Wednesday, September 11, 2013

அடிமைத்தனம் என்றால் என்ன ?...!!

(சிக்காகோவில் வாழும் அப்பாதுரை அவர்களின் பதிவிலிருந்து )

    'இளமையில் சுதந்திரம்' என்ற அமைப்பின் சார்பில் என்னை உள்ளூர் உயர்நிலைப்பள்ளியின் கோடை விழாவில் பேச அழைத்திருந்தார்கள். பெரும்பாலும் பத்து-பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் நிறைந்த அரங்கு. சற்று கனமான கருத்துடன் தீட்டப்பட்டிருந்த என் உரையை முறையாகத் தொடங்குமுன் மாணவர்களைச் சற்றே ஈர்க்கலாம் என்று எண்ணி ஒரு கேள்வியை அவர்கள் முன் வைத்தேன்: "அடிமை என்கிறோமே.. அப்படியென்றால் என்ன தெரியுமா உங்களுக்கு?"


முன் வரிசையில் ஒருவரையொருவர் பார்த்தார்கள். என் கேள்விக்குப் பதில் சொல்ல முன்வரவில்லை. கேள்வியை சற்று விளக்கி மீண்டும் அவர்கள் முன்வைத்தேன். "கறுப்பர்கள் வெள்ளையருக்கு அடிமைகளாக இருந்தார்கள் என்று படிக்கிறோம். லின்சி லோகன் போதைப்பொருளுக்கு அடிமையானார் என்கிறோம். நம் நண்பர்கள் மற்றும் சுற்று வட்டத்தினர் சிகரெட் மது போன்ற பழக்கங்களுக்கு அடிமைகள் என்கிறோம். ஏன் அப்படிச் சொல்கிறோம்? தெரிந்தோ விரும்பியோ தானே சிகரெட் பிடிக்கிறார்கள்? உடல் நலத்தைக் கெடுக்கும் என்று தெரிந்து தானே போதை மருந்தை நாடுகிறார்கள்? எனில் அடிமை என்றால் என்ன? அடிமைத்தனம் என்பது என்ன? செய்கையா? உணர்வா? பாதிப்பா? பயமா? அல்லது குணமா? எங்கிருந்து வருகிறது? நாம் ஒருவருக்கோ ஒரு பழக்கத்துக்கோ அடிமையாக இருக்கிறோம் என்பதை எப்படி உணர்வது? "நீ என் அடிமை" என்று சொன்னால் மட்டுமே அறியப்படுகிற உண்மையா?". 


அரங்கில் சில கைகள் மெள்ள உயரத் தொடங்கின. எனக்கும் புத்துணர்ச்சி பிறந்தது. "சொல்லுங்கள்" என்றேன்.


"அடிமைத்தனம் என்பது.. ஏன் செய்கிறோம் என்றச் சிந்தனையில்லாமல் ஒரு செயலில் திரும்பத் திரும்ப ஈடுபடுவது.." 


"எதையும் ஆராயாமல் கேளாமல் இன்னொருவர் சொற்படி ஏற்று நடப்பதாகும்"


"ஏனென்று கேட்டால் தண்டிக்கப்படலாம் என்ற ஒரு வித அச்சம் கலந்த எதிர்பார்ப்புடன் உடன்படுவதாகும்"


"ஒரு விருப்பத்தை நிறைவேற்றினால் அதிகாரமுள்ளவர் மனமிரங்கி ஏதாவது பலன் வழங்குவார்கள் என்றக் கீழ்த்தட்டு எதிர்பார்ப்பே அடிமைத்தனமாகும்"


"விருப்பத்துக்கு மாறாக நடந்தால் தண்டனை கிடைக்கும் என்றத் தீராத பயம்.."


"தன்னிச்சையான எண்ணம் செயல் போன்ற சுதந்திர வெளிப்பாடுகளை இனம்புரியாத காரணங்களுக்காக அடக்கியோ ஒடுக்கியோ வைக்கும் மனநிலை.."


"பயனில்லை என்று தெரிந்தும் ஒன்றை மீண்டும் மீண்டும் நாடும் மனப்பாங்கு"


"மரபு.. வழக்கம் என்ற ஒரு விளங்காத விளக்கமுடியாத முறைக்குட்பட்டு நடப்பது.."


"அறியாமல் செய்த தவறை, அறிந்தே தொடர்ந்து செய்வது.. செய்யத்தூண்டுவது.."


அனைவருக்கும் நன்றி சொல்லி என் உரையைத் தொடங்கினேன். அன்றைய பேச்சு வெற்றிகரமாக முடிந்தது என்றே சொல்ல வேண்டும். இருபது நிமிடங்கள் கொடுத்திருந்தார்கள். 'சுதந்திரமாக சிந்தித்துச் செயல்பட வேண்டிய அவசியம்' என்ற பரந்த தலைப்பென்பதால் நிறைய பேச முடிந்தது. என்னுடைய பேச்சின் அடித்தளம், 'பிறர் சொற்படி கேட்டுச் சீரழிகிறோம், நம் எண்ணப்படி இயங்காமல் வாழ்வில் தோல்வியடைகிறோம், நம் முன்னோர்கள் உற்றார் நண்பர் சுற்றங்களின் பழக்கம் என்பதால் கண்ணை மூடி நாமும் பின்பற்றிப் பின்தங்குகிறோம்' என்ற கருத்துக்களில் அமைக்கப்பட்டிருந்ததால், என் நாத்திகச் சிந்தனைகளை சற்றுச் சுலபமாக அவர்கள் முன் வைக்க முடிந்தது. நான் எதிர்பாராத வரவேற்பு கிடைத்தது மிகவும் நிறைவாக இருந்தது. ஆத்திக ஆதிக்கமும் வெறியும் மிகுந்த அமெரிக்க நகரமொன்றில் அறிவை நாடும் இளைய சமுதாயத்துடன் உரையாடிய அனுபவத்தை நான் மறக்கப் போவதில்லை. அடிமைத்தனம் என்பது செய்கையா ? பயமா ?பாதிப்பா ?உணர்வா ? குணமா ? போதைகளை  நாடுவது போல கடவுள் நம்பிக்கையும் ஒருவகை அடிமைத்தனமா ?


   
0 comments: