Sunday, August 15, 2010

what is time?...2

காலம் என்றால் என்ன? என்ற கேள்வியை எழுப்பி இடுகை எழுதியிருந்தேன்."நல்ல தத்துவ விசாரணையில் ஆரம்பித்து இறைவனிடத்தில் சரண டைந்து விட்டீர்களே" என்று எஸ்.வி வேணு கோபால் விமரிசித்து எழுதியிருந்தார்.
காலம் இரண்டு சம்பவங்களுக்கிடையே உள்ள இடைவெளி.சம்பவம் என்றால் ? உதாரணமாக விதை பூமியைத்துளைத்துக் கொண்டு முளையாக வெளிவருகிறது.முளை செடியாகிறது.விதைக்கும் முளைக்கும் இடவெளி உண்டு.முளைக்கும் செடிக்கும் இடையேயும் இடவெளி உண்டு.
விதை இல்லை என்றால் முளை இல்லை.முளை இல்லை என்றால் செடி இல்லை.இவை இல்லை என்றால் இடைவெளி இல்லை. இடவெளி இல்லை என்றால் காலமும் இல்லை.
விதை என்ற "பொருள்" இல்லை என்றால் காலம் இல்லை.
பொருள் இல்லை என்றாலும் காலம் இருக்கும் என்று ஜெர்மனிய தத்துவ ஞானிகள் வாதிட்டனர்." இயற்கையின் தர்க்கவியல்" என்ற நூலில் ஏஞ்சல்ஸ் இதனைத் மறுத்து விரிவாக எழுதி உள்ளார்.
பொருள் இல்லை என்றால் காலம் இல்லை எனும்போது,காலமே இல்லாதபோது புண்ணாக்கு கடவுளுக்கு ஏது இடம் நண்பா?
(கைப்பந்து விளையாட்டில் ரிசீவர்,லிஃப்டர்,ஸ்டிரைக்கர் என்று உண்டு.,பின்னூட்டமிடுபவர் இங்கு லிஃப்டர். நீங்கள் தூக்கிக் கொடுத்தால் நாங்கள் அடிக்க வசதியாக இருக்கும்.)

4 comments:

venu's pathivukal said...

இனிய தோழர் காஸ்யபன் அவர்களுக்கு.

இறைவனிடத்தில் சரணடைந்தது (www.kashyapan.blogspot.com ) என்று சொன்னது காஸ்யபனை அல்ல. கட்டுரையை...
காலம் குறித்த அந்த இடுகை இன்னும் ஆழமான விவாதப் பொருளுக்கான கருவாக இருந்ததே, அது ஏன் ஒரு புள்ளியில் நின்று விட்டது என்பதே அந்தக் கேள்வியின் பொருள். நல்லது...இப்போது இன்னும் விரிவடைந்து வந்திருக்கிறது.

ஏன் கைக் கடிகாரம் கட்டிக் கொள்வதில்லை என்று எனது தந்தையார் ஒரு முறை என்னை விசனத்தோடு கேட்டார். அளக்க இயலாத காலத்தை, கேவலம் மணிக்கட்டில் கொண்டு வந்து கட்டிப் போடுவானேன் என்று அவருக்கு ஒரு பதிலைச் சொல்லி வைத்தேன்.

நேற்று வந்திருக்கும் வண்ணக் கதிரில், புதுச்சேரி அன்பழகன் (அவரது வலைப்பூ: http://puducherryanbazhagan.blogspot.com ) இயற்கையைப் படைத்தது யார் என்ற விவாதத்தை நடத்தி இருக்கிறார். அவரது வலைப்பூவிலும் இது வந்திருக்கிறது. இயற்கை தன்னைத் தானே படைத்துக் கொண்டது என்று ஒரு சிறுமி சொல்வதாக வரும் இடம் அருமை.

மகாபாரதத் தொடர் தொலைக்காட்சியில் வந்த போது, அதில் காலம் தான் கதை சொல்லி. மரணம் அடைந்தவர் காலமானார் என்று சொல்லும் நமது எழுத்துலகம், அகால மரணம் என்ற சொல்லாடலையும் பயன்படுத்துகிறது. காலத்தினால் செய்த நன்றி...என்று பேசுவார் வள்ளுவர். காலம் கருதி இந்த உரையை....என்று சுருக்கமாக முடிப்பார் பேச்சாளர். ஓடுகின்ற ஓடை நீரில் ஒரு கையள்ளிப் பருகும் நீரை மீண்டும் அள்ளி எடுக்க முடியாது என்றார் புத்தர். அது வேறு இடம் பெயர்ந்து விட்டது. அந்த நீர் இப்போது வேறு நீர் என்பதையே க்ஷணிக தத்துவம் என்றார். ஹைசன்பெர்க் என்ற விஞ்ஞானி நிச்சயமற்ற கோட்பாடு என்று (Uncertainty principle ) எடுத்துக் கொடுத்ததை, ஐன்ஸ்டீன் இன்னும் வளர்த்தெடுத்து குவாண்டம் தியரி வழங்கினார். மாறும் என்பதைத் தவிர இப்புவியில் எல்லாம் மாறும் என்று மார்க்ஸ் சொன்னதை அறியாதவர் எவரும் அறிவுலகில் இல்லை.

கணிதத்தில் எட்டு செ.மீ. கோடு வரையச் சொல்லும்போது, நீளமான கோடு வரைந்து அதில் எட்டு செ மீ அளவெடுத்து வெட்டிக் காட்ட வேண்டும். நாம் எழுதும் வரலாறுகள், இப்படி எல்லையற்று இருபுறமும் விரிந்து செல்லும் கால வெளியில் வெட்டிக் காட்டும் பகுதிகளே.

அளக்க முடியாத தன்மை காலத்தின் பெருமை அல்ல. அதனால் தான் அதன் பெயர் காலம்.
காலத்தின் துகள்களில் இருந்து பிறக்கும் உயிர் பின்னர் அதோடு ஐக்கியம் அடைந்து விடுகிறது. அது காலமானாலும் சரி, அகாலமானாலும் சரி...

எஸ் வி வேணுகோபாலன்

ராம்ஜி_யாஹூ said...

நல்ல சிந்தனையை தூண்டும் பதிவு. நன்றிகள் பகிர்ந்தமைக்கு.

வேறு ஒரு விதமாக அணுகினால், பூமி சூரியனை /சந்திரனை சுற்றி வரும் காலம் /நேரம்/இடைவெளி காலம் என்று கருதலாமே. அந்த அணுகுமுறையில் விதை, இல்லை, முளை, உயிரினம், தாவரங்கள் , விலங்கினம், பூசாரி, பக்தன் எதுவும் தேவை இல்லையே.

kashyapan said...

நன்றி எஸ்.வி.வி!உங்களை போன்றவர்களின் பின்னூட்டங்கள்தான் என்போன்றவர்களுக்கு உயிர்ச்சுவை."காலவெளி" என்று ஒரு சொல்லாடலைப் பயன் படுத்தியுள்ளீர்கள்..(Time and Space) காலமும்,வெளியும் வெவ்வேறா? ஐயா! அந்த ஜெர்மானிய தாடிக்கார மாமுனிவர்கள் அதையும் சொல்லி இருக்கிறார்கள்.சந்தர்ப்பம் வரும்போது விவாதிப்போம்.
நன்றி ராம்ஜி யாஹூ! பூமி சூரியனைச்சுற்றுகிறது.சரி.சந்திரனை பூமி சுற்றுவதில்லையே!....... காஸ்யபன்..

பாரதசாரி said...

அற்புதமான தலைப்பில் அறிவுப்பூர்வமான பதிவு,
வேணு அவர்களின் பின்னூட்டம் மிக மிக மிக அருமை...