Saturday, March 07, 2015

பிராமணர்களுக்குள்ளூம் 

தீண்டாமை அடுக்குகள் ....!!!





தோழர் எஸ்.ஏ .பெருமாள் அவர்கள் "பிராமண மாற்றம் " என்ற தலைப்பில் தன்னுடைய "முக நுலில்" ஒரு நிலைத்தகவலை பதிந்திருந்தார் ! அதிலிருந்த பல தொலைபேசி சந்தேகங்கள் வந்து குவிந்து விட்டன! இது பற்றி எழுத நிறைய தகவல்கள் இருந்தாலும் நம் பொதுப்புத்தியில் உறைந்து போன சில விஷயங்களை பற்றி குறிப்பிடவேண்டும் என்று கருது கிறேன் !

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும்,நெல்லை காந்திமதி அம்மன் கோவிலிலும் "சாமி-சாமி "என்று " திரு   நீறு  "க்காகவும் "குங்கும"த்திற்காகவும் கை நீட்டும் நமக்கு அந்த சாமி பிராமணர்களுக்குள் உள்ளை சாதீய அடுக்கில் கட்ட கடைசியில் உள்ளவர் என்பது எத்துணை பேருக்கு தெரியும் !

"age nearer birthday " என்றால் எனக்கு 80 வயது ஆகிறது !என்னுடைய சிறு  வயதில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று ஆசைப்படுகிறேன்.

மதுரையில் "பட்டமார் தெரு என்று வடக்குஆவணிமூல வீதி யையும் வடக்கு சித்திரை விதியையும் இணைக்கும் சந்து களுக்கு பெயர் பட்டமார் சந்து ! இவர்கள் தான் கோவிலில் ஆண்டவனுக்கு "கைங்கரியம் "  செய்யும் வகுப்பினர் ! இவர்கள் வேதம்,உபநிஷத்து , சம்ஸ்கிருதம் என்று பாடசாலைகளில் படித்தவர்கள் அல்ல ! அந்த அந்த கோவில்களின் ஆகம விதிகளின் படி பணி செய்தால் போதும் ! பிராமணர்களின் பிரமிடுகளில் கடைசியில்  உள்ளவர்கள் !

பொதுவாக கிராமங்களில் "அக்கிரஹாரம் ", வடக்குதெரு "பிள்ளைமார் தெரு,  என்று பட்டறை பட்டறையாக வசிப்பார்கள் ! அக்கிரஹாரத்தில் "அய்யமார் " வசித்தாலும் வடமாள்,பிரஹ சரணம், வாத்திமார், எண்ணாயிரம் ,  பட்டமார் என்று ஒருங்கிணைந்த விடுகளில் வசிப்பார்கள் ! அக்கிரஹாரத்து விடுகளின் கட்டுமானமே வித்தியாசமாக இருக்கும் !

ஒவ்வொரு வீட்டு வாசலிலும் "வேனல் பந்தல் இருக்கும் !அடுத்து திண்ணை ! அதன் பிறகு நடை ! அதற்கு அப்பால் "ரேழி " ! அதன் பிறகு "ஐந்தாம் பத்தி "! ரேழியின் ஒருபகுதி "பாவுள் " ! இது முக்கியமான மதிப்புள்ள பொருள்களை வைக்கும் இடம் ! ஐந்தாம் பத்தியை ஒட்டி பெரிய சமையல் கட்டு ! அடுத்து பிரும்மாண்டமான பட்டாசாலை ! அதன் அருகே சிறு சமையல் புரை ! அடுத்து பட்டிய கல்  ! அதனை ஒட்டி  முற்றம் ! பின்னர் கொட்டில் ! அடுத்து மாட்டுத்தொழுவம் ! கிணறு சிறு தோட்டம் ! பின்னர் வைக்கல் போர் ! அதன் மூலையில் மண்ணில் குழைத்த உரூவமில்லாத சொள்ள  மாடன் ! இறுதியில் வண்டி தொழுவம் !

வீட்டு திண்ணையில் பட்டர் ஒக்காரக்கூடாது ! வேனப்ப்ந்தலில் உள்ள திண்டில் தான் உட்காரவேண்டும் ! விசேஷ  நாட்களில் கிராமச் சாப்பாட்டு நாட்களில் பட்டர் வீட்டிற்குள் வந்து சாப்பிடக்கூடாது ! அவருக்கு "நடை"யில் தான் சாப்பாடு! அவர் உள்ளெ வந்தால் தீட்டு ! கோவில் பிரசாதத்தை பட்டுத்துணியால் மூடி எடுத்து வருவார் ! தாமிர தட்டில் ! பட்டுக்கும் தாமிரத்திற்கும் தீட்டு கிடையாதாம் !

இவர்களில் ஒருபகுதியினரை பஞ்சாங்க பாப்பான் என்று அழைப்பார்கள் ! சிலரை "மத்தியான பறையன் " என்றும் அழைப்பர்கள் ! இவர்கள் தலித்துகளுக்கும் ,குடிபடைகளுக்கும் , நீத்தார் நினைவுநாள் மற்றுமுள்ள விசேஷங்களுக்கு சென்று வருவார்கள் !  

இந்த பிரமிடின் கட்டக்கடைசிக்கு முந்திய இடத்தில் தான் எண்ணாயிரப் பிராமணர்கள் வைக்கப்பட்டுள்ளனர் ! மற்ற மேலடுக்கு பிராமணர்கள் இவர்களோடு திருமண பந்தம் போன்று கொடுக்கல் வாங்கல்  வைத்துக் கொள்ள மாட்டர்கள் !"ஓ  ! அஷ்டசகஸ்ரமா ! " என்று ஒரு இழுப்பு இழுப்பார்கள் !

இது 1940 ஆண்டு அனுபவம் ! 

இன்று நிலைமை மாறிவிட்டது !


 

1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அறியாத செய்தி ஐயா
நன்றி