கலர் சட்டை நாத்திகம் .......!!!
(அப்பாதுரை அவர்களின் இடுகை-மீள்பதிவு )
தமிழில் நாத்திகம் பற்றி எழுதப்பட்டிருந்தாலும், நான் தேடியவரை, செருப்படிச் சிந்தனைகளே அதிகம் தென்படுகின்றன.
செருப்படிச் சிந்தனை? உங்களுக்குத் தெரிந்திருக்கும் எனினும், அடையாளம் காட்டுகிறேன். கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி, கடவுள் சிலையை உடை, பார்ப்பனப் பீடைகள் போன்ற இனவெறி மற்றும் கலவரம் தூண்டும் கருஞ்சட்டைச் சிந்தனைகள். இவற்றை கொள்கை அடிப்படையாக வைத்துக் கழகங்கள் ஆட்சியைப் பிடித்து ஐம்பது வருடங்கள் போலாகின்றன. ஐம்பதாண்டுகளில் புதிய கோவில்கள் ஆயிரக்கணக்கில் வந்திருக்கின்றன. புதிய கடவுள்களும் வந்திருக்கின்றன. கண்மூடித்தனம் கூடியிருக்கிறது. நாத்திகம் இக்கழகங்களின் வாக்கு வங்கிக்கான வழியானது தவிர வேறு பயனில்லை.
போகட்டும், இது அரசியல் பற்றியத் தளமல்ல.
படிப்புக்கும் அறிவுக்கும் தொடர்பில்லை என்பதற்கானத் தலையாய உதாரணம் - கடவுள் நம்பிக்கை. 'கடவுள் எதிர்ப்பே பகுத்தறிவு' என்றப் பொய்யானப் பிரசாரத்தைத் தழுவியதால் பகுத்தறிவின் பயனே காணாமல் போய்விட்டது என்று நினைக்கிறேன். இதுவும் கருஞ்சட்டை வாதத்தின் பலன். ஒரு முற்போக்குப் பெரியவர் வகுத்தப் பெருஞ்சாத்தியப் பாதை, வெறுப்பிலும் பகையிலும் முட்டாள் நாத்திகத்திலும் முடக்கப்பட்டிருப்பது வருந்த வைக்கிறது. கருஞ்சட்டை வாதம் சிலரின் வயிற்றுப் பிழைப்பானதே தவிர வேறு பயனில்லை.
போகட்டும், இது கருஞ்சட்டை பற்றியத் தளமுமல்ல.
நான் அரசுப் பதவியை நாடவில்லை. நாத்திகம் எனக்கு வயிற்றுப் பிழைப்பல்ல. நான் ஒரு சாதாரணன். கலர் சட்டை அணிபவன். நூற்றுக்குச் சற்றே மேற்கிலான ஐக்யூ கொண்ட, சராசரிப் பகுதி நேரச் சிற்றறிவாளன். அறிவில் ஞானியல்ல, சோனி. எனினும் எத்தனையோ பேர் எழுதியதைப் படிக்கும் வாய்ப்பும், சில உண்மையான ஞானிகளுடன் பழகும் வாய்ப்பும் பெற்றவன். நினைவறிந்த நாள் முதல், சந்தேகங்கள் இருந்தாலும் என் மேல் திணிக்கப்பட்டச் சடங்கு தோய்ந்த நம்பிக்கைகளைக் கேள்வி கேளாமல் ஏற்று, பல நேரம் இணங்கியிருக்கிறேன். கடவுள் நம்பிக்கை ஒரு கேள்விக்குறியாக, தேவைக்கேற்ப வந்து போகும் வழக்கமாக இருந்தாலும், என் மனமறிந்து கடந்த பத்து ஆண்டுகள் போலவே நாத்திகம் பழகி வருகிறேன். கடவுள்/மத நம்பிக்கை, பல வகைச் சமூகக் கேடுகளின் வேர் என்று இப்பொழுதுத் தீர்மானமாக நம்புகிறேன்.
கடவுள் நம்பிக்கை, காலப்போக்கில் தானாகவே அழிந்துவிடும் என்றும் நம்புகிறேன். எனினும், அப்போக்கிற்கு என்னால் இயன்ற ஒரு சிறு அவசரத்தைப் புகுத்த விரும்புகிறேன். அறிவார்ந்தச் சிந்தனைகள் நாத்திகத்திலும் உண்டு என்பதை முன்னிறுத்த விரும்புகிறேன். அசல் நாத்திகத்தில் செருப்படி கிடையாது, பார்ப்பனர் என்றக் கூக்குரல் கிடையாது, க்ருஷ்ணன்-அல்லா-யேசு எல்லாரும் ஒருவரே என்ற வசதிக்கேற்ற உதவாக்கரை வாதங்கள் கிடையாது.. என்று அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். 'சிலையென்றால் சிலை, தெய்வம் என்றால் தெய்வம்' போன்ற சினிமாத்தனம் நாத்திகத்தில் கிடையாது என்று சொல்ல விரும்புகிறேன். 'இதுவும் கடவுள் அதுவும் கடவுள்' என்று இருப்பதையெல்லாம் கடவுள் எனும் குறிக்கோளற்ற ஆத்திகம் பற்றிச் சொல்ல விரும்புகிறேன். ஆத்திகம் பழகுவது சமூகத்துக்கு ஆபத்து என்று ஆதாரத்தோடுச் சொல்ல விரும்புகிறேன். நாத்திகம் பழகுவதால் நரகம் கிடைக்காது என்று நாலு பேருக்குச் சொல்ல விரும்புகிறேன். இது அதற்கானக் தளம்.
நான் நாத்திகன் என்பதில் எனக்கு ஒரு அச்சம் உருவாகியிருக்கிறது. நான் பழகும் சமூகத் தட்டுகளில் விவரிக்க முடியாத ஒரு ஒதுக்கலை என் பால் உணரத் தொடங்கியிருக்கிறேன். எனினும், விவரிக்க முடிகிற ஒரு விடுதலை உணர்வையும் அறிகிறேன். என் பிள்ளைகளிடமும் பிறரிடமும் இதுகாறும் சொல்லி வந்த பொய்களையும் கதைகளையும் சாக்குகளையும் இனிச் சொல்ல வேண்டியதில்லை என்ற விடுதலை. என்னையும் மனிதத்தையும் தவிர எதையுமே நம்பவேண்டியதில்லை என்ற விடுதலை. இல்லாத ஒன்றை நம்பிப் பாவ புண்ணியக் கணக்குகளையும், பிறவிக் கணக்குகளையும் கண்டு பயப்படும் பேதமை நீங்கிய விடுதலை. இது என் விடுதலைத் தேடல்களையும், விடுதலைப் போராட்டங்களையும் கொண்டாட்டங்களயும் பகிர்ந்து கொள்ள ஒரு தளம்.
நாத்திகம் பற்றி எழுதத் தொடங்கி, நிறுத்தி, மீண்டும் தொடங்கியிருக்கிறேன். நிறையச் சொல்ல விரும்புகிறேன். ஒரு புத்தகத்துக்கானக் குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறேன். எனினும், மறுதுவக்கம் என்ற என் முனைப்பிலே சோர்வின் படிமம் சேர்ந்திருப்பதையும் உணர முடிகிறது. சீரியச் சிந்தனையாளர் நண்பர் ரமணி தன் படைப்பு ஒன்றில் சொன்னது:
இரண்டு பத்திகள் எழுதியதுமே 'இது குறித்து ஆயிரம் பேர் எழுதிவிட்டார்கள்' என யதார்த்தம் லேசாய் முனங்க, 'இதை விட சிறப்பாக எனச்சொல்' என வெறுப்பேற்றுகிறது தர்க்கம்.
நாத்திகம் பற்றி நீண்டப் பதிவெழுத நினைக்கும் என் உணர்வுகளின் பிம்பம், ரமணியின் வரிகள். 'யதார்த்தமும் தர்க்கமும் படைப்புக் கர்ப்பிணியின் அரக்கத் தாதிகள்' எனும் ரமணியின் மற்றொருக் கருத்தைக் கடன் வாங்கி, என் நிலை காட்டும் கண்ணாடியாக உங்கள் முன்வைக்கிறேன்.
எனினும், 'விடப்போவதில்லை' என்றத் தீர்மானத்தின் விளைவு, இந்த முயற்சி. தனிச் சிந்தனைக்கானத் தனி வலைப்பூ. இதில் கதையுண்டு, கட்டுரையுண்டு, கவிதையுண்டு, மேற்கோளுண்டு, மொழி கடந்த சிந்தனைகளுண்டு - இவை அனைத்தையும் கட்டும் மெல்லிய கயிறு, நாத்திக இரும்பில் நெய்தது.
படிப்பவர் மனங்களில் ஆத்திகம் பற்றிய ஒரு மிகச் சிறியச் சந்தேக அலையைக் கிளப்பினாலும் அது எனக்கு மிகப்பெரிய வெற்றி. எனினும், என் எழுத்தின் நோக்கமல்ல. 'நாத்திகம் பற்றிய வெட்கம் தேவையில்லை', 'நாத்திகச் சிந்தனை இளவயதிலேயே வளர்க்கப் படவேண்டிய ஒன்று' என்ற அளவில் ஒரு தெளிவை உருவாக்குவதே என் எழுத்தின் நோக்கம்.
அரக்கத் தாதிகள் என்னை அண்டவிடுவதில்லை என்று இப்போதைக்குத் தீர்மானித்திருக்கிறேன் :)
உடன் சிந்திக்க அழைக்கிறேன்.
5 comments:
எழுதுங்கள் தோழரே!, சமீபத்தில் தமிழ்மகன் எழுதிய ‘வெட்டுப்புலி’ எனும் நாவலை வாசித்தேன். திராவிட இயக்கம், தமிழ்சினிமா 20ம் நூற்றாண்டிலிருந்து 21ம் நூற்றாண்டுவரை நாவல் பயணிக்கிறது. அதில் திராவிடப் பாரம்பரியம் மெல்ல மெல்ல தேய்கிறது. கடவுளை கிண்டலடித்த்வர்க்ள் சாய்பாபாவை வீட்டிற்கு வரவழைத்து ஆசி வாங்கும் அள்வுக்கு போய்விட்டது.
சுயசாதியையும் மதத்தையும் விட்டு வெளியே வருவது பெரிய விடுதலை தான், முயன்றுவருகிறேன்.
எழுதுங்கள் ஐயா. தொடரக் காத்திருக்கின்றேன். தாங்கள் உணர்ந்த விடுதலைக் காற்றைச் சுவாசிக்கக் காத்திருக்கின்றேன் ஐயா
கரந்தை அவர்களே ! இது என்னுடைய இடுகை அல்ல ! எனது நண்பர் சிகாகோவில்வசிக்கும் நெல்லைதமிழர் ! இந்திய வம்சாவளியைச்சேர்ந்த வேற்று மதத்தில திருமணம் கொண்டு வாழ்கிறார் ! இவை அத்துணையும் அவருடைய பாடுகள்! இந்திய தத்துவஞான பொக்கிஷமான உபநிஷத்துகளில் நல்ல பரிச்சயம் கோண்டவர் ! அதில் மிகவும் முக்கியமான "கடோப நிஷத்தை" வேண்பாவாக தமிழில் பாடியிருக்கிறார் ! நசிகேதன் என்ற சிறுவனுக்கும் யமனுக்கும் நடக்கும் அறிவியல் விவாதம் தான் அவரல் வெண்பாவில் "நசிகேத வேண்பாவா"க ஆக்கப்பட்டிருக்கிறது ! அற்புதமான தமிழ் நூல் ! அவர் எழுதிவரும் கலர் சட்டை நாத்திகம் இடுகையிலிருந்து மீள்பதிவு செய்தது தான் இது ! ---காஸ்யபண்
என் உளமார்ந்த நன்றி. இது பெரிய அங்கீகாரம்.
எழுதுங்கள் ஐயா.
Post a Comment