர்ம யுத்தமாக இருந்திருக்காது.

வர்ணாஸ்ரமத்தின் மிக அசிங்கமான அம்சம்" தீண்டாமை."அது இந்துமததிற்கு மட்டும்சொந்தமானதில்லை.யூதமதத்திலிலுமிருந்தது. யூதமதம் உச்சத்தில் இருந்த காலமிருந்தது. கிரேக்கர்கள்,மத்திய தரைக்கடல் பகுதியில் வாழும் மக்களை மனிதர்களாகவே கருதியதில்லை.அவர்களை சுமெரியர்கள் என்று அழைப்பார்கள். சுமெரியர்கள் தீண்டத்தகாதவர்கள். பொது இடங்களுக்கு அவர்கள் வரக்கூடாது. அவர்கள்கைபட்ட நீரைக்கூட அருந்தக் கூடாது.ஏன்? எசுபிரான் கூட இதனை அனுசரித்து வர வேண்டியதாயிற்று. "தீண்டாமையை" ஒழிக்க அவருக்கு உணர்த்தியது ஒரு சுமெரியப் பெண்.

.பலைவனத்தில் ஏசு சீடர்களொடு சென்றுகொண்டிருந்தார்.பிணியால் பாதிக்கப்பட்ட ஏழைஎளிய மக்களுக்கு மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்துவார். ஒருசமயம் அவர் சுமெரியர்களின் குடியிருப்பு வழியாகச்சென்று கொண்டிருந்தார். அந்தக்குடியிருப்பில் ஒருகுடிசையிலிருந்த சிறுமிக்கு உடல் நலமில்லை. அவளுடைய தாயார் தன் குழந்தையின் மேலுள்ள பாசத்தால் ஏசுவிடம் வந்தாள் அவளுக்குத்தெரியும் ." தான் தீண்டத்தகாதவள் தண்டிக்கப்படலாம்.தன்மகள் குணமடையவேண்டும் அதற்காக எந்ததண்டனையையும் தாங்க தயாரனாள்." ஏசு புரிந்து கொண்டார். சீடர்கள் பயந்தனர். மருந்து கோடுத்து அந்த சிறுமியை குணப்படுதினார். மனிதப்பிறவியில் தீண்டத்தகாதவர்கள் என்று எவருமில்லை"என்று அறிவித்தார். யூதர்களுக்கு ஏசுவின் மீதான கோபம் அதிகமாகியது.

தாழ்த்தப்பட்டவர்கள் கிறிஸ்தவ மதத்தை இந்தியாவில் நாடினர்கள் தென் மாவட்டங்களில் இன்றும் P.C,N.C, கொடுபோட்டு சர்ச்சுகளில் இட்ம் ஒதுக்குவது நின்றபாடில்லை .

தீண்டாமையை ஒழிப்பதற்காக தமிழகத்தில் ஒரு இயக்கம்நடந்து வருகிறது. தீண்டமைச்சுவர் உண்டாகி அதனை இடிக்க ஒரு போராட்டம். கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து போராடிய சட்டமன்ற உறுப்பினரை அடித்துஅடி வயிற்றில் மிதித்ததில் அவருடைய கர்பப்பை சிதைந்து ஆறுமாதம் மருத்துவ மனையில் இருந்த்தார்.

இன்றும் தீண்டாமை தொடர்கிறது. என் தந்தை காலத்திலும் இருந்தது.என் பாட்டனார் காலத்திலும் இருந்தது. பிரிடிஷ் ஆண்டபொதும் இருந்தது.நாயக்கர் காலத்தில்,சேர சோழபாண்டியர் காலத்தில், இருந்தது.அக்பர் காலத்தில், அசொகன் காலத்தில், புத்தன் காலத்தில்,அலக்சாண்டர் காலத்தில் இருந்தது. ஒவ்வொரு ஆட்சியிலும் மாறும் மாறும் என்று நமபி ஏமாந்தோமே!

அதனால் தான்பாரதி பாடினான். விடுதலை பற்றி பாடினான். விடுதலை யாருக்கு.? பிராமணணுக்கா? பிள்ளைக்கா ? முதலிக்கா ? இல்லை! இல்லை!

விடுதலை! விடுதலை! விடுதலை! என்றான். யருக்கு?
பறையருக்கும் விடுதலை என்றான் .
புலையருக்கும் விடுதலை என்றான்.
பறையரரோடு சேர்ந்து மறவருக்கும்விடுதலை என்றான்.

மறவர்கள் பறையரோடு சேர்ந்தால் தான் விடுதலை .
விடுதலைக்காக தவிக்கும் மக்களுக்கு என்ன சொல்லப்போகிறோம் !

24 comments:

saarvaakan said...

வணக்கம்,
சாதியின் கட்டுக் கோப்பு கொஞ்சமும் குறைந்ததாக் தெரியவில்லை.கிராமங்களில் இன்னும் ஏற்றத்தாழ்வு கூட அப்ப்டியே இருக்கிறது.இத்னை ஒத்துக் கொள்ளாம்லேயே மறைக்கும் போக்கு நிலவுவதாலேயே சாதி ஏற்ற‌த்தாழ்வு நீடிக்கிறது.செய்தியில் மதுரை கொடிக்குளம் அருகில் உள்ள ஊரில் தாழ்த்தப் பட்ட மக்களை கிணற்றில் நீர் எடுக்க அனுமதி மறுக்க்கிறார்கள்.அரசு ஆதிக்க சாதியினர் மீது நட்வடிக்கை எடுக்க அஞ்சுகிறது.ஒரு சமூகப் பிரச்சினை குறித்து பதிவிட்டதற்கு நன்றி

suvanappiriyan said...

சிறந்த பதிவை தந்திருக்கிறீர்கள்.

693. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"உங்களுக்குத் தலைவராக நியமிக்கப் படுபவர் கருப்பு நிறமுடைய (நீக்ரோவான) உலர்ந்த திராட்சைப் பழம் போன்ற தலையை உடையவராக இருந்தாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள். அவர்சொல்வதைக் கேட்டு நடங்கள்."
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :10

Mukhilvannan said...

தீண்டாமை ஒரு சாபக்கேடு தான். இது வலுப்பெற்றது பவுத்த சமண சமயங்களால் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. புலால் மறுத்தல், கவின் கலைகள் மீது வெறுப்பு ஆகிய சில சித்தாந்தக் கொள்கைகள் காரணமாக புலால் உண்பவர்களும் பாணர் விறலியர் போன்றோரும் சமூகத்தின் மலின கீழ்த்தர மக்களாகத் தள்ளப்பட்டனர் என்பது சரியா?

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நன்றி ஐயா.

kashyapan said...

முகில்வண்ணன் அவர்களே !முறையாக தமிழ்பயின்றவன் அல்ல நான். பவுத்த, சமண துறவிகளெழுதியவைதான் ஐம்பெரும் காப்பியங்கள்.இசை,நாட்டியம்,நாடகம் ஆகீயவை பற்றி எராளமான குறிப்புகளை கொண்டவை அவை. முதன் முதலாக "சாதி" என்ற வார்த்தை பவுத்த நூல்களில் வருவதாக வரலாற்றாளர்கள் குறிப்பிடுகிறார்கள்..புத்தருக்கு முன்பே சாதி தோன்றியுள்ளது என்று கருதப்படுகிறது. பிரச்சினை அது அல்ல. தீண்டாமை தேவையில்லை என்றால் ஒழிப்பது எப்படி?---காஸ்யபன்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

வர்ணங்களை அடிப்படையாய்க் கொண்டு ஓவியங்கள் இருக்கலாம்.மனிதர்கள் இருக்க அனுமதிக்கமுடியாது.

ஆழமான சிந்திக்கவைக்கும் பதிவு.

Saravanan Trichy said...

அருமையான பதிவு... :)

ad said...

தீண்டாமை என்றும் சொல்லி அதை தர்மம் என்றும் சொல்கிறார்கள்.அவர்களைப்பற்றி என்சொல்ல.
நல்லொரு பதிவு.

John Chelladurai said...

ஐயா,
உங்களுக்கேயுரிய பொலிவுடன் சாதீய அதர்மத்தை பதிவு செய்துள்ளீர்கள். நன்றி. வரலாற்று அவலத்தை சாடிய விதம் இதம்.

தீண்டாமையை ஒழிப்பது எப்படி என்கிற கேள்வி விடையின்றி ஒலித்துக் கொண்டேயிருக்கிறது, சாந்தியடையா ஆவியைப்போல.

'(விட்டு) விட்டால் ஒழிந்து போகிறது சனியன்' என்கிற எளிய சூத்திரம் ஏனோ எவருக்கும் புரிவதில்லை.

ஏசுபிரான் மனமாற்றத்தைப் பற்றிய தங்களின் ஆய்வு நிறைவு தருகிறது. அதற்கு அழுத்தம் சேர்க்கும் விதமாக கூற வேண்டுமானால், ஏசுபிரான் - சுமாரிய பெண் நிகழ்வையடுத்து அவர் கலிலியோ செல்ல நேர்ந்தபோது, ஊரின் வெளிப்புரம் ஓர் கிணற்றில் தண்ணீர் நீர் இறைத்துக் கொண்டிருந்த ஒரு சுமாரியப் பெண்ணிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்க, 'ஐயா, யூத குலத்தானாகிய தங்களுக்கு நான் தருவது எப்படி முறையாகும்' என தயங்கி ஒதுங்குகிறாள் அந்த மாது. 'பெண்ணே! வந்திருப்பது யாரென தெரிந்தால், நீ இப்படித்தயங்கமாட்டாய்' எனக் கூறி, நீண்ட உரையாலுக்குப் பிறகு அந்தப் பெண்ணிடமிருந்து நீர் அருந்தி, தீண்டாமைக்கு ஓர் முழுக்குப் போட்டார்; 'நானே வழியும் சத்தியமும்' எனக் கூறி அவர் வழி வந்தவர்களுக்கு, வாழ் நெறி தந்தார்.

நாய் வாலை நிமிர்த்த முடியுமா ? அதிசயங்கள் புரிந்த ஏசுபிரான், முடியும் என்றார்; இரட்சிப்பு அனைவருக்கும் உண்டு என்றார். முடிந்தபாடுமில்லை, வந்தபாடுமில்லை.

அவரை சிலுவையிலிட்டதே அவர் மக்கள்தானே.

ஏசு, காந்தி, இ வே ரா போன்ற சான்றோர் சாதனைகள் நம்மை இன்னும் நம்பச் சொல்கிறது. நம்பிக்கை தானே வாழ்க்கை. அதாவது செயலுடன் கூடிய நம்பிக்கை.
அன்பன்,
தேஜா

kashyapan said...

மதிப்பிற்குரிய ஜாண் செல்லத்துரை அவர்களே! உங்களுடைய இடுகை "Weman : builders of civilisation" பார்த்தபிறகுதான் சுமேரிய மாது பற்றி எழுதினேன் .சரிதானா என்றசந்தேகம் இருந்தது. உங்கள் பின்னூட்டம் பார்த்தபின் மனநிறைவு எற்பட்டது.வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்

venu's pathivukal said...

வர்ண அதர்மத்தைப் பற்றிய பதிவு நல்ல இடுகை. வாழ்த்துக்கள்..

மரபணுக்குள் ஒளிந்திருக்கிறது சாதிய ஆதிக்க உணர்வு.
ஒடுக்குமுறையின் கருவி கண்களிலிருந்தும் பாய்கிறது
சொற்கள் மூலம் பாயும்போது அதன் வன்முறை மூர்க்கமானது
இன்னும் நிஜ ஆயுதங்களை எடுத்துவிடும்போதோ எல்லா தர்ம நியாயங்களும்
கண்களும் வேறு பக்கம் திருப்பிக் கொள்வதைப் பார்க்கிறோம்.

நடப்பு காலத்தில், திண்ணியத்தில் தலித் சகோதரர்கள் இருவர் வாயில் மலம் திணிக்கப்பட்டதும்,
உங்களது நாகபுரி அருகே உள்ள கெயர்லாஞ்சியில் பொருளாதார ரீதியாகக் கொஞ்சம் முன்னுக்கு வந்து கொண்டிருந்த குடும்பம் என்பதற்காகாவே, பையாலால் போட்மாங்கே அவர்களது குடும்பத்தில் அவரைத் தவிர மற்றவர்கள் ஈவிரக்கமின்றி பட்டப் பகலில் நட்ட நடு வீதியில் உள்ளூர் சாதி இந்துக்கள் முன்னிலையில் சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டு சாக்கடையில் அவர்கள் பிணங்கள் வீசப்பட்டதும், இந்தக் கொடுமையை நிகழ்த்துமுன், போட்மாங்கே மனைவி மற்றும் அவரது செல்ல மகளைப் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய கொடுமையும் அண்மைக் காலத்தில் நிகழ்ந்தவை.

கெயர்லாஞ்சியில் சிறிய புகாராகக் கூடப் பதிவு செய்யத் தயாராயில்லை சாதிய காவல்துறை. பிருந்தா காரத் உள்ளிட்ட போராளிகள் தலையீட்டிற்குப் பின் பதிவான வழக்கின் இறுதியில் சிலருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டபோதுகூட சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகத் தான் பார்த்தது நீதி மன்றம். எஸ் சி / எஸ் டி பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை என்று கருத முடியாது என்று சொல்லிவிட்டது. பின்னர் உயர் கோர்ட்டில் அந்தத் தண்டனை குறைக்கப்பட்டுவிட்டது. அப்போது நாகபுரி பென்ச் சொன்ன விஷயம் முக்கியமானது: இந்தக் குற்றங்கள் ஒன்றும் அரிதிலும் அரிதான குற்றங்கள் என்று வகைப்படுத்த முடியாது...

அப்படியானால் இத்தகைய குற்றங்கள் நிறைய நடப்பதை நீதிமன்றம் பிரகடனப் படுத்திகிறதா, அப்படியானால் அதைத் தடுக்கத் தக்க தீவிர தண்டனைகள் வழங்குவது தேவை என்று உணரவில்லையா..

இரத்தம் ஒரே நிறம் என்று வசனம் எழுதலாம்.நாடகம் நடிக்கலாம். அடுத்தடுத்த இருக்கைகளில் கூட சாதி இந்துக்களோடு அமர முடியாத தலித் மக்களே பல்லாயிரக் கணக்கான இந்தியக் கிராமங்களில் இன்றும் வாழ்கின்றனர். இந்த வாக்கியத்தில் வாழ்வது என்பதன் பொருள் என்ன என்ற கேள்வியும் வைக்கிறேன்.

முற்போக்கு இயக்கங்கள் சாதி ஒழிப்பை முன்வைத்தும், தீண்டாமைக்கு எதிராகவும் மிகத் தீவிர செயல் காலம் கான வேண்டிய நேரம் இது. தமிழகத்தில் இந்த நம்பிக்கைக் கூறுகளை தீண்டாமை ஒழிப்பு முன்னணி வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

எஸ் வி வேணுகோபாலன்

Anonymous said...

சிறந்த பதிவு! நல்ல பின்னூட்டங்கள். சாதியும், தீண்டாமையும் முற்றிலும் ஒழிய வேண்டும். எவ்வளவு வீடுகளில் இன்னமும் வீட்டு வேலை செய்ய வருபவர்களை அடுப்பறையில் விடாமல் இருக்கிறார்கள். 'திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்பது போல் ஜாதி வெறியர்களும் அவர்களாக பார்த்து மனம் திருந்தினாலே ஒழிய இதற்கு விடிவே இல்லை.

hariharan said...

நாம் மிகவும் வெட்கப்படுகிற விஷயம், பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு மிக்க சமுதாயத்தில் வாழ்கிறோம் என்பது. பசி என்பது என்னவென்று படித்தால் புரியாது, அதேபோல் தான் தீண்டாமைக்கொடுமைக்கு உள்ளானவர்கள் படும் அவஸ்தை. இதற்கு கடவுளர்கள் துணையாக வைத்துக்கொண்டார்கள்.

ஒரு கட்டப்பட்ட சுவர்கள் உடைக்கப்பட்டாலும் மனதில் எழுப்பட்ட சுவர்களை உடைப்பதில் தான் இடதுசாரிகளின் பங்கு தேவைப்படுகிறது. படித்தமக்கள் கேட்கிறார்கள் தீண்டாமை எங்கேய்டென்று, ஆதவன் தீட்சன்யா இயற்றிய `இப்பெல்லாம் எவண்டா சாதி பார்க்கிறான்’ பாடல் கேட்கும் போது வலிக்கிறது.

அழகிய நாட்கள் said...

//வர்ணாஸ்ரமத்தின் மிக அசிங்கமான அம்சம்" தீண்டாமை."அது இந்துமததிற்கு மட்டும்சொந்தமானதில்லை// சனாதன தர்மம், வர்ணாஸ்ரமதர்மம் போன்ற வார்த்தைகளின் பிறப்பிடமே இந்து மதம்தான். வேற்று மதங்களை விடுங்கள். இங்கேயே பிறந்து இங்கேயே வளர்ந்து வடக்கே மதுரை தெற்கே சாத்தூர் கிழக்கே அருப்புக்கோட்டை மேற்கே சிவகாசி என்ற தேச எல்லைக்குள் வாழ்ந்து மடிந்து போன எனது முந்தைய தலைமுறைக்கு இந்து மதம் என்ன செய்திருக்கிறது. கோவிலுக்கு உள்ளே அனுமதிக்க மறுக்கிறது;பொதுக்குளத்தில் அவர்களது மடத்தில் ஏன் சாயாக்கடையில் கூட அனுமதி என்பது மறுக்கப்படுகிறது. நாலில் ஒரு பகுதியினரை இப்படி வைத்துக்கொண்டே மதம் மாறாதே என்பது எப்படி சரியாகும். எனக்குத்தேவை சரியான அடிமை என்ற சாதியின் புத்தி மட்டுமே சலவை செய்யப்பட வேண்டும். தீண்டாமை ஒழியும் போது சாதிகள் இற்று வீழும். தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புகள் இதை செய்து முடிக்கும்

kashyapan said...

திலீப் அவர்களே! மிக்கநன்றி.உங்கள் பின்னுட்டத்தை ஆவலுடன் எதிபார்த்திருந்தேன். தீண்டாமை ஒழிப்பு முன்னணி இதனை வெற்றிகரமாகச்செய்து முடிக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.தீண்டாமை ஒழிந்தால் சாதிகள் ஒழிந்துவிடும் என்ற உங்கள் கூற்றை ஏற்க தயக்கமாக இருக்கிறது. காந்தியடிகள் தீண்டாமையை ஒழிக்க பாடுபட்டார். ஆனால் சாதி ஒழிப்பு பற்றி எதுவும் சொல்ல மறுத்துவிட்டார்.தீண்டாமையும் ஒழியவில்லை.சாதியும் ஒழியவில்லை. அண்ணல் அம்பேத்கர் தீண்டாமைக்கொடுமையை கடுமையாக எதிர்த்தார். அரசியல் ரீதியாகவும் சட்டரீதியகவும் முனைந்தார். என்ன செய்ய! அவருடைய இயக்கம் "தீக்ஷா பூமியில் " முடிந்தது. தலித்துகளின் புனித தலமாக இருந்தது கொஞ்சம் கொஞ்சமாக தலித்துகளை அப்புறப்படுத்துகிறதோ என்ற அச்சம் எற்படுகிறது.இதற்கு தாய்லாந்து,ஜப்பான் அகிய நாடுகளின் பணம் கொள்ளை கொள்ளையாக கொட்டப்படுகிறது. நோகியா, சுசுகி போன்ற கம்பெனிகள் வசப்படுத்திக்கொள்ளும் ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. தலித்துகளின் பிரச்சினை உழைக்கும் மக்கள் பிரச்சினையோடு இணைந்தது என்பதை ஏற்காமல் பொவது ஆபத்தில் முடியும். சாதி இருக்கும் வரை தீண்டாமை இருக்கும். மதம் இருக்கும் வரை சாதி இருக்கும். சாமி இருக்கும்வரை மதம் இருக்கும். இது வாய்ப்பாடு.வாழ்த்துக்கள் ---காஸ்யபன்.

அப்பாதுரை said...

அருமையான விளக்கம். குழப்படி எதுவுமில்லாமல் உங்கள் கருத்தை எடுத்துச் சொல்லியிருக்கும் விதம் பிரமாதம். வர்ணாஸ்ரமம் நெறி என்ற அளவில் நீங்கள் சொல்லியிருப்பதுபோல் மாபெரும் தவறு. முறை என்ற அளவில் இன்றைக்கும் நடைமுறையில் இருக்கிறது - அந்த வகையில் வர்ணாஸ்ரமம் பற்றிய சிந்தனையின் தொலைநோக்கு பிரமிக்க வைக்கிறது.

அப்பாதுரை said...

தீண்டாமை என்பது வர்ணாஸ்ரம design அல்லவென்று நினைக்கிறேன். வர்ணாஸ்ரமம் intended to create a platform for skill and aptitude based professional development. (மன்னிக்கவும், தமிழில் சரியாக எழுத வரவில்லை). அங்கிருந்து தீண்டாமை, ஜாதி இன குலப்பகுப்பு போன்றவை உண்டானது unfortunate. வர்ணாஸ்ரமத்தோடு மதத்தையும் ஜாதியையும் கலந்ததும் வர்ணாஸ்ரமும் அசிங்கமாகி விட்டது.

உங்கள் கருத்து சரியானதென்றாலும், வர்ணாஸ்ரமம் என்ற நாணயத்தின் மறுபக்கம் பற்றியும் இரண்டு வரி எழுதியிருக்கலாமோ? சுவற்றில் சித்திரமும் எழுதலாம்; மூத்திரமும் பெய்யலாம். வர்ணாஸ்ரமம் சுவரென்று நினைக்கிறேன். சிலர் சித்திரம் எழுதினார்கள்.

kashyapan said...

அப்பாதுரை அவர்களே! வர்ணாஸ்ரமம் - professional skill- மறுபக்கம் என்ன அநியாயம் ஐயா! உம்மீது எனக்கு கோபம்கோபமாகவருகிறது."சாதியின் தோற்றம்" என்ரு ஒரு புத்தகம் படித்தேன்.முப்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் படித்து. குணா என்பவர் எழுதியது.நக்சலைட் என்று நினைக்கிறேன்.பிரமணத்துவெஷம் கூடுதலாக இருந்தது. ஆனாலும் வர்ணாஸ்ரமத்தை சமூக வர்க்கப்பர்வையில்அணுகியிருப்பார்.தீண்டாமையையும்,வர்ணாஸ்ரமத்தையும்பிரித்துப்பார்க்க எப்படி மனம் வந்தது அப்பாதுரை அவர்களே! முனியாண்டியின் மூன்றுமாதக்குழந்தைக்கும்,முத்தையா தீட்சிதரின் மூன்றுமாதக்குழந்தைக்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லையே!உங்களுக்குத் தெரிகிறதா? மார்டின் லூதர் எதற்காகப் போராடினார்?.மனித உரிமை இயக்கம் தேவையா?நெறிகள்,முறைகள் என்றெல்லாம் குழப்ப வேண்டாம்.மாடாதிபதிகள் தான் வார்த்தைகளில் விளையாடுவர்கள்.சுப்பிரமணியன் என்ற ஜெயந்திரர் தரிசு நிலம் என்றார் விதவைப் பெண்களை! அனுராதா ரமணன் என்ற பிரபல எழுத்தாளர் சுவாமிகள் என்னை படுக்கை அறைக்கு அழைத்தார் என்று தொலை க்காட்சியில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். மாடாதிபதிக்கு சாதியில்லை !வர்ணமில்லை!தீண்டாமை இல்லை !...அது...மட்டும் பொதும் .! இங்கிலீஷ்கர குட்டியை ஆடுதாண்டும் காவெரிக்கு இழுத்துச்சென்ற போது...கோபத்தில் எதையாவது எழுதி...விடும்! பாவம் அம்பெத்கர்! அவரால் மனுஸ்மிருதியை மட்டும் எரிக்க முடிந்தது. அதனை உருவாக்கியவர்களை முடியாது.வர்ணாஸ்ரமத்திற்கு மறுபக்கம் கிடையாது. ஒரே பக்கம் தான்.அநியாயம் ,அதர்மம் தான் ...வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்

அப்பாதுரை said...

வர்ணாஸ்ரமம் என்று தொடங்கி ஜாதி மனு ஸ்ம்ருதி ஜெயேந்திரன், ரமணன், அம்பேத்கர் என்று எங்கெங்கோ போறீங்களே சார்?

தர்மம் என்ற வடமொழிச் சொல்லுக்கு நிறைய பொருளுண்டு - உங்களுக்குத் தெரியாததா? வர்ணாஸ்ரமம் தர்மமும் இல்லை அதர்மமும் இல்லை. வர்ணாஸ்ரமம் ஒரு பகுப்பு - முறை - திறமைக்கு ஏற்ற திக்கு அவ்வளவு தான். இன்றைக்கு சயன்ஸ், மேத், மெடிகல், ஆர்ட், மெகேனிக், ஜேனிடர் என்று பிரிப்பது போல். செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைப்பவன் நான் - தெய்வம் தேவையில்லை என்று நம்பினாலும் கூட :)

ஜாதி தீண்டாமை உருவாக்கியவர்கள் கடவுள் மத அடிவருடிகள். இதையும் அதையும் போட்டுக் குழப்பினால் நாமும் குழம்பி மற்றவரையும் குழப்பும் அபாயம் உண்டே சார்? அனுராதா ரமணன் ஜெயேந்திரருடன் படுப்பதற்கும் வர்ணாஸ்ரம தர்ம அதர்மத்துக்கும் என்ன சார் சம்பந்தம்? அவர்கள் விருப்பம் படுப்பதும் விடுப்பதும். வர்ணாஸ்ரமத்துக்கு வருவோம்.

தொழிலில் அவரவருக்கு என்ன விருப்பமோ திறமையோ அதை வளர்க்க உருவானது வர்ணாஸ்ரமம். ஜாதியும் தீண்டாமையும் உருவாக்க அல்ல.

கழிவறை சுத்தம் செய்பவர் இந்துமதத்தில் மட்டும் தான் ஜாதி வட்டத்துக்குள் அடைக்கப் படுகிறார் என்று நினைக்கிறேன். வேறே எங்கும் இதைப் பார்த்ததில்லை. கல்லூரியில் படிக்கும் நாட்களில் கைச்செலவுக்காக நானும் கழிவறைகளில் மருந்தடிக்கும் வேலை செய்திருக்கிறேன். அது வெறும் தொழில் - அவ்வளவு தான். எனக்கு அந்தத் தொழில் பிடிக்கவில்லை, வேறு தேடிக்கொண்டேன். அந்தத் தொழிலைத் தவிர வேறு எதுவும் தெரியாதவர்கள் எத்தனையோ பேர் உண்டே? அவர்கள் ஒரு நாளும் தீண்டத்தகாதவர்களோ வேறு ஜாதிக்காரர்களோ அல்ல. அத்தனை வர்ணங்களும் சிலுவையைக் கும்பிடுகிறார்கள் இங்கே, அருகருகில் உட்கார்ந்தபடி. அங்கேயும் சிவனையோ இன்னொரு கல்லையோக் கும்பிடுகிறார்கள் - ஆனால் தீண்டாமை மட்டும் எங்கிருந்தோ வந்துவிட்டது. அதை objectiveஆகப் பாராமல், கண்ணை மூடிக்கொண்டு வர்ணாஸ்ரமம் மேல் பழி போடுவது கடவுளைக் கும்பிடும் கண்மூடித்தனத்துக்கு ஒப்பானது என்று தோன்றுகிறதே சார்?

ஜாதி குலம் இனம் மதம் தீண்டாமை உருவாகக் காரணமாக இருந்தவர்கள் அதை வர்ணாஸ்ரமத்தோடு இணைத்தது தான் அதர்மம். இதைச் செய்த அத்தனை காவிகளையும் தாடிகளையும் செருப்பால் அடிக்கலாம், தப்பில்லை.

இத்தனை சொல்கிறோம் - இன்றைக்கும் நாம் தீண்டாமை என்று ஏதோ ஒரு விதத்தில் கடைபிடித்துத் தான் வருகிறோம். உங்கள் வாதங்களில் கூட அமெரிக்கர் என்றால் தீண்டத்தகாதவர்கள் போல் தான் எழுதுகிறீர்கள் இல்லையா? பேதங்கள் ஒழிய வேண்டுமென்றால் நமக்கு முதலில் பரந்த மனப்பான்மையும் objective outlookம் வேண்டும். அது இல்லாவிட்டால் யாரைக் குற்றம் சொல்லலாம் என்று பார்த்துக் கொண்டே இருப்போம் - இது என் பணிவான கருத்து.

kashyapan said...

அப்பாதுரை அவரகளே! நீங்கள் மிக உயர்ந்த தளத்தில் நின்று கொண்டு வர்ணாஸ்ரமத்தையும்,தீண்டாமையையும் பார்க்கிறீர்கள்.அது உங்கள் மேன்மையைப் புலப்படுத்துகிறது.அப்பாதுரை கழிப்பறையில் மருந்து அடிக்கலாம்.முனியாண்டி மேசையில் உட்காரமுடியது. இது நம் மரபணுவோடு ஒட்டிவிட்டதோ என்று பயப்படுகிறேன்.நான் மக்கார்த்தியை ஜாண் ஃபஸ்டெர் டல்லசை எதிர்ப்பேன்.பால்ராப்சனை ,மாண்ட் குளொமரி கிளிஃப்ட்டை, அங்கிள் டாமஸ் கேபின் எழுதியவனை எதிர்க்கமாட்டேன்.அமெரிக்காவின் கேடுகெட்ட முதலாளீத்துவ சூதினை எதிர்ப்பேன்.வியட்நாமிலும்,காங்கோவிலும் ஈராக்கிலும் அமெரிக்கதலையிட்டதை எதிர்க்கும் அமெரிக்கன் என் உடன் பிறந்த சகோதரன். மக்களை ஒன்று படவிடாமல் செய்பவர்கள் தீண்டாமை நீடிக்க வேண்டும் என்று விரும்பு கிறார்கள்.அதனால் அதற்கு புனித முலாம் பூசுவார்கள்.அல்லது, அறிவியல் ரீதியாக தவறான வியாக்கியானம் கொடுத்து நியாயப்படுத்துவார்கள் .நாம் தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் உங்களுடைய பின்னூட்டங்கள் என்னை மேம்படுத்துகின்றன. புதிய கொணத்தை , புதிய தரிசனத்தைத் தரத்தான் செய்கிறது.பல எற்புடையதாகவும் சில எற்க முடியாததாகவும் உள்ளன அதனால் என்ன? .Let Us agree to disagree. வாழ்த்துக்களுடன்--- காஸ்யபன்.

kashyapan said...

அப்பாதுரை அவர்களே! நீங்களும் தீண்டாமையை எதிர்க்கத்தான் செய்கிறீர்கள் நானும் எதிர்க்கிறேன். ஆனால் தீண்டாமையை அனுபவிப்பவன் மன நிலையிலிருந்து பார்ப்பது வித்தியசமானதாகும் . பள்ளியில் படிக்கும் பொது சக தலித் மாணவனின் அனுபவங்களை நேரில் பார்த்து புரிந்து கொண்டவர்கள் நாம் . நண்பரே அதனால்கோபப்பட்டுவிட்டேன்.மன்னிக்கவும். அன்புடன் ---காஸ்யபன்

அப்பாதுரை said...

என்ன சார் நீங்க?!
உங்க அளவுக்கு எனக்கு அனுபவமோ சுற்றுவட்ட பாதிப்போ இல்லை. சில தீவிர வக்கிரங்களினால் அவ்வப்போது பாதிக்கப்பட்டிருக்கிறேனே தவிர, 'சுகஜீவன' வாய்ப்புகள் தான் அதிகம். அகலம் உண்டே தவிர ஆழம் கிடையாது. எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடிவதில்லை. முயல்வதுமில்லை.

இராஜராஜேஸ்வரி said...

ஒவ்வொரு ஆட்சியிலும் மாறும் மாறும் என்று நமபி ஏமாந்தோமே! //

மாறுவதற்கான அறிகுறி ஏதும் தெரியவில்லை.

மற்ற நாடுகளில் டிக்னிட்டி ஆப் லேபர் என்று தொழிலால் வர்ணத்தை அமைத்தமாதிரி தெரியவில்லை.

கர்ணன்- அநியாயமாக திறமை இருந்தும் சாகும் வரை பாதிக்கப் பட்டிருந்தான்.நம் மனதையும் பாதிக்கிறான்.

சிவகுமாரன் said...

திண்ணியம் திருச்சி இலால்குடி அருகே உள்ள ஒரு ஊர்.அதன் அருகே உள்ள ஊரில் தான் 14 வருடம் வேலை பார்த்தேன். அந்தக் கொடுமையை செய்தவர்களையும் , பாதிக்கப்பட்டவர்களையும் எனக்குத் தெரியும்.உங்களுக்கு விஷயம் தெரியுமா ,கொடுமையை செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்ப நினைத்தார்களே தவிர , மனதளவில் கொஞ்சமும் நடந்த நிகழ்ச்சிக்கு வருந்தவில்லை. பாதிக்கப் பட்டவர்களுக்காக , பல்வேறு இயக்கங்கள் தான் போராடினார்களே தவிர, பாதிக்கப்பட்டவர்கள் சமாதானத்திற்கு தயாராக இருநதார்கள் என்பது கொடுமையிலும் கொடுமை.