Monday, November 25, 2013

அப்பாதுரை அவர்களின் தயவில் :


நவம்பர் 24, 2014


    எனக்கும் செவ்வாய் தொடும் விருப்பம் உண்டு. செவ்வாய்க்குச் சொந்தக்காரர் கோபித்துக் கொள்வாரோ என்ற கலக்கமும்.

இஸ்ரோ காரர்கள் செவ்வாயைத் தொடப் போகிறார்களாம். கொடுத்து வைத்தவர்கள்.

செய்தியைப் படித்ததும் அமெரிக்காவின்... இல்லை.. உலகின் அத்தனை பேரையும் போல் நானும் வியந்து அசந்தேன். சில சைனாக்காரர்கள் போல் பொறாமையில் வேகவில்லை. சில அமெரிக்கர்கள் போல அல்பமாக யாஹூவில் கமென்ட் போடவில்லை. நம்பள்கி குடியுரிமை நஹி ஹை என்றாலும் பாரதியைக் கொண்டாடும் பாத்தியதை உண்டு என்ற தைரியத்தில் எங்கள் பாரத தேசமென்று கொஞ்சம் தோள்கொட்டினேன்.

இதுவரை பழுதில்லாமல் இயங்கி வரும் மங்கல்யான் (சரியா?) தொடர்ந்து அப்படியே இயங்கி பயணத்தை வெற்றிகரமாக முடிக்க வாழ்த்துக்கள்.

இந்த வெற்றி பல விதங்களில் இந்தியாவை மேம்படுத்தும். செவ்வாய்ப் பயணத்தில் ஆசியாவில் முதலிடம், உலகின் நான்காவது இடம் போன்ற சாதா சாதனைகள் ஒரு புறம் இருக்க, நிறைய நெய் மசாலா சாதனைகளுக்கான வாய்ப்பு நாக்கைச் சப்புக் கொட்ட வைக்கிறது.

அமெரிக்க நாசா இயக்கம் ஒரு செவ்வாய்ப் பயணத்துக்கு இரண்டாயிரத்தைனூறு மிலியன் டாலர் செலவழிக்கையில் இந்தியாவின் இஸ்ரோ எழுபத்தைந்து மிலியன் டாலர் செலவழித்ததாகப் படித்ததும் தூக்கிவாரிப் போட்டது. இரண்டு பேத்துல யாரோ சில சைபருங்களை சாப்ட்டாங்களா?. இது உண்மையா இல்லையா என்ற விவாதம் ஒருபுறம் இருக்க, இது உண்மையாக இருந்தால் இந்தியாவின் மங்கல்யான் எப்படி இருக்கும் என்ற கிண்டல்கள் இன்னொரு புறம் இருக்க.. இது உண்மையாக இருக்குமா என்ற ஸ்ட்ரடீஜிக் கேள்வி எழுகிறது.

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் சைனா 'ஏழை' நாடாக இருந்தது. தொழில்நுட்பம் எல்லாம் பெரிதாக ஏதும் இல்லை. வசதியும் இல்லை. ஆனால் கனவு மட்டும் இருந்தது. அமெரிக்கத் தொழில் நுட்பங்களை மிகச் சுலபமாகவும் மிகக் குறைவான செலவிலும் சைனாவில் செயல்படுத்த முடியும் என்று மார்தட்ட வைக்கும்படி ஒரு கப்பல், ஒரு கார், ஒரு சூபர் கம்ப்யூடர், ஒரு ஏவுகணை, ஒரு ட்யூப் ரயில், ஒரு விமான நிலையம், ஒரு அடுக்குமாடிக் கட்டிடம் (ஆமாம்.. அதற்கான தொழில் நுட்பம் கூட சிக்கலாக இருந்த காலம்) என்று வரிசையாக பத்தில் ஒரு பங்கு ஐந்தில் ஒரு பங்கு என்ற செலவில் செய்து காட்டியது.. அமெரிக்காவை கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்தது. 'கம்யூனிஸ்ட் என்றால் செருப்பை எடு' என்றிருந்த நாட்டின் முதலாளிகள் திடீரென்று மூக்கின் மேல் விரல் வைத்துப் பார்க்கத் தொடங்கினார்கள்.

அசலில் சைனா எத்தனை செலவழித்தது என்று இப்போது பல கருத்துகள் நிலவினாலும், சீன அரசாங்கத்துக்கு மட்டுமே உண்மை தெரியும். ஆனால் அந்தத் தந்திரம் அவர்களுக்கு முழுப் பலனையும் அளித்திருக்கிறது. 'கம்யூனிஸ்டாக இருந்தால் என்ன?' என்று தங்களுக்குள்ளேயே சமாதானக் கேள்விகளை எழுப்பிய அமெரிக்க வர்த்தக உலகம், திடீரென்று தங்கள் தொழிற்சாலைகளை ஒட்டு மொத்தமாக சைனாவுக்கு மாற்றத் தொடங்கியது.

2007ல் நாற்பதாவது ஆண்டு விழாவைக் கொண்டாடிய சீன-அமெரிக்க வர்த்தக சங்கம் வெளியிட்டிருக்கும் சில 'கவலை'களில் சைனாவில் தயாராகும் பொருட்கள், சீன தொழில் நுட்பம்.. இவை ஏறக்குறைய அமெரிக்காவின் செலவு உயரங்களை எட்டிவிட்டது என்றும், நாற்பது வருட டாலர் மற்றும் தொழில் நுட்ப முதலீட்டின் பலமிருந்தும் சைனா இன்றைக்குக் கூட புதிதாக எதையும் செய்யவில்லை என்றும், அமெரிக்காவின் திட்டங்களை செயல்படுத்த மட்டுமே செய்கிறது என்றும், அமெரிக்க நிறுவனங்களுக்கு முழு சலுகை தராமல் உள்ளூர் வணிகத்தை சைனா கட்டுப்படுத்தியே வைத்திருக்கிறது என்றும் நிறைய கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இனி இந்தத் தொழிற்சாலைகளை அமெரிக்காவுக்குத் திரும்பக் கொண்டு போகவும் முடியாது. ஆக, சைனா முதலீட்டால் அமெரிக்கர்களுக்கு என்ன பயன் என்று நிறைய பேர் கேட்டார்கள். அமெரிக்க கேபிடலிசத்தை மெள்ளப் பழிவாங்கிய சீன கம்யூனிசம் என்று ஜாடையாகச் சொல்லவும் தவறவில்லை. சீன பொருளாதாரம் இன்றைக்கு உலகின் இரண்டாவது இடத்தைப் பிடித்து சில வருடங்களில் அமெரிக்காவையும் பின்னுக்குத் தள்ளிவிடும் அபாயத்தை எடுத்துச் சொல்லிப் புலம்பினார்கள். சைனா தும்மினால் அமெரிக்காவுக்கு இன்றைக்கு நிமோனியா வரும் நிதர்சனத்தை எடுத்துச் சொல்லி ஆளுக்காள் வயிற்றில் அடித்துக் கொண்டார்கள்.

'உற்பத்தி மையப் பொருளாதாரத்திலிருந்து அறிவாக்க மையப் பொருளாதாரத்துக்கு அமெரிக்கா மாறி வருகிறது, இன்னும் வேகமாக மாறவேண்டும்' என்று பில் கேட்ஸ், ஜேக் வெல்ச், வாரன் பபட், ரஜினிகாந்த் (ஹிஹி.. யாருனா இதுவரைக்கும் படிக்கிறாங்களானு பார்க்கத்தான்) போன்றவர்கள் இருபது வருடங்களாகச் சொல்லி வருகிறார்கள். ஓரளவுக்கு அமெரிக்காவும் மாறியிருக்கிறது என்றே சொல்வேன். எனினும் அறிவாக்கத்தின் பயன்பாடு என்று வரும்பொழுது உற்பத்தியை நம்ப வேண்டியிருக்கிறது. அதற்கு சைனாவை நம்பி இறங்க வேண்டியிருக்கிறது என்பதையும் மறக்கவோ மறைக்கவோ இயலவில்லை.

கடவுள் மதம் என்று கண்மூடித்தனமாக அடித்துக் கொண்டாலும் அடிப்படையில் இந்தியர்கள் அறிவாக்கப் பேர்வழிகள். சந்தேகமேயில்லை. சமீப காலமாக அறிவாக்கத்தை வணிகப்படுத்தவும் முடியும் என்பதை நிரூபித்து வருகிறார்கள். இதற்காகக் கொஞ்சம் ரத்தம் சிந்த வேண்டியிருந்தது என்பதை, ஐஐடி படித்து ஜாவா கோபால் என்று முடங்கியக் கூட்டத்தைப் பார்த்தால் தெரியும். ஐடி துறை இந்தியாவுக்கு பல சலுகைகளையும் சில ஏணிகளையும் வழங்கியது. இந்தியாவுக்கு ஐடி வேலைகளை மாற்றினால் செலவைக் கட்டுப்படுத்தலாம் என்று அடித்துப் பிடித்து இறங்கிய மேற்கத்தி நிறுவனங்கள், இன்றைக்கு யோசிக்கத் தொடங்கியிருக்கின்றன. 'இந்தியா ஒன்றும் அத்தனை சீப் இல்லை' என்று சொல்லும் அமெரிக்க அதிகாரிகள், அதே நேரம் தங்கள் தொழில் நுட்பம் மற்றும் பட்டறிவை இந்தியாவுக்குப் பறிகொடுத்து விட்டோம் என்ற கலங்க வைக்கும் உண்மையையும் உணர்ந்திருக்கிறார்கள். எதுவும் செய்ய முடியாது. ஐடி துறையில் இந்தியாவின் ஆதிக்கம் தொடரும். ஐடியைத் தொடர்ந்து பிபிஓ, எஞ்சினியரிங் டிசைன், மெடிகல் ரிசர்ச் என்று பலவகை அறிவாக்க சேவைகளை இந்தியா வழங்கத் தொடங்கி, இன்றைக்கு அந்தத் துறைகளிலும் இந்தியாவின் கொடி மெல்லப் பறக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் டிசைன் செய்யப்பட்ட அமெரிக்கக் கார் சைனாவில் தயாரிக்கப்படுவதை இணையத்தில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இதில் இந்தியாவின் டிசைன் சம்பாத்தியம் சைனாவின் உற்பத்திச் சம்பாத்தியத்தில் ஏறக்குறைய பாதி என்பது குறிப்பிடத்தக்கது! இந்த டிசைன் வியாபாரத்தில் இந்தியர்கள் ஒரு மணி நேரத்தில் சைனாக்காரர்களை விட ஏறக்குறைய மூன்று மடங்கு சம்பாதித்தார்கள் என்பது இன்னும் குறிப்பிடத்தக்கது (per capita revenue comparison).

விடுங்கள், செவ்வாய் தொடலுக்கு வருகிறேன்.

அடுத்த ஐம்பதாண்டுகளின் வணிக வளர்ச்சிக்கான ஆதார மையமென்று வரிசைப்படுத்தினால் செயற்கை உணவு (புரதம்), போர்க்கருவிகள், தகவல், உலகக் கல்வி, விண்வெளிச் சாகுபடி.. இவை முதல் ஐந்தில் அடங்கும். கொஞ்சம் கவனித்தால் இவை ஐந்துக்கும் பொதுவான ஒரு நரம்பு இருப்பது புலப்படும்.

விண்வெளிச் சாகுபடி.

கண்ணுக்கெட்டும் சந்திரனாகட்டும் கண்ணுக்கெட்டாத சனியனாகட்டும் இடைப்பட்ட ஆஸ்டிராய்ட் பட்டியாகட்டும்.. விண்வெளியில் சாகுபடி செய்ய நிறைய இருக்கிறது. செய்ய நிறைய பேர் போட்டியிடுகிறார்கள்.. இடுவார்கள். இந்தியா சாகுபடி செய்கிறதோ இல்லையோ சாகுபடிக்கான நுட்பமும் கருவியும் செய்ய முன்வந்திருப்பதாகவே நினைக்கிறேன். மீன் பிடிக்கும் போட்டியில் கலந்து கொள்வதை விட, போட்டியாளர்களுக்குத் தூண்டில் விற்கும் வேலையில் இறங்கியிருப்பதன் சாமர்த்தியம் கொஞ்சம் பிரமிக்க வைக்கிறது. செவ்வாய் தொடல் ஒரு தூண்டில். தூண்டில் சாம்பிள்.

உண்மையில் இருநூறு மிலியன் செலவழித்து விட்டு அதை அமுக்கி வாசிக்கிறார்களோ என்று ஒரு சின்ன சந்தேகம். அது உண்மையானால் அந்த தந்திரத்துக்கு ஒரு ஜே. அல்லது செலவழித்தது எழுபத்தைந்து தான் என்றால் அந்தத் திறமைக்கு டபுள் ஜே. அடுத்த பத்து ஆண்டுகளில் மேற்கத்திய நாடுகள் அத்தனையும் உன்னைப்பிடி என்னைப்ப்பிடி என்று செயற்கைக் கோள்களையும் இன்னும் பல விண்வெளிச் சாகுபடி வேலைகளையும் இந்தியாவுக்கு வழங்கும். சந்தேகமேயில்லை. எழுபதுக்கும் குறைவாகச் செலவழித்து ஐநூறு மிலியன் வரை இந்தியா சம்பாதிக்கக் கூடும். வல்லரசாவதற்கான ஏணி.

சாத்தியங்களை என் கற்பனையால் கட்ட முடியவில்லை. இன்னும் அறுபது வருடங்களில் ஒரு பெரிய ஆஸ்டிராய்ட் உலகத்தைத் தாக்கும் என்கிறார்கள். அதை விண்ணில் அடித்து நொறுக்க கணைகள் ஏவ வேண்டும் என்கிறார்கள். அதற்கான முனைப்பில் இறங்க வேண்டும் என்கிறார்கள். யாருனா சீப்பா விண்வெளிக் கப்பல் விடுறாங்களா பார்த்துச் சொல்லுங்ணே.

இந்த செவ்வாய் தொடலின் பக்க விளைவுகளில், வணிக சாத்தியத்தை விட இந்தியாவின் அறிவுத்திறன் சிறப்பாகப் பயன்படுத்தபட ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பது விலைமதிப்பில்லாத ஒன்றாகும். பொறியியல் மேற்படிப்பு படிப்பவர்கள் டெஸ்டிங் டிவலெப்மென்ட் சப்போர்ட் என்று ஜாவாவிலும் லினக்சிலும் இறங்க வேண்டிய அவசியமில்லை என்பதும் ஒரு இனிமையான சாத்தியம்.

திடீரென்று lbw ஆகும் சாத்தியமும் இருக்கிறது. அடுத்த ஐம்பதாண்டுகளைப் பார்க்காமல் வல்லபபாய் படேல் சிலை திறப்பு விழாவைக் கொண்டாடி சென்ற ஐம்பதாண்டுகளின் குழிகளில் விழுந்தால் எழுவது கடினம். இந்திய இளமை கவனமாக இருக்க வேண்டும்.

அதற்கும் முன்னால் செவ்வாய் தொடுவதில் குறியாக வேண்டும். (க்கும்.. நீ பக்கத்துல வந்தாத்தானே பட்டு?)

4 பின்னூட்டங்கள்

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

//கடவுள் மதம் என்று கண்மூடித்தனமாக அடித்துக் கொண்டாலும் அடிப்படையில் இந்தியர்கள் அறிவாக்கப் பேர்வழிகள். சந்தேகமேயில்லை//
உண்மைதான் ஐயா

இராய செல்லப்பா said...

விவரமான கட்டுரை. எதிர்மறையான தகவல்களுக்கு ஆதரவு தெரிவித்துவரும் வலைத்தளங்களுக்கு நடுவே நேர்மறையான கருத்துக்களை வெளியிடும் பண்பு அனைவரும் பின்பற்றவேண்டிய ஒன்று.

அப்பாதுரை said...

மிகவும் நன்றி.