Sunday, October 09, 2016

மீண்டும் தஞ்சையில் ,

நாடக விழா .....!!!
"வரும் 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதியிலிருந்து நான்கு நாட்கள் தஞ்சையில் தென்மண்டல நாடக விழா நடத்த தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள்  சங்கம்முடிவு செய்துள்ளது. அதற்கான 105 பேர்கொண்ட வரவேற்புக்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது "என்று தலைவர் தமிழ்செல்வன் அறிவித்ததாக திண்டுக்கல் மணி இரவு 10மணிக்கு மேல்நேற்று பதிவிட்டிருந்தார்.

இனிக்கும்நினைவுகளோடு 40 ஆண்டுகளுக்குமுன்னால் இதே தஞ்சையில் 1977ம் ஆண்டு த.மு.ஏ.ச நடத்திய  நாடகவிழா  இரவு முழு வதும் கண்முன் விரிய மகிழ்ந்திருந்தேன்.

கோமல் சுவாமிநாதனின் மக்கள் தாரிணி அவர்கள் எங்களுக்கும்பங்கு உண்டா என்று விசாரித்ததும் தெரிந்தது.

அன்று எஸ்.வி .சகஸ்ரநாமம், கர்நாடக குழு  சமுதாயா வின் தலைவர் பிரசன்னா ,கேரளத்து பணிக்கர் ஆகியோர் வந்து சிறப்பு செய்தனர்.

தமிழகம் முழுவதிலிமிருந்து எழுத்தாளர்களும்.கலைஞர்களும் வந்திருந்தனர். சென்னைக்கலைக்குழு வாடகை வீ டு  எனவிதி நாடகம்  போட்டதாக நினைவு."இசை சிற்பம் " என்ற புதிய வடிவத்தை தந்தவர்கள் அவர்கள். அவர்களுடைய "ஏகலைவன் பெருவிரல் " மிக முக்கியமான ஒன்று.

தணிக்கை செல்வன்  "கம்சவதம் "என்ற நாடகத்தை தந்தார். புராணத்திலிருந்து ஒரு துளியை எடுத்துக்கொண்டு தற்கால அரசியலை விமரிசிக்கும் architypal  form  அது. 

பரம்பை செல்வன் , நடித்து இயக்கிய நாடகத்தில் ஜேம்சன்,கந்தர்வன் ஆகியோர் நடித்தனர்.40நிமிடங்கள் நடக்கும்நாடகம் வசனமே இல்லாமல்ல் முழுவதும் mime முறையிலரங்கேற்றப்பட்டது.விழாவில் பாராட்டப்பட்ட நாடகங்களில் இதுவுமொன்று.

"மதுரை பீப்பிள்ஸ் தியேட்டர்ஸ்'குழுவினர் ஜெயந்தனின் "நினைக்கப்படும் "என்ற   முழு நீள நாடகத்தை அரங்கேற்றினர். எல்.ஐ.சி ஊழியர் சங்க தலைவர் ராஜ குண சேகர் இதில்  நடித்து இயக்கியிருந்தார். சிறப்பான வரவேற்பை பெற்ற நாடகம் இது.

கையூர் தியாகிகளின் போராட்டத்தை,கன்னட   எழுத்தாளர் நிரஞ்சனா "சிராஸ் ஸ்மரனே "  நாவலாக எழுதியிருந்தார் அதனை பி ஆர் பரமேஸ்வரன் அவர்கள் "நினைவுகள் அழிவதில்லை " என்ற ஒப்பற்ற நாவலாக மொழிபெயர்த்து இருந்தார்.வெல்லூரிலிருந்து  வந்த நாடகக் குழுவினர் இதனை நாடகமாக்கி அரங்கேற்றினர் .இதில் நடித்த இளம் வாலிபர்கள் பின்னாளில் பலம் பொருந்திய அரசு ஊழியர் சங்கத்தை கட்டி வளர்த்தவர்களாவர். எல்.ஐ.சி ஊழியர் சங்க தலைவர்கள் ஜெகதீசனும், செல்வராஜும் இந்த குழுவின் பின் பலமாக நின்றனர். விழாவின்  சிறப்பான நாடகமாக இது பாராட்டுப்பெற்றது.

மாசுகோ ஆர்ட் தியேட்டரையும், மாற்ற நாட்டு நாடக மேடைகளைப்பற்றியும்  எஸ்.வி சகஸ்ரநாமம் தன பேசில் குறிப்பிட்டார்

அபத்த நாடகத்திலிருந்து நாடகங்களின் பல்வறு வடிவங்கள்பற்றி சமுதாயாவின் பிரசன்ன விளக்கினார்.

"திரவமாக     இருக்கும் வரைதான் கோழி முட்டை வடிவம் கொள்ளும். திடமாகி விட்டால் ஓட்டை உடைத்துக் கொண்டு குஞ்சாக வெளியே வந்து விடும் " என்று தர்க்கவியலோடு இணைத்து தொழார் கே.ரமணி "உள்ளடக்கம் தான் வடிவத்தை தீர்மானிக்கும் "என்று கருத்தரங்கில் பேசியது இன்றும்காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

தென் மண்டல நாடக விழா வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!. 2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தஞ்சையில் நாடக விழா
மகிழ்ந்தேன் ஐயா
நன்றி

பரிவை சே.குமார் said...

விழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...