Saturday, April 09, 2011

நூற்றி ஒன்றாவது இடுகை.....

நூற்றி ஒன்றாவது இடுகை.....
"செம்மொழியான தமிழ்மொழி" எனது நூறாவது இடுகை.2010ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தெதி வலை உலகத்தில் கால்வைத்தேன்.ஒருவருடம் ஆகவில்லை.நூறு இடுகைகள் முடிந்துவிட்டன
என்னை வலை உலகத்திற்கும் எனக்கு வலை உலகத்தையும் அறிமுகப்படுத்தியவர்கள் என் அருமை சாத்தூர் தொழர்கள் காமராஜும், மாதவராஜும் தான்.சாத்துரில் இருந்தவாரே எனக்கு "முகப்பு" ஈற்பாடு செய்தவர் தோழர் மாதவரஜ் . நாகபுரியில் உள்ள இந்திய அமைதி மையத்தின் இயக்குனர் Dr.ஜாண் செல்லதுரை அவர்கள் தட்டச்சே தெரியாத எனக்கு தமிழில் இடுகையிட ஏற்பாடு செய்து தந்தார்.
என்னுடைய முதல் இடுகைகு முதல் பின்னூட்டமிட்டவா நான் தொண்டனாக செயலாற்றிய அகில இந்திய இன்சூரன்சு ஊழியர் சங்க தலைவர்களில் ஒருவரான E.M .ஜோசஃப் அவர்களுக்கு என் நன்றி.
பத்திரிகை யாளர்கள், குமரேசன்,கணேஷ் மற்றும் S.V.V ஆகியொர் அளித்த உந்துதலுக்கு நன் மிகவும் கடமைப்பட்டவன். வெளிநாட்டிலிருந்து தோழர் ஹரிஹரன், அப்பாத்துரை பாரதசாரி ஆகியோர் விவாதங்களில் பங்கெடுத்து செழுமைபடுத்தினார்கள். தோழர் இக்பால்,கவிஞர் சிவகுமரன் ஆகியொரின் உற்சாகமான வரவேற்பு மறக்கமுடியாதவைகள்.
பதிவுலக் நண்பர்களே! உங்கள் அத்துணை பெரையும் பெயர் குறிப்பிட்டு எழுத ஆசைதான். முடியவில்லை.
உங்களிடம் ஒரு வேண்டுகேள் இந்த நூற்றி ஒன்றாவதுஇடுகைக்கான பின்னூட்டங்கள் என்னுடைய இடுகைகள் பற்றிய உங்கள் மதிபீடுகளாக இருக்கவேண்டும் என்று விருப்பப் படுகிறேன். அது என்னை மேலும் வளர்த்தெடுக்கும் என்பதால்---காஸ்யபன்

25 comments:

Rathnavel Natarajan said...

வாழ்த்துக்கள்.

க. சீ. சிவக்குமார் said...

தோழர்! வாழ்த்த வயதில்லாததால் மகிழ்வில் பங்கு கொள்கிறேன்.தேர்தலை ஒட்டிய மிகச் சமீபத்திய பதிவுகள் நன்றாக இருந்தன. முன்னம் எழுதியவைகளைப் படிக்கவில்லை. கடந்த ஐம்பது ஆண்டுகளின் அரசியல் நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ள, நல்ல ஞாபகத் திறன் உங்களுக்கு இருக்கிறது. அவற்றைத் தொடர்ந்து எழுதலாம். குமரியாரின் காக்காதேக்காம் நெடுஞ்செழியனின் ம தி மு க என நால்வர் அணி நாஞ்சிலார் பல்ட்டி என இப்போதைய ஞாபகத்தடத்தில் மறந்துபோன பலவற்றை நீங்கள் பொதிந்து வைப்பது வருங்காலத்தில் தமிழக வரலாறை கோப்பவர்களுக்கு பயனாய் விளையும் என நினைக்கிறேன்.
நான் பெங்களூரில் நலம் - சிவா

ராம்ஜி_யாஹூ said...

மிகவும் மகிழ்ச்சி.

நான் உங்களிடம் எதிர் பார்ப்பது, உங்கள் வலைப்பூவில் நீங்கள் பின்வரும் பொருட்கள் குறித்து கட்டுரைகள் எழுதலாம்.

இன்று ஊழியர்களிடையே தொழிற்சங்க, கூட்டுப் பேரம் பேசுதல் போன்றவை குறைந்து வருகின்றன. குறிப்பாக மென்பொருள், அயல் பணி ஒப்படைப்பு, வெளிநாட்டு நிறுவனத்தின் இந்தியத் துணை நிறுவனங்களில்.
அவை ஏற்படுவதற்கு ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும். கூட்டுப் பேரத்தால் (collective bargain) கிடைக்கும் நன்மைகள் / கிடைத்த நன்மைகள்/சம்பவங்கள் குறித்து எழுதலாம்.

இந்தியாவில்/தமிழகத்தில் இளைஞர்களிடியே ஏன் மார்க்சீய சிந்தனைகளுக்கு/கட்சிகளுக்கு ஈர்ப்பிணமி ஏற்படுவது எதனால்...

John Chelladurai said...

10 04 2011
அய்யா, வணக்கம்.
நூற்றைத் தாண்டி + 1 பதிவு செய்து நீங்கள் இன்னும் சிந்தனையாலும் செயலாலும் இளைஞரே என்பதையும் ஆணித்தரமாக பதிவு செய்து விட்டீர்கள்.

ஒவ்வொரு பதிவும் தரமான வரலாற்றுப் பதிவாக தரப்பட்டுள்ளது, இளைய தலைமுறைக்கு நல்ல விருந்து.

தங்களது பதிவில் அடியேன் பெயரையும் தந்துள்ளது, அணில் முதுகு கோடாக என் கண்களுக்குப் பட்டது. நூற்றியோரு நன்றிகள்.

இந்த இலக்கிய மாரத்தானில் தங்களது 1001ம் பதிவு, உங்களது எழுத்துப் பணியின் மகுடமாய் வெளிவரும் நன்னாளை ஆவலுடன் எதிர்பார்க்கும்
தேஜா

John Chelladurai said...

Ayya I have two blogs. one is

johnchelladurai.blogspot.com

and the other is

indiapeacecentre.blogspot.com

pl. visit the second one, I have posted some stories (interfaith).

மோகன்ஜி said...

'சதமானம் பவதி' என்று வாழ்த்த உங்களை விட மூத்தவர் யாரும் பதிவுலகில் இருக்கிறார்களா? இந்த சந்தர்பத்தில் உங்கள் ஆசிகளை எங்களுக்குத் தாருங்கள்.
காலத்தின் சுழற்சியில் பதிவாகாது விடுபட்டுப் போன பல நிகழ்வுகளை உங்கள் வலையில் பதிவிட்டிருக்கிறீர்கள். உங்கள் கருத்துக்களைக் கூட ஒளிவு மறைவின்றி சொல்லும் திண்மை உங்கள் பலம். பொழுதுபோக்கு மேடையாக்காமல் வலையை அரிதான தகவல்களுக்காய் பயன் படுத்தும்
உங்கள் நற்பணி தொடரட்டும் எனும் வேண்டுகோளுடன் மோகன்ஜி.

இராஜராஜேஸ்வரி said...

வாழ்த்துக்கள்.

RVS said...

தலைவரே! வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். தேர்தல் ஜுரத்தில் இப்படித்தான் வாழ்த்து வருகிறது. பலதரப்பட்ட துறைகளில் நுண்ணிய விஷயங்கள் சொல்கிறீர்கள். நன்றி. ;-))

hariharan said...

வாழ்த்துக்கள் தோழரே, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அரசியல் தத்துவம் மதம் கலை என்று பல தலைப்புகளில் வகுப்பு எடுத்தமாதிரி இருக்கிறது. இன்னும் நிறைய விவரனைகளை பகிரவேண்டுகிறோம்.

சிவகுமாரன் said...

அய்யா. வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். தங்கள் வலைத்தளத்திற்கு எப்படி வந்தேன் என்று நினைவில்லை. என் வலைத்தளத்திற்கு வருகைதரச் சொல்லி நான் முதன்முதலில் மின்னஞ்சல் அனுப்பியது தங்களுக்குத் தான். மிக நீண்ட வாழ்த்துரை அனுப்பியிருந்தீர்கள். வாழ்நாளில் மறக்க முடியாத என் கவிதைகளின் ரசிகனாகி விட்டீர்கள் நீங்கள். ஒவ்வொரு கவிதை இடுகை இட்டதும் தங்களின் பின்னூட்டம் வந்திருக்கிறதா என்று எதிர்பார்ப்பேன். காலஞ்சென்ற என் சித்தப்பா கவிஞர் சுந்தரபாரதி தங்களைப் போன்றே கம்யூனிச சிந்தனை உள்ளவர். தங்களின் இடுகைகளையும் பின்னூட்டங்களையும் படிக்கும் போதெல்லாம் என் சித்தப்பாவை நினைத்துக் கொள்வேன்.

தங்கள் இடுகைகள் வலையுலகின் வரம்.

பின்னூட்டங்கள் எங்கள் படைப்புகளுக்கு உரம்.

செ.சரவணக்குமார் said...

உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். உங்கள் அனுபவங்கள் வழியாக நீங்கள் கடந்துவந்த தருணங்கள், போராட்டங்கள், இலக்கியத் திறனாய்வுகள், இலக்கியவாதிகளுடனான உங்கள் நேரடி அனுபவங்கள் (குறிப்பாக தனுஷ்கோடி ராமசாமி போன்றவர்கள்) போன்றவை நான் தங்களிடம் எதிர்பார்ப்பவைகளாகும்.

இதுவரை வாசித்தவரையில் உங்களின் பல கட்டுரைகள் என்னை கவர்ந்திருக்கின்றன.

கட்டுரைகளை பத்தி பிரித்து வெளியிட்டால் வாசிப்பதற்கு நன்றாக இருக்கும்.

வாழ்த்தும் அளவிற்கு வயதோ அனுபவமோ எனக்கில்லை. வணங்கி மகிழ்கிறேன் ஐயா.

தொடர்ந்து நிறைய எழுதவேண்டும் என்பது என் வேண்டுகோள்.

அப்பாதுரை said...

பாராட்டுக்கள். தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

உங்கள் எழுத்தைப் பற்றி சில கருத்துக்கள்:
- வயதின் காரணமாக மட்டுமில்லை, உங்கள் உழைப்பு மற்றும் ஈடுபாடுகளின் காரணமாகவும்.. தெரிந்து கொள்ள சாத்தியமே இல்லாத நிறைய விவரங்கள்.. சினிமாவிலிருந்து அரசியல் வரை.. நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. இது தொடர விரும்புகிறென்

- துணிச்சலான கருத்துக்கள், சிறுகதையாகட்டும் அரசியலாகட்டும் எழுதுகிறீர்கள். குந்தி கதை ஆணி அடித்தாற் போல் பதிந்திருக்கிறது.. ஜென்ரல மேனெக் ஷா-இந்திரா காந்தி உரையாடல்.. எம்பிஸ்ரீ இசை உரையாடல்.. இடுகைகளைப் புரட்டாமலே சட்டென்று இன்னும் பல நினைவுக்கு வருகின்றன. இது போன்ற சுவற்றில் மடாரென்று மண்டையை முட்டித்தள்ளியது போன்ற உணர்வு தரும் கதைகள் விவரங்களை மிகவும் ரசித்தேன். தொடர விரும்புகிறேன்.

- இது வேண்டுகோள்: இந்திய கம்யூனிசக் கட்சிகளைப் பற்றி ஒன்றும் சரியாகத் தெரியாமலே இருந்து விட்டேன். உருப்படாத ஜால்ரா என்ற எண்ணமே இதுவரை கம்யூனிசக் கட்சிகள் பற்றி இருந்து வந்தது.. உங்கள் பதிவுகள் இந்திய மார்க்சிச கட்சிகள் பற்றிக் கொஞ்சம் அறிய வைத்திருக்கின்றன. உங்கள் அனுபவங்களை வைத்து இந்திய அரசியலில் இது போன்ற கட்சிகள் ஏன் வளரவேயில்லை என்று அறிய விரும்புகிறேன்.. நேரம் கிடைக்கும் பொழுது அரசியல் பற்றி எழுதுங்கள். ராஜாக்கள் ஆட்சி, வெள்ளைக்காரன் ஆட்சி, தொடர்ந்து குடும்ப ஆட்சி - இதுவே இந்தியாவின் தலையெழுத்தா அல்லது வேறு ஏதாவது அடிப்படைத் தவறைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோமா என்று அறிய ஆவல். வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கிறேன் என்றாலும் வேடிக்கை பார்க்கக் கூட மனம் வரவில்லை பலநேரம்.

இன்னொரு நூறு அதற்குப்பின் இன்னொரு நூறு.. எல்லாமே சுவடுகள் தான். வாழ்த்துக்கள்.

kumaresan said...

வரலாற்றை நினைவுகூர்வதில் உங்கள் வழிமுறை தனித்துவமானது. வெறும் நிகழ்வுப் பதிவுகளாக அல்லாமல் தத்துவார்த்தத் தளமும் அரசியல் பார்வையும் சமுதாய அக்கறையும் உங்களது கடந்த காலப் பதிவுகளின் ஒவ்வொரு வரியிலும் பொதிந்திருக்கின்றன.

கதை எழுதுகையில் அதைச் செதுக்கிச் செதுக்கி இறுதிப்பரிணாமத்துக்குக் கொண்டுவருவது எப்படி என்று நீங்கள் சொன்னது எனக்கு இன்றளவும் ஒரு அரிச்சுவடி.

அடுத்து உங்கள் 1001வது இடுகையில் தனிப்பட்ட பின்னூட்டமிடக் காத்திருக்கிறேன்.
-அசாக்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

வாழ்த்த வயது தேவையில்லை. வாயும் மனமும் இருந்தால் போதும்.ஆசீர்வதிக்கத்தான் வயது வேண்டும்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் காஸ்யபன் சார்.

உங்களின் எல்லாக் கட்டுரைகளின்-கதைகளின் கச்சாப் பொருட்களும் புதிதானவை. புதிய கோணம் கொண்டவை.

குறிப்பாக ரயில்-கடல் மாதிரிக் கட்டுரைகளும் மொழி-இதிகாசம்-அரசியல் குறித்த கட்டுரைகளும் புதிய பார்வைகளையும் வரலாற்றின் அவசியத்தையும் பகிர்ந்தன.

உங்கள் எழுத்துக்களில் துவக்கம் முதல் நூறு வரை கருத்துப்பிழை எதுவும் இல்லை.ஆனால் எழுத்துப்பிழை மட்டும் சரிசெய்யப்படுமானால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

இன்னும் இன்னும் நிறைய எழுதுங்கள்.படிக்கக் கொடுத்துவைத்திருக்கிறோம்.

veligalukkuappaal said...

என் அன்பிற்குரிய மூத்த தோழர் காஷ்யபன் அவர்களுக்கு,
வணக்கமும் நல்வாழ்த்துக்களும். தொலைபேசியில் சொன்னதுதான்,,,இன்னும் பல நூறு இடுகைகள் வருக! உங்கள் எழுத்துக்கள் வரலாற்றின் சுவடுகள்! சில நேரம் பொறாமையாகவும் இருக்குது, ஒரு சில வருடங்கள் முன்னால் நடந்த நிகழ்வுகளே எனக்கு மறந்துபோகும்போது, அரை நூற்றாண்டுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளை நேற்று நடந்ததுபோல சாதாரணமாக சொல்லிவிட்டு போகின்றீர்கள்! நீங்கள் எங்களுக்கு வேண்டும், நீங்கள் அனுபவக்கடல். தொடர்ந்து எழுதுங்கள். என் போன்ற சின்னப்பிள்ளைகளையும் நீங்கள் நன்றி தெரிவிக்கின்ற பட்டியலில் வைப்பதை 'தம்பிகளா! உருப்படியா எதாவது செய்ங்கப்பா!" என்று உரிமையுடன் சொல்வதாகவே நான் எடுத்துக் கொள்கின்றேன். உங்களுக்கும் உங்கள் அன்பு மனைவியார் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்! தமிழ்நாடு மட்டும் அல்ல, நாக்பூரும் உங்களால் பெருமை பெற்றது! வாழ்க இன்னும் பல்லாண்டு!
இக்பால்

மாதவராஜ் said...

சந்தோஷமாக இருக்கிறது. எல்லாவற்றையும் படித்திராவிட்டாலும், ஓரளவுக்குப் படித்தே வந்திருக்கிறேன். உங்கள் எழுத்துக்களில் ஒரு நிதானம் எப்போதும் இருக்கும். ஆற, அமரப் பேசுவதாக இருந்தாலும், அவை அழுத்தம் கொண்டவையாக இருக்கும்.நினைவுகளில் இருந்து எடுத்துத் தந்த எவ்வளவோ இருக்கின்றன. தொடருங்கள் எங்கள் அருமைத் தோழரே!

தமிழ்வாசி பிரகாஷ் said...

உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
பார்க்கவும்: புதன் படைப்புகளின் சரமாக

பாரதசாரி said...

ஒரு இடுகையில் அரசியல், மற்றொன்றில் நாடகம், அடுத்ததோ அறிவியல் , அவ்வப்போது திரைப்படம், பல அர்த்தமுள்ள சிறுகதைகள்... தொடர்க உங்கள் செம்மையான பணி...
இந்தப் பதிவில் என் பெயரைக் குறிப்பிட்டதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
உங்களிடமிருந்து ஒரு பிண்ணுட்டம் வந்தாலே தொடர்ந்து எழுத ஆவல் வரும், பதிவில் குறிப்பிட்டதால், சோம்பேரி எழுது என்று உரிமையுடன் சொல்வதாக பெருமையாக உணர்கிறேன்.

பாரதசாரி said...

"அசடு" கதையை பதிவிட இயலுமா?

kashyapan said...

பாரதசாரி அவர்களே! "அசடு" நாவலை எழுதியவர் காச்யபன். அவரும் என்னைப்போல் மதுரை எல்.ஐ.சி. அலுவலகத்தில் பணியாற்றியவர் தான். பின்னர் திருவனந்தபுரம் சென்று விட்டார். இன்னுமொரு காஷ்யபன் விகடனில் எழுதிவந்தார். நான் காஸ்யபன். செம்மலர், தாமரை இதழ்களில் எழுதி வந்தவன். இந்த பெயர் குழப்பம் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. வாழ்த்துக்கள்---காஸ்யபன்.

பாரதசாரி said...

எனது முதல் சிறுகதையான "சந்துரு"வின் தொடக்கத்தில் அசடு பற்றி எழுதினேன். நான் அசட்டுத்தனமாக எழுத காரணமே அந்த அசடு தான் :). என் அறியாமையை மறுபடியும் பொருத்தற்கு நன்றி

பாரதசாரி said...
This comment has been removed by the author.
பாரதசாரி said...

செம்மலரை முதன் முதலாக நான் நுகர்ந்தது (கிட்ட தட்ட)1999 ஆம் ஆண்டு , சிலம்பம் சார்பாக திரு ஆல்பர்ட் நடத்திய பின்னவீனத்துவ கருத்தரங்கில் நான் பங்கேற்றபோது(பராக் பார்த்த போது). திரு ராஜன் குறை உட்கார்ந்த படியே பேசியதும், சாரு நிவேதிதா அவர்கள் TVS Champஇல் வந்து எல்லா எழுத்தாளர்களுக்கும் பெயர் வைத்து(கடைசியில் தன்னை கமல ஹாஸன் என்றும் சொல்லிக்கொண்டார்) , சு சமுத்திரம் கடலென பொங்கியதும், கோனங்கி தனது கதையின் திறனாய்வாளர்(திருச்சி ரா முத்து குமார்) பேச்சை கேட்டு விம்மியதும், ஆ மார்க்ஸ் அவர்களின் உரையும்,ப்ரேதா ப்ரேதன் - வளர்மதி விவாதம், பேராசிரியர் நோயல் ஹிருதயராஜ் அவர்களது நச்சு தயாரிப்பு உரையும் அதில் பதிவாகி இருந்தது(என்று நினைவு :)).

S.Raman, Vellore said...

உங்களது 101 ஆவது இடுகைக்கு எனது வாழ்த்துக்கள். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் ஒப்பற்ற தலைவர் தோழர் சரோஜ்
சவுத்ரி 1998 ல் ஹைதராபாத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில்தான் இறுதியாக பங்கேற்றார். அம்மாநாட்டில் அவர் தனது உரையை நிறைவு
செய்கின்றபோது " படியுங்கள், படியுங்கள், வரலாற்றை படியுங்கள்,
சமூக அறிவியலைப் படியுங்கள்" என்றுதான் கூறி நிறைவு செய்தார்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மற்றுமொரு மகத்தான
தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் அவர்களும் வாய்ப்பு கிடைக்கும்
போதெல்லாம் வரலாற்றை படிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திக் கொண்டே இருப்பார்.


அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மூத்த மாணவரான தங்களது வலைப்பக்கம் வரலாற்றை நினைவு படுத்தும் பணியை அற்புதமாக செய்து வருகின்றது. ஆட்சியாளர்களும் ஆளும் வர்க்கமும் மறைக்க நினைகிற, மறக்க முயல்கின்ற பல வரலாற்றுச சம்பவங்களை பதிவு செய்யும் உங்கள் பணி மேலும் சிறக்கட்டும். என்று அதே பள்ளியின் இளைய மாணவன் வாழ்த்துகின்றேன்.

காமராஜ் said...

அன்பிற்கினிய எங்கள் மூத்த தோழர் காஸ்யபனுக்கு அநேக வணக்கங்கள்.

முதலில் என்னை மன்னிக்கனும். உங்களின் அழைப்பிற்குப்பின்னரும் இவ்வளவுகாலம் தாமதித்து உங்களுக்கு பின்னூட்டம் எழுதுவதற்கு என்னைப்பொறுத்துத்தான் ஆகவேண்டும்.உங்கள் நூறு பதிவுக்குமான விமர்சனமாக என்னால் எதுவும் சொல்ல இயலாது. காரணம் எல்லாவற்றையும் படித்திருக்க வாய்ப்பில்லை.ஆனால் காஸ்யபன் என்கிற ஒரு சமூகச்சிந்தனையாளரை,ஒரு தொழிற்சங்க வாதியை, ஒருசிறுகதை எழுத்தாளரை அருகிருந்து பார்க்கவிட்டாலும் எட்டத்திலிருந்து பார்த்திருக்கிறேன். கோட்டையிலே எனது கொடி பறக்காவிட்டாலும் என் வீட்டுக்கூரையிலாவது பறக்கவிடுவேன் என்கிற ஈடுபாட்டோடு இயங்கும் லட்சோப லட்சம் இடது சாரிகளில் இருந்து ஒரு முதிர்ந்தவர் நீங்கள். போராடமல் காலந்தள்ளுவோர்க்கு போட்டதுதான் கிடைக்கும் போராடுவோர்க்கு கேட்டது கிடைக்கும்:தங்கம் சாதிக்காதைச் சங்கம் சாதிக்கும்:ஒன்றே வாளின் சட்டம் அது கூராயிருந்தால் வெட்டும் என்கிற வார்த்தை நெருப்புகளை ஊழியர்களுக்குள் விதைத்த முன்னத்தி ஏர்களில் ஒருவர். பெரும்பான்மையினரின் அன்பைக்கூட வாங்கிச் செரிக்க முடியாத பாவப்பட்ட சிறுபாண்மை மக்களுக்காக சிறுகதை தந்த மிகச்சிறந்த படைப்பாளி.செம்மலர் இதழின்ஆசிரியர்களுள் ஒருவர் இப்படிப்பட்ட பன்முக அனுபவம் செரிந்துகிடக்கும் காலப்போக்கிஷம் என்றே சொல்லலாம்.
அப்படிப்பட்ட போக்கிஷ நினைவுகளைச் சமூகம் மறந்து போன நிகழ்வுகளை சின்ன சின்ன அளவுகளில் மீளத்தருகிற உங்களின் பாங்கும் பங்கும் இந்த வலைக்கு கிடைத்த கொடை.

குறிப்பாக பழய்ய சினிமா: சினிமா சார்ந்த செய்திகள்,பழய்ய அரசியல் செய்திகள்: அந்தச்செய்திகள் சார்ந்த விமர்சனம் ஆகியவை அரிதானவை. உங்களின் அனுபவம் எழுத்தாக தொடர்ந்து வரவேண்டும் என்கிற கோரிக்கையும் வாழ்த்துவதற்கான அன்பும் என்னிடம் இருக்கிறது.