Sunday, August 18, 2013

கலர்சட்டை நாத்திகம் .....!!!

(சிகாகோ நண்பர் அப்பாதுரை அவர்களின் "கலர்சட்டை" நாத்திகத்திளிருந்து)          மனித ரத்தம் ஒரே நிறம் தான். ஆனால் அந்த ரத்தத்தினால் இயங்கும் உடலும் மனமும் வெவ்வேறாக இருக்கின்றன. 'படைக்கும் கடவுள்' பிரம்மனுக்குத் தெரியுமோ என்னவோ, நமக்கு நம்மைப் பற்றி நிறையத் தெரியத் தொடங்கியிருக்கிறது.

டிஎன்ஏ ஆய்வினால் இன்றைக்கு நம்மைப் பற்றி, நம் வரலாற்றைப் பற்றி, நம் இயக்கங்களின் மூலாதாரம் பற்றிப் புதிதாக அறிந்துகொண்டே இருக்கிறோம். 

வெள்ளைக்காரன் உடலில் இயங்கும் அதே கொலஸ்டிரால் மருந்து கறுப்பனின் உடலில் சிறப்பாக இயங்காது என்கிற அளவுக்கு இன்றைக்கு நமக்கு விவரங்கள் தெரிந்திருக்கின்றன.

தென்கிழக்காசியக் குடிமக்களுக்கும் பண்டை ஆப்பிரிக்கருக்கரும் இடையில் பொது மரபணுக்கள் இருப்பதாக அறிகிறோம். 

சீனர் மற்றும் இந்தியரின் செவிமெழுகை விட, ஆப்பிரிக்க ஐரோப்பியரின் செவிமெழுகு கடும்வாடை அடிப்பதாக அறிகிறோம். 

ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் 'B' இரத்தப்பிரிவினர் அதிகம், Rh- பிரிவினர் மிக மிகக் குறைவு என்றெல்லாம் அறிகிறோம்.

பெண்களை விட ஆண்களுக்கு அக்குளிலும் பால்குறிப் பகுதியிலும் அதிகமாக வியர்க்கும் என்றும், ஆசியரை விட ஆப்பிரிக்கருக்கு வியர்வை சுரப்பிகள் அளவில் பெரியன என்றும் அறிகிறோம். 

'slc245a5' எனும் அணுவின் மிகச்சிறிய மாற்றுருக்களே நம் தோலின் பல நிறங்களுக்குக் காரணமாகிறது1 என்று அறிகிறோம். 

ஆண்டவர் தன்னுடைய பிம்பத்தை எடுத்து அதிலிருந்து அனைவரையும் படைத்தார் என்கிறது பைபில். போகட்டும். இத்தனை மாறுபாடுகளும் ஒரே பிம்பத்தால் வருகிறது என்று நம்புவோர், அதற்கும் ஒரு காரணம் வைத்திருப்பார்கள்.

கோவில் மரத்தைச் சுற்றியும் மண்டபத்தைச் சுற்றியும் அதன் பலனாய்ப் பிள்ளைகள் பிறப்பார்கள் என்று ஒரு புறம் நம்பிக்கையாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கட்டும். 'படைக்கும் கடவுள்' பல பார்முலாக்கள் வைத்திருக்கக் கூடும். தோன்றும் விதத்தில் பார்முலாக்களைக் கலந்து கட்டியிருக்கலாம். நாமென்ன கண்டோம்? பிள்ளை வேண்டி மரம் சுற்றும் பக்தகோடிகள், அக்குளில் வியர்வை வராத நல்ல பார்முலாவாகப் பார்த்துக் கலக்கப் பரமனிடம் வேண்டிச் சுற்றட்டும். 'அம்மா கர்ப்பரட்சே.. வெங்கட்டாம்பேட்டை வேணுகோபால ஸ்வாமி... தூய மேரி.. ஒப்பற்ற ரட்சகி வேளாங்கண்ணித்தாயே.. புனித பாத்திமா.. பிஸ்மில்லாஹ் அர் ரஹ்மான் அர் ரஹிம்... எல்லாருமாகச் சேர்ந்து slc245a5 அணுவின் சரியான மாற்றத்தைக் கலந்து சிவப்பு நிற ஆண் குழந்தை ஒன்றை எங்களுக்கு அருளவும்' என்று வேண்டிக் கொள்ளட்டும். ஆண் குழந்தை என்றதன் காரணம், பெரும்பாலான ஆத்திகர்களுக்குப் பெண் குழந்தை பிடிப்பதில்லை - சிவப்பு நிறத்தொரு பெண்ணாக இருப்பினும். கடவுள் கலவையை ஆத்திகம் நாடுவது... அதுவும் சந்தேகமே. 

பிறமதக் கடவுளைப் பொருத்தமட்டில் எல்லா ஆத்திகர்களும் நாத்திகர்களே !!!காரணம், பிற மதக் கடவுள்களைப் பொறுத்தமட்டில் அனைத்து ஆத்திகரும் நாத்திகரே.

2 comments:

Somasundaram Hariharan said...

//பிறமதக் கடவுளைப் பொருத்தமட்டில் எல்லா ஆத்திகர்களும் நாத்திகர்களே !!!//

ஆமாம், பிறமதத்தவர் மாற்று மதத்தினர் வழிபடும் கடவுளை சைத்தான் என்கிறார்கள், இன்னொரு குரூப் தேவ தூதர்களை தூஷிக்கிறார்கள்...கொஞ்சம் கூட பயமில்லையே!!

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை ஐயா, நன்றி