Tuesday, November 30, 2010

கடல்----

கடல்......


மதுரையில் பணியாற்றுவதற்கு முன்பாக நான் ஹைதுராபாத்தில் பணியாற்றினேன். ஹைதிராபாத்தையும் செகந்திராபாத்தையும் இரட்டை நகரம் என்பார்கள். இரண்டு பகுதிக்கும் இடையில் ஒரு குளம் உள்ளது.(57-58ம் ஆண்டு) அந்தக்குளத்திற்குப் பெயர்தான் ஹுசைன் சாகர்.

மத்திய இந்தியாவின் மையப்பகுதிகளில் பெரிய கம்மாய் என்றாலே சாகரம் என்று பெயர்வைத்து விடுவார்கள். .இங்குள்ள மக்கள் 500லிருந்து 1000 மைலாவது சென்றால் தான் கடலைப் பார்க்கமுடியும்.இந்தபகுதியின் தென் கோடியில் இருப்பதுதான் தக்காண பீடபூமி.

ஹைதிராபாத்தில் எனக்கு நல்ல நண்பர்கள் உண்டு.அப்பொது நான் திராவிடநாடு பிரிந்தால் தான் நாம் உருப்படுவோம் எனும் விடுதலை இயக்கத்தின் ஆதரவளன்.தெலுங்கானா மக்கள் நம்ம திராவிட நாட்டவர்கள் என்ற எண்ணமும் உள்ளூர இருந்தது

ராமாராவ்,ராம்மோகனராவ்,அனுமந்தராவ்,ரஃபீக் அகமது ஆகியோர் எனக்கு நெருக்கமானவர்கள்.. மதிய உணவு இடைவேளையில் பெசிக்கொண்டிருப்போம். பெரும்பாலும் "கடல்" பற்றியதாகத்தான் இருக்கும்.அவர்கள் சமுத்திரத்தையே பார்த்திராத்வர்கள்.

"வேவ்ஸ் ஐஸி ஆதி கியா?" என்று ராமாராவ் கைகளை உயர்த்திக்காட்டுவான். பரிதாபமாக இருக்கும்.

"நான் சமுத்திரத்தை சினிமாவில் தான் பர்த்திருக்கிறேன்" என்பான் ரஃபிக்.நான் அள்ளி விடுவேன். அலைகளின் மிது ஏறி விளயாடுவது பற்றி அளப்பேன்.

ராமேஸ்வரத்தில் குளித்திருக்கிறேன்.குளத்தில் கூட கொஞ்சம் கூடுதலாக அலைவீசும்.திருச்செந்த்தூரில் குளித்தது பற்றி அளப்பேன்.இறுதியில்.நான் அவர்களை அழைத்துக்கொண்டு மெட்றாஸ் போய் மெரினா பீச்சை காட்டுவதாக உறுதி அளித்ததும் கலைவோம்.இது தினம் நடக்கும்.

ஹைதிராபாத்.நாகபுரி,ஜான்சி, போபால்,டெல்லி, ஏன் அயொத்தி ஆகியநகரங்களில் உள்ளவர்களில் பலரின் நிலமையும் இது தான். டெல்லியிலிருந்து சென்னை வரும் வடநாட்டவர்கள் கூடூர் தாண்டியதும் சமுத்திரம் தெரிகிறதா என்று பார்க்க ஆரம்பிப்பார்கள்.பார்த்தவுடன் பெரியவர்கள், முதியவர்கள் கன்னத்தில் பொட்டுக்கொள்வார்கள். குழந்தைகல் குதூகலிப்பார்கள்.

மத்தியப்பிரதேசத்தின் விந்தியமலையின் ஒரு சிகரம்தான் திரிகோணமலை. அதன் அடிவாரத்தில் உள்ள பெரிய நீர் நிலையை வால்மீகி கவித்துவமாக சாகரம் என்று கூறியுள்ளார். அங்குள்ள கொண்டு இன மக்களின் தலவனை இன்றும் ராவணண் என்று அழைக்கிறார்கள் என்று கூறுவொரும் உண்டு.

வால்மீகி ராமாயணத்தை குறிப்பாக உத்தரராமாயணத்தை படிக்கக்கூடாது என்பார்கள்.எதைக் கூடாது என்கிறார்களோ அதனச்செய்து பார்பது மனித இயல்பு.நானும் மனிதன் தானே. மலையாளத்தில் "காஞ்சன சீதா" என்று ஒரு திரைப்படம் வந்தது.அரவிந்தன் எனற புகழ் பெற்ற இயக்குனர் எடுத்தது.ராமர் யாகம் செய்கிறார். சீதையில்லாமல் யாகம் செய்யமுடியாது. அதனால் தங்கத்தால் சீதையின் பதுமை செய்து அருகில் வைத்துக்க்கொண்டு யாகம் செய்கிறார்.

ராமர் பிறந்த இடத்தை நீதிமன்றமே அடையாளம் காட்டிவிட்டது. "வில் ஒன்றும் சொல் ஓன்றும்" கொண்ட விரன் ராராமன்.பராக்கிரமத்தில் அவனுக்கு ஒப்பார் இல்லை. அவனுடைய நினவிடம் எது?

அரவிந்தன் அடையாளம் காட்டுகிறார். யாகம் முடிந்து சரயு நதிக்கு நீராடச்சென்ற ராமர் "கசத்தில் " விழுந்து இறக்கிறார்.

ராமருக்கு நீந்தத் தெரியாது!

12 comments:

சுந்தர்ஜி said...

//மத்திய இந்தியாவின் மையப்பகுதிகளில் பெரிய கம்மாய் என்றாலே சாகரம் என்று பெயர்வைத்து விடுவார்கள்.//

//ராமேஸ்வரத்தில் குளித்திருக்கிறேன்.குளத்தில் கூட கொஞ்சம் கூடுதலாக அலைவீசும்//

//டெல்லியிலிருந்து சென்னை வரும் வடநாட்டவர்கள் கூடூர் தாண்டியதும் சமுத்திரம் தெரிகிறதா என்று பார்க்க ஆரம்பிப்பார்கள்.//

காஷ்யபன் ஐயா-உங்களின் ஹாஸ்ய பாவம்தான் எழுத்தின் ஜீவன்.

காணாதது பற்றி நீங்கள் எழுதிவரும் கட்டுரைகள் எல்லாமே சபாஷ் ரகம்.

யாரும் “காணாத” கோணம் இது.

மேலும் வாசிக்கக் காத்திருக்கிறேன்.

சிவகுமாரன் said...

"கசத்தில் " என்றால் கடலில் என்று பொருளா ? ராம் தேரி கசம் என்றால் ?

venu's pathivukal said...

உங்களை அனுபவக் கடல் என்று சொல்லிவிடலாம் போல...

சிலுவையிலே அடியுண்டு ஏசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்
பார்மீது நான் சாகாதிருப்பேன் கண்டீர்....
என்றான் மகாகவி.

இராமன் மாவீரனாயிருந்திருக்கலாம். ஆனால் எதையும் அனுபவிக்கக் கொடுத்துவைக்காத கதா பாத்திரம் அவன். கோசலையின் மகன் என்றாலும், கைகேயியின் செல்லத்தால், தாயிடம் அதிகம் அன்பு பாராட்டியிருக்கவில்லை. விசுவாமித்திரர் உடன் சென்ற காலத்தில் உற்றாரைப் பிரிந்தான். கைகேயி பெற்ற வரத்தால் தந்தையைப் பிரிந்தான். உடன் வந்த மனையாளை இழந்தான். மீட்டுவந்தபின் அவளையும், அன்பு மகனையும் இழந்தான். காலம் முழுக்கப் புகழை மட்டும் ஈட்டி என்ன பயன். மகிழ்ச்சியை முழுக்கத் தொலைத்தபிறகு. ஊர் ஊராக மாற்றலில் போகும் ஒழுக்கமான ஓர் உயர் அரசு அதிகாரி, பணி ஓய்வின்போது கூட இருந்து கொண்டாட குடும்பத்தில் ஒருவரும் இல்லாதது போல் இருக்கிறது இராமனின் கதை. அவனது ஒழுக்கம், அறம், திண்மை, கொள்கை எல்லாமே அவன் அழுவதற்காக அவனே ஏற்படுத்திக் கொண்ட விதிகளாக இருப்பதுதான் இராமாயணத்தின் முரண்! தேடலில் இருப்போர் எதைத் தேடுகிறோம் என்று தெரியாவிட்டால் படும் அவதியின் குறியீடு ஸ்ரீ ராமனோ என்று தோன்றுகிறது.

இவ்வளவு சீரியஸ் வேண்டாம். ஒரு துணுக்கு, எஸ் எம் எஸ் மூலம் வந்தது:

டிக்கட் பரிசோதகர்: ஏய், டிக்கட் இல்லாம எங்கே போற..

பயணி: ஸ்ரீ ராமன் பிறந்த இடம் அயோத்திக்கு..

டிக்கட் பரிசோதகர் : அப்பா, என் கூட வா..போகலாம்.

பயணி: எங்கே?

டிக்கட் பரிசோதகர் : ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த இடம், ஜெயிலுக்கு!


எஸ் வி வேணுகோபாலன்

ஹரிஹரன் said...

ராமாயணம் என்பது அயோத்தி முதல் விந்தியமலைகள் வரை தானா?

பிறகு எப்படி இந்த ராமர் பாலம், சீரிரங்கம் கோவில், ராமெச்வரம் எல்லாத்தையும் உள்ளே இழுத்தார்கள்.

//ராமருக்கு நீந்தத் தெரியாது!//

ஒரு அவதாரபுருஷனுக்கே இந்த நிலைமையா?

kashyapan said...

சுந்தர்ஜி1 நன்றி. உங்கள் பதிவின் விலாசம் கொடுங்களேன்.சிவகுமரன்ஆற்றின் ஆழமான பகுதிக்கு "கசம்" என்பார்கள்.பாரதியை எப்போதுமே அருகில் வைத்திருப்பேன் எஸ்.வி.வி.ஆனல் உங்களைப் போ.ல் பயன் படுத்தத்தெரியாது1930ம் ஆண்டுவாக்கில் மைசூரில் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த பரமேஸ்வர ஐயர் என்பவர் ஆங்கிலத்தில் ராமாயணம் பற்றி ஒரு நூலெழுதியிருந்தார்..வரைபடம் போட்டு அதில் ராமனின்பயணத்தைக் காட்டி வால்மீகியை மேற்கோள் காட்டியுள்ளார்.---காஸ்யபன்

சுந்தர்ஜி said...

நன்றி காஷ்யபன் சார்.

என் வலைப்பூவின் முகவரி:

sundargprakash.blogspot.com

கனாக்காதலன் said...

இதே போன்று நானும் அளந்துவிடுவதற்கு நொய்டா எனக்கு வாய்ப்பளித்திருக்கிறது. அளக்கவும் செய்திருக்கிறேன்.:)

அப்பாதுரை said...

ராமன் இலங்கைக்கு வரவில்லை என்ற சந்தேகமும் எனக்கு உண்டு - மாற்றிச் சொல்கிறேன்: ராமன் வந்த இலங்கை தென்னாட்டில் இல்லை என்ற சந்தேகம் எனக்கு உண்டு. ராமபக்தர்கள் அடிக்க வந்துவிடுவார்களே என்று இன்னொரு கருத்தைச் சொல்லத் தயங்குகிறேன். (ராம-லட்சுமணப் இந்திய-இலங்கைப் பயணக் குறிப்பையும் வரைபடத்தையும் (இன்றைய இலங்கை) ஒரு முனைவர் ஆராய்ந்து கொடுத்திருக்கிறார் - சுவையான ஆராயிச்சி)

மென்மையான நகைச்சுவையோடு எழுதியிருக்கிறீர்கள் - ரசித்துப் படித்தேன்.

அப்பாதுரை said...

நீதிமன்றம் அடையாளம் காட்டிய இடம் எது?

Harani said...

உங்கள் பதிவுகள் அனைத்தும் வெகு சுவாரஸ்யம் மிக்கவை. மனதை நெகிழ வைக்கின்றன. மனம் கசிய வைக்கின்றன. ஆர்வத்தை உயர்த்துகின்றன. தெரியாத செய்திகள் அத்தனையும். ஒரு பதிவிற்குத் தரப்படும் கருத்துரைகளே பலவித ஆய்வுச் சிந்தனைகளை வளர்க்கும் பக்கங்களாக அமைந்துள்ளது உங்கள் பக்கங்களில் மட்டும்தான். அனுபவிக்கிறேன் ஒவ்வொரு பதிவையும் நன்றாகப் பசித்தவன் சுடச்சுடச் சுவையான சோற்றைக் கண்டதுபோல. பதிவுகளில் எழுத்துப்பிழைகள் உள்ளன. கவனிக்கவும்.

Harani said...

பக்கங்களாக அமைந்துள்ளன.

Harani said...

பக்கங்களாக அமைந்துள்ளமை