JAN
16
பசு வதை தடையா, தடையால் வதையா?
கடந்த சில வருடங்களாக தேர்தல் களத்தில் அரசியல்வாதிகள் ஆடத் தேர்ந்தெடுத்திருக்கும் புதிய பகடை 'பசு'.
'பசு பாதுகாப்பு சாம்பியன் நானே' என சுயபிரகடனப் போட்டியை இராஜஸ்தானிலும், பசு சென்டிமெண்ட் கண்ணீர் வடிக்கும் ஒரு கூட்டத்தை குஜராத்திலும் பார்க்கிறோம். மத்திய பிரதேச அரசு ஒரு படி மேலே சென்று, பீஃப் வைத்திருந்தாலே 7வருடம் சிறைத்தண்டனை என சட்டமியற்றி தனது 'பசு'மையை காட்டியுள்ளது. காந்திய வாதிகள், குறிப்பாக வினோபா பக்தர்கள் தம் பங்கிற்கு, 'பசு பாதுகாப்பு' இயக்கத்தை நிர்மாணத்திட்டமாக்கி 'லாபி' (lobby) செய்கின்றனர்.
இவ்வாறு பசு பாலிடிக்ஸ் ஆகிவிட்ட நிலையில் அதன் கெமிஸ்ட்ரி, எகனாமிக்ஸ், சமயம், கலாசாரம் என மற்ற அம்சங்களையும் பார்த்து விட்டால் என்ன என்று தோன்றுகிறது.
தாய்மை: பால் என்பது உயிரோட்டமான சரி விகித உணவு. விளையாட்டுப்பருவமுதல், வீர விளையாட்டுப்பருவம் வரை உகந்த போஷாக்கு. அரிய தனிமங்கள்( rare elements), தலையாய விட்டமின்கள், நோய் எதிர்ப்பு சக்தி என சகல மருத்துவ குணமும் கொண்டது. பசு நெய்யில் லேகியம் செய்வதும், வெண்ணெய் பூசிக்குளிப்பதும் இந்திய பாரம்பரியம். சாண எரிவாயு, தொழு உரம் என சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்தவையும் அதிலுண்டு.
இப்படி எல்லா விகிதத்திலும் வாழ்விற்கு பக்கபலமாக, பலனை சற்றும் எதிர்பாராமல் வாழும் ஓர் சக ஜீவனை அன்பின் வடிவமாக்கி பாதுகாத்தல் ஒரு கைமாறு மட்டுமல்ல, நம்மில் மனிதத்தை வளர்ப்பதற்கு ஓர் ஒப்பற்ற வழியும் கூட என 'கோ ரக்-ஷன்' பிரசாரகர்கள் வைக்கும் வாதத்தில் ஆன்மீக நியாயம் உண்டு.
விபரீதம்: ஆழமான தத்துவ பின்னணி கொண்ட இந்த தாய்மையின் வடிவைக் காப்பாற்ற 'எத்தனை தலை வாங்கவும் (தரவும் அல்ல) தயார்' என ஒரு சாரார் குரல் எழுப்பும் போதுதான் விஷயம் விபரீதமாகிறது.
மறுபக்கம்: இதுவெல்லாம் ஒருபுறமிருக்க, அமுக்கமாக மாட்டிறச்சியை உண்டு களிக்கும் ஒரு பெருங்கூட்டம், மாட்டிறைச்சிக்கு ஆதரவாக ஏகப்பட்ட வாதங்களை வாளாக்கி களத்தில் குதிக்கத் தயாராகி இருக்கிறது.
அண்மையில் டெல்ஹியில் நடந்த ஒரு மாநாட்டின் உணவு வேளை விவாதமாக வந்து சேர்ந்தது 'பசுவதை'. மேசையில் நால்வர்: ஒரு கேரளம், ஒரு நாகலாந்து பெண்மணி, ஒரு ஜார்கண்ட் மனித உரிமை ஆக்டிவிஸ்ட். நான்-வெஜியாக இருந்து வெஜிடேரியனாக மாறியுள்ள நான் அம்மேசையில் 1/4 மைனாரிடி. பரிமாறப்பட்ட மட்டனை (மட்டன்?) கடித்துக் கொண்டு அவர்கள் சுவையாக பரிமாறிய வாதம்:
'நம் நாட்டின் புரதத் தேவையில் நாற்பது சதவிகிதத்தை பூர்த்தி செய்யும் உணவாக அசைவம் உள்ளது.
அதில் நான்கில் ஒருபகுதி பீஃப் (beaf). பசுவதை என மாட்டிறைச்சியை தடை செய்துவிட்டு நாட்டின் 10 சதவிகித புரதத் தேவையை இவர்கள் எவ்வாறு சமன் செய்யப் போகிறார்கள்' என ஜார்கண்ட் வாதத்தை துவக்கிவைத்தார்.
'பசு வதைத் தடை என்பதைல்லாம் 'கறி'க்குதவாத வாதம். அப்படி வாதம் செய்கிறவர் யாராவது மாட்டை வைத்து பொழப்பு ஓட்டுகிறார்களா? பால் மாடு வைத்திருக்கும் விவசாயிட்ட போய் கேளுங்க; அவனுக்கு அது ஒரு பொருளாதாரம். பால் கறந்தா கறவை மாடு, மறுத்தா அடிமாடு. ஐயோ பாவம்! நம்மைக் காப்பாற்றிய மாடு, அதனை நாமும் காப்பாற்றணும் என்பது அபப் பொருளாதார ( uneconomic)வாதம். ஐம்பது ரூபாய்க்கு தீவனம் போட்டால் எண்பது ரூபாய்க்கு பால் தருவதே பெரும்பாடா இருக்கு. இதுல மலட்டையும் கிழட்டையும் சேர்த்துக்க யாரால் முடியும்.'
'இந்தியாவைப் பொருத்தவரை 'பீஃப்' ஆனது பால் பொருளாதாரத்தின் ஒரு உபப் பொருள் ( Byproduct). இறைச்சிக்காக மாட்டுப் பண்ணை என்பது இங்கே கேள்விப்படாத ஒன்று. பால் உற்பத்தியானது ஏழை மற்றும் கீழ் நடுத்தர வகுப்பு (லொயர் மிடில் க்ளாஸ்) மக்களின் தொழில். அவங்க யாரும் பால் மாட்டையோ திடகாத்திரமான காளைமாட்டையோ அடிமாடாக சந்தைக்கு அனுப்புவதில்லை. பல்லு போனதையும், சினைபிடிக்காததையும் வைத்து அவன் என்ன செய்வான்? கோடை வறட்சியில, உள்ள மாட்டுக்கே புல்ல காணோம்ங்கிர நிலையில வெத்துமாட்டுக்கும் சேர்த்துப் போடுவது அவனால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒன்று.' என கேரளக்காரர் பொரிந்து தள்ளினார் தனது மலையாளம் கலந்த ஆங்கிலத்துல.
இப்படி (விவசாயியின் பொருளாதாரத்தால்) ஒதுக்கப்பட்ட மாடுகளே 'மாட்டிறைச்சி' என்பதால் இது பால் பொருளாதாரத்தின் உபப் பொருள். உபப் பொருள்25% முதலீட்டில் நமக்குக் கிடைக்கும் லாபகரமான பொருள். இதனால் விவசாயிக்கு லாபமோ இல்லையோ, இது (இந்த ரீ-சைக்ளிங்க் வருமானம்) இல்லாமல் அவன் பால் தொழில் செய்யவே முடியாது என தனது இரண்டாங்கட்ட வாதத்தையும் வைத்து விட்டு தட்டில் இருந்ததை ஒரு கடி கடித்தார்.
'ஆட்டுக்கறி 350-400ரூபான்னு விற்கும் நேரத்துல, உபப் பொருளாக சந்தைக்கு வர்ரதனாலேதான் ஏழைகளுக்கு சௌரியமா ரூபாய் 80 - 100ன்னு மாட்டிறைச்சி மலிவா கிடக்குது. இப்ப அதுல மண்ணை அள்ளிப் போட முனைராங்க.'
அடி மாட்ட 'புனிதமாய்க்' கருதி மேய விட்டோம்னா பால் மாட்டுக்குத் தீனி பத்தாம (புல்வெளி இல்லாத நிலையில், குறைந்த அளவே வைக்கோல் தீவனம் உள்ள நிலையில்) பால் உற்பத்தி 20-30 சதவிகிதம் நசிவடைய சாத்தியம் இருக்கு" என மலையாள நண்பருக்கு ஓரிரு இணையங்கம் வாசித்துவிட்டு "உங்களுக்குத் தெரியுமா?" என சுவாரசியமாக் ஆரம்பித்தார் ஜார்கண்ட். "மும்பையில் ஐந்து பெரிய அபடாய்ர் (மாடு அடி நிலையம்) இருக்கு. மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யறாங்க. அதுல முதல் மூன்றுக்கு சொந்தக்காரர் ஜைனர்கள் (Jains). விஷயம் எங்க நிக்குது பார்? விற்கலைன்னா பொழப்பு போயிரும் என்று சந்தைக்கு வரும் விவசாயிகிட்ட தத்துவம் பேசிட்டு, அங்க போய் அதுலேயே பில்லியன் பிஸினஸ் பண்ணுவதுதான் சாமர்த்தியம்."
'விவசாயி பசுவை கறவைக்கும், காளையை உழவுக்கும் வைத்திருந்தான். நாம கலப்பின பசுன்னு விளம்பரம் பண்ணி காளையையும் கலப்பினமாக்கிட்டோம். அது நடக்கவே குடை கேட்குது. வெயில்ல வந்தாலே வீஸிங்க் ஆகுது. தெண்டத்த வைத்து என்ன செய்யறது? காளையை கலப்பினமாக்கியது விவசாயியா? அவன விக்கக்கூடாதுன்னு சொல்ல நமக்கென்ன உரிமை இருக்கு?'
'எப்படியோ இந்த மாடுகள வச்சு உழலாம்னு போனா, தெருவுக்கு இரண்டு டிராக்டர் இறக்கி விட்டிருக்காங்க, வண்டி மாட்ட ஓரம் கட்டணும்னே ட்ரக்குகளை ஓட விட்டிருக்காங்க. இதுல அகிம்சை தத்துவம் வேற. எவ்வளவுதான் விவசாயிய இம்ச பண்றது?" இது என்னங்க நியாயம்?' என மனித உரிமைக் குரல் கொடுத்தார் ஜார்கண்ட்.
எனது தட்டு காலியாகி கை காய்ந்து கொண்டிருக்க, எழும்ப எத்தனித்த நான் அதுவரை அசைவத்தோடு ஐக்கியமாயிருந்த அம்மணி ஆரம்பித்தவுடன் அமர்ந்துவிட்டேன். "பீஃப் எங்களது (நாகலாந்து) இஷ்ட உணவு" என தொடங்கினார்.
'மாட்டிறைச்சி உணவு எங்களது பாரம்பரிய கலாச்சாரம். ஒரு கலாச்சாரத்தைக் கேள்விக்குறியாக்கும் அதிகாரம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது? அப்படிச் செய்வது எங்களை அவமானப்படுத்தும் செயல்' என உணர்வு மேலோங்கக் கூறியவர், சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, 'பசுவை பூஜிப்பவர்கள் இருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரிவதற்கு முந்தய காலத்திலிருந்தே பீஃப் எந்தளது கலாசார உணவாக இருந்துவந்துள்ளது. ஒரு சாராரின் பக்தியை அவமானப்படுத்துவது எங்களது நோக்கமாகவோ, உள்நோக்கமாகவோ இருந்ததில்லை எனும்போது, இதனை வாதப்பொருளாக்குவது எப்படி நியாயமாகும்?' தர்க்க ரீதியாக யோசிக்க வைத்தவர் அதனை வலுவாக்கும் விதமாக மேலும் ஒரு கேள்விய போட்டார், "ஏங்க, எங்க கலாச்சாரத்தில ஒன்றிய ஒரு உணவை தடை செய்யணும்னு பேசறாங்களே, நாங்களும் ஒரு சொல்லுக்கு சொல்லுறோம், எங்க கலாசாரத்துக்கு சற்றும் பொருந்தாத இட்டிலி தோசையை தடை செய்ன்னு, (டாக்டர்கூட சொல்ரார், தோசையும் தாளித்த சட்னியும் கார்சினோஜீனிக் என்று) நல்லதுக்காகவே இருந்தாலும் உங்களால அத விட முடியுமா? அது இல்லாத உணவுக் கலாச்சாரத்த உங்களால கற்பனை பண்ணிப் பார்க்க முடியுமா? அப்படித்தான் மாட்டிறைச்சி எங்களுக்கும்" அப்படின்னு சொல்லிட்டு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாங்க. "இப்படி பல்வேறு விஷயங்களிலும் எங்கள அற்பமா எண்ணி, எங்க உணர்வுகள உதாசீனப்படுத்துவதாலதான், நாகலாந்து, மணிப்பூர் போன்ற மாநிலங்கள்ல நாங்க தனி நாடு கேட்டு போராடுறோம்கிறத நீங்க புரிஞ்சிக்கணும்."
ஆட்ட கடிச்சி, மாட்ட கடிச்சி, இந்த அம்மா நம்ம இட்டிலி சட்டினியிலிருந்து எல்லைவரைக்கும் ஒட்டு மொத்தமா 'வேட்டு' வைக்குதே! நான் கிளம்பி விட்டேன் 'கை கழுவ'.
பொருளியல் பார்வை: மூலப் பொருளிலிருந்து அதிகப்பட்ச உற்பத்திப் பொருளை வெளியெடுப்பதே நல்ல உற்பத்தியாளருக்கு அழகு என்கிறது பொருளாதார தத்துவம். நிலக்கடலை விவசாயமே எண்ணெய் உற்பத்திக்காகத்தான் என்றாலும், அதன் காய்ந்த செடி கால்நடை தீவனமாகவும், சண்டு (shells) எரிபொருளாகவும், சக்கை (oil cake) புரத உணவாகவும் மாற்றப் படுவதில்லையா. அதனாலேதான் கடலை எண்ணெய் விலை ரூபாய் 100க்குள் நிற்கிறது. உபபொருள் உற்பத்தி சாத்தியம் இல்லையெனில் பால் கூட லிட்டர் 30ரூபாய்க்கு கிடைக்காது.
டிமாண்ட் சப்ளை உறவு பொருளியலில் ஒரு விசேஷமான சம்பந்தம். டிமாண்ட் இல்லை எனில் உற்பத்தி சாத்தியமே இல்லை. பால் நுகர்ச்சிதான் பால் உற்பத்திக்கான தலையாய உந்துதல் என்கிற பார்வையில், பால் நுகர்வோரே மாடுகள் 'அடிமாடா'க முதல் காரணம் (பால் உற்பத்தியில் உபப்பொருள் உற்பத்தி தவிர்க்கமுடியாத ஒன்று என்கிற நிலையில்). பாலை நான் குடித்துவிட்டு, அதனால் ஏற்படும் விழைவை நீ கட்டி அழு என விவசாயியை கூறுவது தேசிய பார்வையற்ற வாதம்.
கருணை: ஒரு வாதத்திற்கு எடுத்துக்கொள்வோம்: இரண்டுகோடி பசுமாடுகள் உள்ள நம் நாட்டில் மாட்டிறைச்சித் தொழிலை நிறுத்தி விட்டால், (பிறப்பதில் ஒன்றுக்குப்பாதி ஆண் மாடு, மீதியில் கால்வாசி மலடு மற்றும் கிழட்டு மாடு என்கிற நிலையில்) ஏறக்குறைய ஒண்ணேகால்-ஒண்ணரை கோடி வெற்று மாடுகளை என்ன செய்வது? கட்டி வைத்து தீனி போட முடியாத நிலையில், விவசாயி அவற்றை அவிழ்த்துவிடுவதைத் தவிர்த்து வேறு என்ன செய்ய முடியும்? அனாதையாக தெருத்தெருவாக அலைய விடுவது எந்த வகையில் கண்ணியமான செயலாக இருக்கும்? பசு வதை தடுப்பு வாதம் செய்வோரும், பால் நுகர்ச்சியாளரும் அதற்கு நாங்கள் பொருப்பு இல்லை என வாதம் செய்யப் போகிறார்களா?
பசுவின் மீது பாசம் எல்லோருக்கும் உண்டு. ஏழை விவசாயி அவன் மாட்டை பெயர் வைத்துத்தான் அழைக்கிறான். மாட்டுப்பொங்கலில் பார்த்திருபீர்கள், 'அவளை' மிளிரச்செய்து உச்சி முகர்வான். மழையானால் பசுவை வீட்டிற்குள் கட்டி, திண்ணையில் ஒதுங்குகிறான். அதற்கு வெட்கையானாலும், வேட்கையானாலும் அதனை தணிக்க அழைத்துக்கொண்டு பல மைல் தூரம் நடந்து செல்வான். பசுவை பாசத்துடன் வைத்துக்கொள் என அவனுக்கு சொல்வது பட்டதாரிக்கு பால பாடம் எடுத்த கதை.'
துவைதம் (Dilamma): பாசம் உண்டு. ஆனால் பால் தராத மாடு அவனுக்கு 'பேரிடி'. யதார்த்தத்திற்கு வருவோம். நடுத்தர, கீழ் நடுத்தர வர்க்கத்தில், பென்ஷன் இல்லாத கையில் சொத்தே இல்லாத முதியவர்களை நம்குடும்பங்களில் எப்படிப் பார்க்கின்றனர்? பிள்ளைகளுக்குப் போக, வந்தவர்களுக்குப் போக, உழைப்பவர்க்குப் போக மிஞ்சியதே 'பெருசுக்கு' என்கிற அவலம் நம் வீடுகளில் இல்லையா? பிள்ளைக்கு முடியலைன்னா அன்றைக்கும், கட்டியவளுக்குன்னா அடுத்த நாளும் மருத்துவரிடம் போகும் ஏழை, தனக்குன்னா 'அதுவா சுகமாகட்டும்'னு நாலு நாள் இழுத்துப்பார்த்து, வீட்ல எல்லோரும் விரட்டின பிறகுதான் டாக்டரிடம் செல்கிறான். ஏழை பெற்றோர் முடியாம போனால், இத்தோடு 'முடிஞ்சிருமா' ('முடிஞ்சுடாதா)ன்னு எட்டிப்பார்க்கும் அவலம்தான் அங்கு இருக்கு. அன்பு இல்லை என்றில்லை, ஏழையின் பட்ஜட்ல பாசம் எப்பொழுதுமே ஒரு டெஃபிசிட் ஐடம் தான். ஏழ்மைக்கும் பாசத்திற்கும் நடக்கும் போராட்டத்தில், ஏழ்மையை இறக்கி வைக்க முடியாத நிலையில் பாசத்தின் எல்லையை சுருக்கி தன் தெம்புக்குள் போராடும் அவன் சம்யோசிதனாகவே திகழ்கிறான். கம்யூன் வாழ் நாளில் எங்களுக்குக் கிடைத்த பாடம்*; ஏழையாகிப்பாருங்கள் யதார்த்த வலி புரியும்..
நடைமுறை மாற்றுவழி: அதையும்மீறி பசு பாதுகாப்பு உணர்வு நம்மில் மேலோங்கினால், நாம் வெரும் நுகர்வோராக, பார்வையாளராக இருந்து பேசுவது போலித்தனமாகிவிடும். நாம் நுகரும் பாலுக்கான மாட்டை நாமே வளர்க்கணும், அதன் எதிர்காலத்திற்கு உகந்த காப்பீட்டுத்திட்டத்தை துவங்கி எட்டுவருடம் பால் தந்த மாட்டை மேலும் பத்துவருடம் பாதுகாத்து வரலாம். இயலாத பசுவை பேணுவதுன்னா என்னங்கிர ஞானம் நமக்கும் கிடைக்கும், கஸ்தூரிபா அம்மையாருக்குக் கிடைத்தமாதிரி.
அது சாத்தியமில்லை என்று தோணினால் பால் நுகர்ச்சியை விட்டுவிடணும். பால் நுகர்ச்சி 'மானிட' உணர்வுக்கு எதிரான செயல். பிள்ளையின் முதல் எட்டு பத்து மாதங்களே தாய்ப்பால் உணவு என்கிற இயற்கை நியதியை மீறி ஆயுளுக்கும் அவள் முலைப்பாலுக்கு ஏங்கி, 'நாசுக்கா'க செய்த ஏற்பாடே மாட்டுப்பால். சுதந்திரமான ஜீவன்களை டொமஸ்டிகேட் செய்வது எந்த வகையில் நியாயமான செயல்? வாழும் ஜீவராசிகளில் யாரும் செய்யத்துணியாத, மிருகத்தனத்தைவிட கேவலமான செயல் ஆயுளுக்கும் பால் அருந்துவது என வாதம் செய்யும் மேனகா காந்தியின் அகிம்சை எவ்வளவோ போற்றதக்கது. அதுவே யதார்த்ததிற்கு உகந்த 'பசு' பாதுகாப்பு வாதம்.
ஒத்திசைவு(complementarity): பல்வேறு மொழி, இனம், மதம், நடை, உடை, பாவனை என வேறுபாடுகளை சரளமாகத் தனதகம் கொண்ட பாரதத்தாய், தனது பெருங்குடும்பத்திற்கு அழகு சேர்க்கும் அணி அலங்காரமாகவே அவற்றைப் பார்க்கிறாள்.
வேஷ்டி கட்டினால் அழகு, குர்தா பைஜாமாவும் அழகு; அங்கவஸ்திரமும் 'டை'யும் இங்கே ஒரு சேர வேலை செய்யும்; தேனினும் இனிய தமிழ் மொழி தாண்டவமாடும் அதற்கு கன்னடமும் தெலுங்கும் பின்னிசைக்கும். சாமிக்கு நேர்ந்து சடாமுடி வளர்ப்பது மனநிறைவென்றால், அதே சாமிக்கு மொட்டை அடிப்பது முழுநிறைவு; சாமி சிலையை பின்னொருவர் காயப்படுத்தினால் மதக்கலவரம், அதே சாமியை அலங்கரித்து மேளதாளத்துடன் நீர் நிலையில் ஊர்கூடி போட்டுடைத்தால் இறைவிழா. முரணாகத் தெரியவில்லை?
தெரியவில்லையே! இவையெல்லாம் பல்வேறுபட்ட வழிமுறைகள் என உணரும் மனபக்குவம் உள்ளதால் நமக்கு முரணாகத்தெரியவில்லை.
இப்படித்தான் வாழ்வின் ஒவொவொரு அம்சமும் எதிரும் புதிருமானதாக உள்ளது. விவசாயி இராப்பகல் கண்விழித்து ஆடு மாடு மேயாமல் பயிரை பாதுகாப்பான், கடன் வாங்கியாவது உரமிட்டு வளர்ப்பான் பின்னர் அவனே நாள் குறித்து ஆள் கூட்டி மொத்த பயிரையும் அறுதெடுப்பான். குஞ்சு பொரிக்க பழுதற்ற முட்டைகளை அடைவைப்போம்; உடையாத முட்டை இருபத்தியோராம் நாள் உடைந்தால்தான் குஞ்சு உடையாவிட்டால் அது கூமுட்டை. இருபது நாள் உடைந்துவிடக்கூடாதே என ஏங்குவதும், இருபத்தியோராம் நாள் உடையணும் உடையணும் என வேண்டுவதும் நமக்கு முரண்பாடாகத் தெரிவதில்லை. சூரியன் இன்றி வாழ்வில்லை; எட்டு மணி நேர வேலைக்குப்பிறகு எப்பண்டா அவன் அடைவான் என ஏங்குவோம்; மழைவேண்டி வர்ணஜெபம், கழுதை கல்யாணம் நடத்துவோம், கொட்டுமழை நிற்கட்டும் சாமி என வேண்டுதல்ஜெபமும் நடத்துவோம். வேண்டப்பட்டவரை பார்க்கத் துடிப்போம், அவரே கண்ணை மூடிட்டால் 'சவத்த எப்ப தூக்கப் போரீங்க' ம்போம்.
எதிரும் புதிரும் என்பது ஒன்றுக்கொன்று விரோதமானது என நாம் தப்புக்கணக்கு போடுகிறோம். உடலியலால் ஆணும் பெண்ணும் எதிரும் புதிருமே. இந்த இனம் நீடிக்க அவர்கள் எதிரும் புதிருமாயிருப்பதே அடிப்படை. அவை முரண் அல்ல, ஒன்றுக்கொன்று ஒத்தாசையானவை (complementary), நீ விட்டதை நான் முடிப்பேன் என ஓடும் ரிலே ரேஸ் போல.
இரவும் பகலும் போல; வளர்ப்பதும் போற்றுவதும் பின்னர் வீழ்த்துவதும் விவசாயத்திலிருந்து விநாயகர் சதுர்த்தி வரை ஒன்றுக்கொன்று இணக்கம் (compatible) கொண்டதே என்பதை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது. பொருளாதாரம் சார்ந்த உணவியல் ஒன்றும் விதிவிலக்கல்ல.
ஒன்றுக்கொன்று இடம்கொடுத்து வாழ்ந்தால் பசு வதையும் இல்லை, அதனால் சமூக வதையும் இல்லை.
---- -----
* கம்யூன் நண்பர்கள் ஏழரை வருடம் நிலத்தை ஆதாரமாக்கி சுய சார்பு வாழ்க்கை வாழ, மதுரையை அடுத்த பாலமேடு-தெத்தூர் கிராமத்தில் செய்த பயி
Send feedback
6 comments:
வணக்கம் ஐயா.
அருமையான பதிவு. அருமையான விவாதம்.
நன்றி ஐயா.
ஒரு நாணயத்தின் இரண்டு பக்கத்தையும் விமரிசித்து எழுதியது நடு நிலையிலும் நம் கருத்தை விளக்கலாம் என்று காட்டுகிறது.வாதப் பிரதிவாதங்களை ரசித்துப் படித்தேன்.
ஆடு கோழி மீன்கள் மட்டும் என்ன பாவம் செய்தன?
அருமையான விவாதம், நல்ல பொருள் பொதிந்தது. எங்கள் கிராமத்தில் எல்லா விவசாயிகளும் மாட்டை பயன்படுத்திய (விவசாயத்திற்கு) பிறகு அதை அடிமாட்டிற்குத்தான் அனுப்புகிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் மாட்டிறைச்சியை உண்பதில்லை, அவர்களின் வருமானம் இருக்கிறது. பசு காளைக்கன்றை ஈன்றால் அது அடிமாட்டிற்குத்தான் செல்லும், அதுபோல் எருமையின் காளைக்கன்றை போத்து என்பார்கள் அதுவும் அடிமாட்டுற்குத்தான். இதை வைத்து அரசியல் செய்பவர்கள் எல்லாம் வர்லாற்றையும் திருத்துகிறார்கள் வேதகால ஆரியர்கள் சுத்த சைவம் போல அப்போது தின்பதற்கு என்ன இருந்தது? இறைச்சியைத்தவிர?
சிறந்த இடுகை.
சிறப்பான பார்வை..
ராபின் அவர்களின் கேள்வி கவனிக்கத் தக்கது
Post a Comment