Thursday, July 25, 2013

அமெரிக்காவில் வாழும் ஒரு 

இந்திய வம்சாவளி தந்தையின் பாடு ......!!!

(அப்பாதுரை அவர்கள்மன்னிக்கவும்)
.

 

    ஏறத்தாழ மூவாயிரம் வருடக் கலாசார வளர்ச்சிக்குப் பின்னும், அன்றைக்குப் போல் உலக மக்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். அடிப்படை வேற்றுமை. அதற்குப் பிறகு மதம், இனம், குலம், பணம், படிப்பு என்று அடையாள அடிப்படையில் பல பிரிவினைகள். வேர் என்னவோ கடவுள் நம்பிக்கைதான் என்று தோன்றுகிறது. 

    என் பிள்ளைகள் கடவுள் பற்றிக் கேட்ட போது எனக்கு உண்மையென்று பட்டதைச் சொல்லிவிட்டேன். என் பிள்ளைகள் துருவித் துருவிக் கேட்பவர்கள். பிஞ்சுமனப் பிள்ளைகளுக்கான குணச்சித்திரம். அவர்களின் ஐந்து-ஏழு வயதுக் காலத்தில் வீட்டில் நடைபெற்ற வழக்கமான உரையாடல்:
"கடவுள் உண்டா அப்பா?"
"எனக்குத் தெரியாது"
"கடவுள் உண்டு என்று நம்புகிறாயா டேடி?"
"இல்லை, நான் நம்பவில்லை"
"அம்மா நம்புகிறாரா?"
"அம்மாவைக் கேட்க வேண்டும்"
"கடவுள் இல்லை என்கிறார் அம்மா. இருந்தால் மனிதர்கள் பிராணிகளிடம் அன்போடு இருப்பார்கள் என்கிறார்"
"சரி"
"நான் கடவுள் இருப்பதாக நம்ப வேண்டுமா?"
"உன் விருப்பம்"
"நம்புவதற்கு ஏதேனும் காரணம் உண்டா அப்பா?"
"காரணம் எதுவும் கிடையாது"
"பிறகு நான் ஏன் நம்ப வேண்டும்?"
"அவசியமேயில்லை"
"நம்பவில்லையென்றால் கடவுள் தண்டிப்பாரா?"
"தண்டிக்க மாட்டார்"
"கடவுள் பெண்ணா டேடி?"
"தெரியாது"
"ஜீசஸ் தான் கடவுள் என்கிறார் பாட்டி. ஜீசஸ் ஒரு ஆண் தானே?"
"ஆமாம்"
"அது சரியில்லை டேடி. ஐ மீன்.. கடவுள் ஏன் ஆணாக இருக்க வேண்டும்?"
"தெரியாது. ஆனால் உன் கேள்வி புத்திசாலித்தனமானது"
"கடவுள் ஒரு மிருகமோ?"
"தெரியாது"
"இந்தியா பாட்டி உனக்குக் கொடுத்த படங்களில் இருப்பது போல.. ஒரு வேளை இந்தியக் கடவுள்கள் மட்டும் மிருகங்களோ?"
"தெரியாது"
"உனக்கு ஒன்றுமே தெரியவில்லை டேடி"
"ஹிஹி"
"சிரிக்காதே.. அப்ப கடவுள் என்னைத் தண்டிக்கமாட்டார் என்பது மட்டும் எப்படித் தெரியும்?"

    கடவுள் தண்டிக்கிறாரோ இல்லையோ, கண்மூடி மனிதர்கள் தண்டிப்பார்கள் என்ற கவலை எனக்கு உண்டு. இத்தனை வளர்ச்சிக்குப் பின்பும் கடவுள்-மத நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. அமெரிக்கச் சமூகம் என்றில்லை, உலகச் சமூகமெங்கும் இதே கதை. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை விசித்திரமாகப் பார்க்கும் பார்வை. எண்ணம். செயல். 

உரையாடல்கள் நிற்கவில்லை. சில வருடங்கள் பொறுத்து:
"அப்பா.. கடவுள் நம்பிக்கையில்லைனு என் டீச்சர் கிட்டே சொன்னேன்.. ரொம்பக் கோபமாயிட்டாங்க.. நீ நாளைக்கு ஸ்கூலுக்கு வந்து டீச்சரையும் ப்ரின்ஸ்பலையும் பார்த்துப் பேசணும்"
பள்ளிக்குச் சென்று, பிள்ளைகளின் ஆசிரியருடன் பேச்சு வார்த்தை. போராட்டம்.
"உங்கள் பிள்ளை நம் நாட்டின் அடிப்படை நம்பிக்கைகளை ஏற்க மறுக்கிறார்" 
"அடிப்படை நம்பிக்கைகள்... என்றால்?" 
"ஹ்ம்ம்.. உங்களுக்குத் தெரிந்திருக்குமே.. கடவுளை நம்புகிறோம் என்பதே..you know.. in god we trust"
"நான் அறிந்தவரை அமெரிக்காவின் அடிப்படை நம்பிக்கை அதுவல்ல. அமெரிக்கா தோன்றிய தினத்திலிருந்து அதன் அடிப்படை நம்பிக்கைகள் வாழ்வு, சுதந்திரம், மகிழ்ச்சிக்கானத் தேடல் இவ்வளவே.. life, liberty and pursuit of happiness.. and our allegiance.. liberty and justice.. you should check it out"
"இருக்கலாம்.. எனினும் நாம் அனைவரும் கடவுளின் கண்காணிப்பில் ஓர் நாட்டு மக்கள்.. we are one nation under god.. அதை மறக்கக் கூடாது"
"சரி"
"நீங்கள் இந்தியக் கடவுள்களை நம்புகிறீர்களோ ஒருவேளை?"
"கடவுள்கள் நாட்டு எல்லைகளுக்குட்பட்டவர்கள் என்பது தெரியாது. i didn't know gods had nationalities or operated within borders.. but, no, we don't believe in any god"
"தேவையில்லாத கிண்டல். but seriously, there is no pursuit of happiness without god.. கடவுள் இல்லாமல் மகிழ்ச்சியே கிடையாது.."
இவருடன் பேசி என்ன பயன் என்று தோன்றியது. ஏதோ சமாதானம் சொல்லி வெளியே வந்தேன். மாலை வீடு வந்ததும் பிள்ளைகளிடம் இனிமேல் இது போல் பள்ளியில் பிரச்சினை கிளப்ப வேண்டாம் என்றேன்.
"ஏன்?"
"டீச்சர்களுக்கு உன் நிலை பிடிக்கவில்லை" 
"அப்படின்னா.. இப்ப கடவுளை நம்புறதா சொல்லணுமா?" 
"தேவையில்லை.. கடவுளை நம்பவில்லைனு சொல்லாமல் இரு போதும்" 
"ரெண்டும் ஒண்ணு தானே?" 
"இத பாரு. கடவுள் நம்பிக்கையில்லைனு சொல்லாதேனு சொல்றேன்.. ரெண்டும் ஒண்ணு தான்.. ஆனா வேறே" 
"whatever.."
"இத பாரு.. இதைப் பெரிசு படுத்தாதே.. உன்னோட கடமை வேலை எல்லாம் படிப்புல கவனம் செலுத்தி நல்ல மாணவரா இருக்க வேண்டியது தான்.. புரியுதா?" 
"அப்போ.. டீச்சர் கேட்டா.. என்னைப் பொய் சொல்லச் சொல்லுறே" 
"இல்லை.. உண்மையைச் சொல்ல வேண்டாம்னு சொல்றேன்.."
"whatever.."
அத்துடன் அன்றைய மாலையின் நிம்மதி தொலைந்தது.

    ஆத்திகச் சமூகத்தில் ஆத்திகப் பிள்ளை வளர்ப்பே எளிதல்ல. எனில், நாத்திகப் பிள்ளை வளர்ப்பு !!

3 comments:

சே. குமார் said...

ஆத்திகச் சமூகத்தில் ஆத்திகப் பிள்ளை வளர்ப்பே எளிதல்ல. எனில், நாத்திகப் பிள்ளை வளர்ப்பு என்பது கஷ்டம்தான்... இருந்தாலும் நாத்திகரோ ஆத்திகரோ அவரவர் வழியில் சென்றால் எல்லாம் சரியாகும்...

கரந்தை ஜெயக்குமார் said...

கடமையை சரிவரச் செய்வோம். கடமையினையேக் கடவுளாய் பார்ப்போம்

பாரதசாரி said...

என் இரு புஷ்பங்கள் நிஹாரிகாவும் , ஹரிணிகாவும் இப்படி தான் என்னை கேட்பார்களோ? பதில் தேடும் நேரம் வந்துவிட்டது எனக்கு:)