சிறு கதை
எங்கே அவர்கள்?
(காஸ்யபன்)
கேதன் தேசாயிடமிருந்து எண்ணூறு கோடி ரூபாய் ரொக்கம்-கிலோ கணக்கில் தங்கம் -பேப்பரை மூடி வைத்தேன். இவன்லாம் மனுசன்தானா? ச்சீ - இந்தியா என்ன ஆகப் போகிறது?
டைம் ஆப் இந்தியா வை எடுத்தேன். மாதுரி குப்தா கைது என்று தலைப்பு. யார் மீது கோபம்? எதற் காக? குளத்தின் மீது கோபம் என்றால்... என்ன திமிர்? இவர்களை என்ன செய்யலாம்?
நேற்று இரவு சினிமா பார்த்தேன். அயர்ச்சியாக இருக்கிறது. நிஜாம் ஆட்சியில் ஜமீன்தார்கள் ஜனங்களை கொடுமைப்படுத்தியது பற்றித்தான் படம். இந்து ஜமீன் தார், முஸ்லீம் ஜமீன்தார் என்று பேதமில்லாமல் கொடு மைகளைச் செய்துள்ளது சித்தரிக்கப்பட்டிருந்தது. மிகச் சிறந்த நடிகர்கள், அம்ரிஷ்பூரி, கிரிஷ்கார்நாட், குல்பூஷன் கர்பந்தா, நசுருதீன் ஷா, சப்னா ஆமி- இரவு படத்தின் பாதிப்பால் தூக்கம் வர வெகுநேரமாகி விட்டது. படத்தின் பெயர் அங்குர்.
பேப்பரை படிக்க முடியவில்லை. கண் இமை கனத் தது, படத்தின் இயக்குனர் -ஷ்யாம் பெனகல்.
------------------------------
எழுபது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு நினைவு இருக்கும். சுதந்திரம் கிடைத்தவுடன் வெளியான பத்து ரூபாய் தாளில் பி. ராமாராவ் என்று கையெழுத்திட்டிருக் கும். அவர்தான் ரிசர்வ் வங்கியின் கவர்னர்.ஐ.சி.எ.ஸ்அதிகாரி.
அவருடைய சகோதரர் நரசிங்கராவ் சர்வதேச நீதிமன்றத் தில் நீதிபதியாகப் பணியாற்றுபவர். ஐ.சி.எ.ஸ் அதிகாரி.
மூன்றாவது சகோதரர் நரகரிராவ், பிரிட்டிஷ் இந்தியா வின் தணிக்கை அதிகாரி. அவரும் ஐ.சி.எ.ஸ் தான்.
மூவருமே பெனகல் குடும்பம்.
------------------------
ஸ்டுடிபேக்கர் காரில் மூன்று பேரும் பாராளுமன்ற மைய மண்ட பத்துக்குச் சென்று கொண்டிருக் கிறார்கள். ஆகட் 14 இரவு பத்து மணி. பன்னிரெண்டு மணிக்கு பிரிட்டனின் கொடி இறங்கி இந்தி யாவின் மூவர்ணக் கொடி ஏறப் போகிறது. பண்டித ஜவஹர்லால் நேரு பிரதமராகிறார். இந்திய மக் கள் ஒவ்வொருவரும் தாங்களே பிரதமராகப் போவதாக நினைத்து விடிய விடியக் காத்திருக்கிறார்கள்.
-----------------------
மூன்று சகோதரர்களும் மூத்த அதிகாரிகள். பதவியேற்பு நிகழ்ச் சிக்கு அவர்கள் அழைக்கப்பட்டி ருந்தனர். பன்னிரெண்டு மணி, பண் டித நேரு எழுந்தார். உலகம் முழு வதும் தூங்கிக் கொண்டிருக்கும் போது இந்தியா விழித்தெழுகிறது என்ற அவருடைய புகழ் பெற்ற உரையைத் துவக்கினார்.
---------------------
"டிரைவர் வண்டியை நிறுத்து" என்றார் ராமாராவ். போட் கிளப் அருகில் ஸ்டுடிபேக்கர் வண்டி நின்றது. "மணி மூன்றாகப் போகி றது அண்ணா" என்றார் நரசிங்கம் ஹரி எதுவும் பேசவில்லை.
விலை உயர்ந்த மதுவை ஊற் றிய கிண்ணத்தோடு வெளியே இரு வரும் வந்தார்கள்.
குளிர்ந்த காற்று இதமாக வீசி யது.
"நேரு பிரதமர் என்றதும் வெளி நாட்டில் என்ன பேசிக் கொள் கிறார்கள்," என்று கேட்டார் ராமாராவ்.
"சோவியத் பிளாக்குக்கு ரொம்ப சந்தோஷம் அண்ணா", என்றார் நரசிங்கம்.
"பிரிட்டன், பிரான்சு, அமெ ரிக்கா ஆகியவை கொஞ்சம் தயங்கியே நேருவை ஆதரிக்கின்றன" என்று அவர் தொடர்ந்தார்.
"ஏன் தயக்கம்?"
"மெள்ள மெள்ள நேரு இந்தியாவை ஒரு சோசலிச நாடாக்கி விடுவாரோ என்று பயப்படுகிறார்கள்".
"நேரு அப்படிச் செய்ய மாட்டார்."
"பின்?"
"நடுநிலை வகிப்பார்" என்று கூறிய ராமா ராவ், "ஹரி! என்னப்பா வாயைத் திறக்கவே மாட்டேங்கற," என்றார்.
"ஹரி டல் லாத்தான் இருந்தான். விழா வில் ரொம்ப சீரியசாத்தான் இருந்தான்" என்றார் நரசிங்கம்.
ஹரிக்கு விழா நிகழ்ச்சிகளில் ஏதோ குறை. இருந்தது போல் பட்டது. என்ன குறை? எங்கே குறை? ஹரியின் மனது அல்லாடியது.
-----------------------
ஹரியின் வீட்டருகே கார் வந்ததும் ஹரி இறங்கிக் கொண்டார்". பை ஹரி!" ராமாராவ் விடை பெற்றார்.
"ஒரு நிமிடம் அண்ணா!"
"என்னப்பா?"
"பி.வி. கேஸ்கர் தெரியும்லயா?"
"ஆமா"
"பதவி ஏற்பு நிகழ்ச்சிய ஆவணப்படமா எடுத்திருப்பாங்க இல்லை?"
"ம்ம்"
"அந்த லூப் மட்டும் ஒரு காப்பி வாங்கி தருவியா?"
"எதுக்கு?"
"மனசுல ஏதோ நெருடல். அத பாத்தா தெளிஞ்சுடும்," என்றார் ஹரி.
"உன் தணிக்கைப் புத்தி உன்னை விட்டுப் போகாதே! "இடை மறித்தார் நரசிங்கம்
"நான் ஐ.சி .எஸ்தான். இந்தியனும் கூட", என்று ஹரி பதிலளித்தார்
-------------------------------.
ஆகஸ்ட் 18ம் தேதி நரஹரிராவ் அவர் வீட்டில் அந்த ஆவணப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். தினம் இது தான் வேலை. எதுவும் புலப்படவில்லை. ஒரு மாதம் ஆகி விட்டது. செப்டம்பர் 2ம் தேதி படத்தை திருப்பி அனுப்பிவிட்டார். இருந்தாலும் மனது கேட்கவில்லை.
பழைய பத்திரிகைகளை புரட்டிக் கொண் டிருந்தார். ஆகட் 15ம் தேதி பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக சுதந்திர தின செய்திகள்தான். காந்தி ஏன் கலந்துகொள்ளவில்லை என்று கேள்வியெழுப்பிய பல பத்திரிகைகளில் கட்டுரைகள் வந்திருந்தன.
டாம்மொரேஸ், 14-ம் தேதி காலை 8 மணியிலிருந்து ஒவ்வொரு மணி நேரமும் பண்டித நேரு என்ன செய்து கொண்டிருந்தார் என்று பட்டியலிட்டிருந்தார்.
காலை 8 மணி சர்தார் பட்டேலுடன் காலை உணவு,
காலை 9 மணி இடைக்கால அமைச்ச ரவைக் கூட்டம்,
காலை 10 மணி இடைக்கால அமைச் சரவை ராஜினாமா செய்யும் கடிதம் தயாரிக் கப்பட்டது.
11 மணி ராஜினாமா கடிதத்தை கொடுக்க நேருஜி புறப்பட்டார்.
1 மணி மதிய உணவு,
2மணி காங்கிர தலைவர்களோடு ஆலோசனை,
5 மணி படேலுடன் தீவிர ஆலோசனை,
-------------------------------------
செப்டம்பர் 6-ம் தேதி காலை பம்பாயி லிருந்து ராமாராவ் எட்டு மணிக்கு பேசினார்.
"ஹரி! பேப்ரை பாத்தியா?"
"இந்துஸ்தான் டைம்தானே?"
"ஆமா எப்படி வெளில வந்தது"
"அவர்களுக்கு உள்ள ஆளிருக்கலாம்"
சுதந்திர பாரதத்தின் முதல் பிரதமர் பண்டித நேருஜிக்கு தணிக்கை அதிகாரி நரஹரிராவ் எழுதிய கடிதம் வெளியாகி இருந்தது.
மதிப்பிற்குரிய பிரதமருக்கு!
தணிக்கை அதிகாரி நரஹரிராவ் அறிவுறுத் தும் கடிதம்.
ஐயா! தாங்கள் ஆகஸ்டு 14-ம் தேதி மதியம் இடைக்கால பிரதமர் பதவியை விட்டு விலகி கடிதம் கொடுத்துள்ளீர்கள்.
அன்று இரவு 12 மணிக்கு மேல் பாரதத்தின் புதிய பிரதமராகப் பதவி ஏற்றுள்ளீர்கள்.
செப்டம்பர் மாதம் முதல் தேதி ஆகஸ்டு மாத ஊதியத்தை முழுமையாகப் பெற்றுள்ளீர் கள்.
ஆகஸ்டு 14-ம் தேதி மதியத்திலிருந்து அரை நாள் நீங்கள் இந்திய அரசின் எந்தப் பதவியி லும் பணியாற்றவில்லை.
நீங்கள் உடனடியாக கூடுதலாகப் பெற்ற அரை நாள் ஊதியத்தை கருவூலத்தில் திரும்பக் கட்டும்படி அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
(ஒப்பம்)
பி. நரஹரிராவ்
தணிக்கை அதிகாரி -------------------------
மறுநாள் டெல்லியில் கூக்குரல் எழுந்தது. "பிரிட்டிஷ் அடி வருடி துரோகி நரகரி ஒழிக" என்று ஜால் ராக்கள் குதித்தன.
சில தலைவர்கள் அதிகாரியை எதிர்த்தும் கண்டித்தும் அறிக்கை வெளியிட்டனர்.
பத்திரிகையாளர்கள் பிரதமரைச் சூழ்ந்து கொண்டு கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டனர்.
மாலை 5 மணிக்கு பிரதமர் பத்திரிகை யாளர்களைச் சந்திப்பார் என்று அரசு அறிவிப்பு தெரிவித்தது. மாலை பத்திரிகை யாளர்களை சந்தித்தார். பத்திரிகையாளருக்கு ஒரு குறிப்பு தரப்பட்டிருந்தது.
தணிக்கை அதிகாரியின் கடிதம் பிரத மரின், கவனத்துக்கு வரும் முன்பே பத்திரிகை களில் வந்தது தவறு. இது பற்றி விசாரிக்கப் படும் பிரதமர் என்ற பதவியையோ, அவரின் அரசியல் செல்வாக்கைப் பற்றியொ,கணக்கில் கொள்ளாமல், அரசின் விதி மீறல்களைச் சுட்டிக் காட்டிய தணிக்கை அதிகாரியை பாராட்டுகிறோம். நவபாரதத்திற்கு இத்தகைய அதிகாரிகள் தான் வேண்டும். புதியதாக தணிக்கை மற்றும் கணக்குக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பி. நரஹரிராவ் அவர்களையே நியமிக்க அரசு உத்தேசித்துள்ளது. (பி.கு- கூடு தலாகப் பெற்ற அரைநாள் ஊதியம் கருவூலத் தில் கட்டப்பட்டு விட்டது.)
-------------------------------
"சோபாவில் ஒக்காந்து தூங்குறீங்களா! கழுத்து வலிக்கப் போகுது". என் மனைவியின் குரல் கேட்டு அதிர்ந்து எழுந்தேன்.
"என்ன இது, பேந்தப் பேந்த முழிக்கிறீங் களே! ஏதாவது கெட்ட சொப்பனம் கண்டீ களா? "என்றாள்.
"நான் கண்டது சொப்பனமா? அதுவும் கெட்ட சொப்பனமா?" எனக்குத் தெரியவில்லை
7 comments:
நன்றாக உள்ளது
அற்புதமான செய்தி. சிறுகதை என்று ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வளவு தான். ஆனால் புனைவு அருமை. கற்பனை கலந்த உண்மை. அதாவது உயர்வகை மது கலந்தது.....அள்ளிப் பருகினேன், செய்தியை, உயர்வகை புனைவை....
எஸ் வி வேணுகோபாலன்
காஸ்யபன் சார். இது புனைவா நிஜமா? எதுவோ ஆனால் சுவாரஸ்யமாக இருந்தது. நன்றி ;-)
வரலாற்றை சிறுகதை வடிவில் அழகாக சொல்லியிருக்கிறீர்கள். நேருவின் அந்த நேர்மை இன்றைய காங்கிரஸ் கட்சியில் கடுகளவு கூட் இல்லை, காந்தி ஏன் சுதந்திரதினக் கொண்டாடத்தில் கலந்துகொள்ளவில்லை, கல்கத்தாவில் நடந்த மதமோதல்களை அமைதிப் ப்டுத்தத்தான் அங்கிருந்தாரா? அல்லது வேண்டுமென்றே தவிர்த்தாரா?
செறிவான நடையில் அழகான பதிவு. ரொம்ப ரசித்தேன் சார்!
பிரிவினையின்போது நடந்த வன்முறை காந்தியடிகளின் நாடினரம்பை அதிரடித்து விட்டது."last two hundred days of mahathma" என்று ஒரு தொடர் இந்து பத்திரிக்கையில் வந்தது. அதனை L.I.C ஊழியர்களின் தலைவர் கே.லட்சுமணன் தமிழில் நூலாக்கியிருக்கிறார்.படியுங்கள் ஹரிஹரன்.கொல்கத்தவில் இருந்த அவரை விழாவிற்கு டெல்லி அழைத்துவர படேல் மற்றும் பலர் முயற்சித்தனர். காங்கிரஸ் தலைமையில் உள்ளார்ந்து இருந்த கருத்து மோதல்கள், மனமாச்சரியங்கள் அவரை ஒதுங்கி இருக்க வைத்துவிட்டது. வரலாற்றில் இந்தப் பகுதி சாம்பல் பூத்து நிற்கிறது.மேலும் கவனமாக எழுதப்பட வேண்டும்---காஸ்யபன்
Post a Comment