Wednesday, April 19, 2017






எல்லாப்புகழும் 


த.மு.எ ச வுக்கே ...!!!






தோழர் மாதவ ராஜ் எழுதிய writ up   படித்தேன். இதைவிட நேர்த்தியாக,சிறப்பாக, சுருக்கமாக அந்த படத்தை பற்றி யாராலும் எழுதிவிட முடியாது.ஆம் ! "கக்கூஸ் " படம் பற்றிய  அவரது கட்டுரை நெஞ்சை கிழித்து தோரணம் போட்டுவிட்டது.


இந்த படத்தை ரஜனி பார்த்திருப்பாரா ?


"வாய்ப்பில்லை."


கமல் ?


"no chance  "

அந்த இளம் புயல் தனுஷ்  ?


"ஊஹூம் "


ஆனால் சாத்தூர்,நகரத்து புழுதியில் வாழும் மக்கள் பார்த்திருக்கிறார்கள்.விருதுநகர், நெல்லை,கோவை , மக்கள் பார்த்திருக்கிறார்கள்.மதுரை,திருவண்ணாமலை,சென்னை ஆகிய பகுதி மக்கள் பார்த்திருக்கிறார்கள். AC  தியேட்டரில் அல்ல .தெருக்களில், திருமணமண்டபங்களில் பார்த்திருக்கிறார்கள்.

இந்த சமயத்தில் எனக்கு நினைவு தட்டுகிறது கிட்டத்தட்ட 42 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் . மதுரையயில் நடந்தது.

பெரியார்  பஸ்நிலையம் அப்போது குப்பை மேடாக இருந்தது.அங்கு தான் திடீர் நகர் தோன்றியது. எனோதானோக்கள்  ,எடுபிடிகள்,ஏதுமற்றவர்கள் அங்கு குடிசை போட்டு வாழ்ந்தார்கள்...அங்குதான் ஒருகுடிசையில் போக்குவரத்து தொழிலாளர்களும் ,மின்வாரிய தொழிலாளர்களும் தங்கள் சங்கத்தை வைத்திருந்தார்கள்.

அந்த சங்கத்தில் தான் தமிழகத்தின் புகழ்பெற்ற  எழுத்தாளர்கள் கு.சின்னப்ப பாரதியிலிருந்து,தணிக்கைசெல்வன் வரை 16 பேர் கூடினார்கள். அவர்களின் நடுநாயகமாக விற்றிருந்தார் அந்த முதுபெரும் எழுத்தாளர் கே.முத்தையா  அவர்கள்.

"நாம் எழுத்தாளர்கள் மட்டுமல்ல. சமூகப்போராளிகளும் கூட .வர்க்கப்பபோராட்டத்தின் முன்னணி படைவீரர்கள். அந்த பிரும்மாண்டமான போருக்கு முன் எதிராளி களின் களத்தில் புகுந்து அந்த மக்களை நம் பக்கம் திருப்பும் முன்னணி நாம் . முதல் தாக்குதலும் முதல் பலியும் நாம் தான் எதிரிகள் எங்கு ஒளிந்திருக்கிறார்கள்,அவர்களின் கண்ணி   வெடிகள் எங்குள்ளன என்பதை கண்டறியும் பணியை செய்ப்பவர்கள் நாம் . நாம் இப்படி உதிரியாகஇருக்க கூடாது நமக்கு என்று ஒரு அமைப்பை கட்டி அமைக்க வேண்டும் " என்பது அவர்களின் கூ ட்ட முடிவாகியது .கே.முத்தையா தலைமையில் அமைப்பை உருவாக்க முடிவு செய்தார்கள் அந்த அமைப்புதான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்றாகியது.

"கக்கூஸ்" திரைப்படத்தை தமிழகம் முழுவதும் கொண்டு செல்கிறவர்கள் அவர்கள் தான்.

எனக்கு வருத்தம் தான். இந்த படத்தை பார்க்கமுடியாமல் இருக்கிறேனே !


ஆனாலும் நான் பாக்கியசாலி !


ஆம் ! 42 வருடத்திற்கு முன் த.மு,.எ ச  வை ஆரம்பிக்க முடிவெடுத்த அந்த 16 பேரில் நானும் ஒருவன் என்பது  எனக்கு கிடைத்த \பெரும் பாக்கியம்  அல்லவா !!! 


1 comments:

dpirsm said...

thanks for sharing