Sunday, August 01, 2010

theatre....7

விவசாயிகளின் ஆயுத எழுச்சியை ராணுவத்தைக்கொண்டு அடக்கிவிட்டார்கள்.நிஜாமிடமிருந்து விடுதலை பெற்று மூன்று ஆண்டுகள் நிர்வாகம் செய்தது வெளியே தெரியாமல் இருக்குமா? தெற்கு மரத்வாடா பகுதி,ஒரிசா,பீஹார் விவசாயிகளும் யோசிக்க ஆரம்பித்தார்கள்.மத்திய அரசு இதனைத்தடுக்க திட்டம் போட்டது.ஒன்று தோழர்களை அடக்கி ஒடுக்குவது.விவசாயிகளை ஏமாற்றுவது.இதற்காக அவர்கள் போட்டதுதான் "பூமி தான இயக்கம்"


விவசாயிகளின் நிலத்தைப் பறித்த பாவிகள் அதே மிட்டா,மிராசுகளிடமிருந்து நிலத்தை தானமாகப் பெற்று,விவசாயிகளுக்கு அளிப்பதுதான் "பூமி தான இயக்கம்".அரசின் பண,பலத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கத்திற்கு தலைமை தாங்கியவர் அந்த "பௌனார்" ஆசிரமத்துச் சாமியார் ஆசார்ய வினோபா பாவே ஆவார். 1975ம் ஆண்டு 'முழுப் புரட்சி'(Total Ravolution) என்று அறிவித்த' லோக் நாயக்' ஜெய ப்ரகாஷ் நாராயணன் இந்த இயக்கத்தின் புரவலர்.

தெலிங்கானாவின் 'போச்சம்பள்ளி' கிராமத்தில் ஆரம்பித்து இந்தியா முழுவதும் நிலதானம் கேட்டுவந்தார் பாவே. தமிழ்நாட்டுக்கும் வந்தார்.அப்போது சேலம் மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள கிராமத்துக்கும் வந்தார்.மேட்டூர் மின் இலாகாவில் பணியாற்றி கொண்டிருந்தவர்கள் அவரைப் பார்க்க ஓடினார்கள்.அப்படி ஓடிய பாவிகளில் நானும் ஒருவன்'.கீதைப் பேருரை' புத்தகத்தில் அவருடைய கையெழுத்தையும் பெற்றுக் கொண்டேன்.

இந்தியா முழுவதும் நடந்தே சுற்றி வந்தார். இந்த மொசடி பற்றி எழுத்தாளர்களும் கலை୍ஞர்களூம் தங்கள் படைப்பில் சித்தரித்தார்கள்.

வரண்ட நிலப்பகுதியில் வசிக்கும் நிலமற்ற விவசாயி தன் பகுதிக்கு பாவே வருவதைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைகிறான். அந்தக் கூட்டத்திற்கு சென்ற அவனுக்கும் ஒரு துண்டு நிலம் கிடைக்கிறது.கல்லும் முள்ளும்.பாறையுமான நிலம்.ஆனாலும் நிலம் நிலந்தானே.உழைக்கலாமே. உழைக்கிறான்.அவன்,அவன்மனைவி, குழந்தை குட்டிகள் என்று உழைக்கிறார்கள்.விளைநிலமாக மாற்ற மேலும் பணம் வேண்டும்.கந்துவட்டிக்கு கடன் வாங்க்குகிறான்.பாறையை உடைக்க மேலும் கடன். உழைத்து உழைத்து ஓடாகிறது அவன் குடும்பம்.ஓட்டாண்டியாய் கோவணத்தோடு அலைகிறான்.

பாவே மீண்டும் அதே கிராமத்திர்க்கு வருகிறார்.இவனும் போகிறான்.பாவே ஊர்ப் பெரியவர்களைப் பார்த்து மேலும் நிலமிருந்தால் கொடுங்களேன் என்று கேட்கிறார்.சபை அமதியாகிறது.அவன் எழுகிறான்."நிலமா வேண்டும்,இந்தா.." என்று கூறி கோவணத்தை அவிழ்த்து பாவேயின் முகத்தை நோக்கி வீசுகிறான்.

"தானம்" என்ற இந்த கதையை கிஷன் சந்தர் இந்தி யில் எழுதினார். தானம் தமிழில் நாடக மாக நடிக்கப்பட்டது

0 comments: