Friday, August 23, 2013

கலர் சட்டை நாத்திகம் ....!!!

(சிக்காகோவிலிருந்து நண்பர் அப்பாதுரை அவர்களின்"கலர்சட்டைநாத்திகம் "
இடுகையிலிருந்து )



          குருட்டு நம்பிக்கையிலிருந்து அறிவுப்புறம் வருவோம். மனித இயக்கத்துள் காணப்படும் ஒற்றுமைகளுக்கும் வேற்றுமைகளுக்கும் என்ன பொருள் என்று அறிவியல் நோக்கில் கேள்விகள் ஒருபுறமும், தத்துவ வேதாந்த நோக்கில் கேள்விகள் மறுபுறமும், கேட்கப்பட்டும் பதில்கள் தேடப்பட்டும் வருகின்றன. மனித வேதியலை மரபணுக்களின் அடிப்படையில் தனித்தனியாகப் பிரித்துத் தொகுத்து, ஏறக்குறைய இன்ன புறக்குணங்களுக்கு இன்ன மரபணுக்கள் சாத்தியமாகின்றன என்று வகுத்தும் விட்டார்கள். ஆராய்ச்சிகளில் வெகுதூரம் வந்திருக்கிறோம், பலவகை சாத்தியங்களும் சான்றுகளும் அலசப்படுகின்றன - இன்ன அகக் குணங்களுக்கு இன்ன அணுக்கள் காரணம் என்றுத் தொகுத்து முடிக்கும் காலம் தொலைவில் இல்லை. 

மனித இன மூதாதை தோன்றி இரண்டு கால்களால் நடக்கத் தொடங்கியது முதல் இன்று வரையிலான பரிணாம வளர்ச்சிக்கு நாற்பதிலிருந்து ஐம்பது லட்சம் வருடங்கள் போல் பிடித்திருக்கிறது. பூமி அதற்கு முன் பல கோடி ஆண்டுகளாக, ஏறத்தாழ நானூறு கோடி வருடங்கள், உருப்பெற்று வளரத் தொடங்கியிருக்கிறது. அதற்கு ஆயிரம் கோடி வருடங்கள் முன்பே அண்டம் வெடித்து பூமி உண்டாகத் தொடங்கியது. பூமி வெப்பம் அடங்கி வளரத்தொடங்கவே ஆயிரம் கோடி வருடங்கள் போல் பிடித்திருக்கிறது. அதற்குப் பின் முதல் மனித இனம் தோன்ற நானூற்று சொச்சக் கோடி வருடங்களாயின. தற்போதைய மனித இனத்தின் முன்னோடிகள் தோன்றி இரண்டு லட்சம் ஆண்டுகள் போல் ஆகிறது. அதிலும் மொழியறிவு தோன்றி ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஆகிறது. ஆக, மனித இனத்துக்கு முன்பாகக் கிருமிகள் முதல் மீன் செடி கொடி மிருகங்கள் என்று நிறைய வளர்ந்து அழிந்து வளர்ந்து அழிந்து ஒன்றல்ல, பல மாபெரும் பரிணாமங்கள் வளர்ந்து முடிந்திருக்கின்றன. இதற்கான ஆதாரங்களும் ஆய்வு அணுகு முறைகளும் விவரமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றை நம்பலாம். அல்லது விஷ்ணுவின் தொப்புள் கொடியில் சோம்பல் முறித்தபடி ஊழி நீர் வடியக் காத்திருந்து உலகையும் மனிதரையும் படைத்தார் பிரம்மன் என்பதை நம்பலாம்.

1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அறிவியலை நம்பலாம் ஐயா