Sunday, August 25, 2013

கலர்சட்டை நாத்திகம் ......!!!

(சிக்காகோவிலிருந்து நண்பர்அப்பாதுரை  எழுதும் "கலர்சட்டை நாத்திகம் " என்ற இடுகையிலிருந்து ) 

          நாத்திகம் பல வகைகளில் காணப்படுகிறது. 

'கடவுள் கிடையாது' என்போர் ஒரு வகை - atheism. 

'கடவுள் இருக்கலாம், அக்கறையில்லை' என்பார் ஒரு வகை - agnosticism. 

'இயற்கையே கடவுள், மற்றபடி உருவம் சக்தி எதுவும் கிடையாது' என்போர் இன்னொரு வகை - pantheism. இது இரண்டுங்கெட்டான் நாத்திகம். அல்லது இ.கெ ஆத்திகம். 

'கடவுள் இல்லை' என்ற பிரிவு மட்டுமே முறையான நாத்திகம். அசல் நாத்திகம். நாத்திகக் 'காவலர்கள்' இதை ஏற்க மாட்டார்கள் எனினும், மற்ற இரண்டையும் நாத்திகப் பிரிவுகள் எனலாம். நாத்திகம் ஒர் இலக்கு. அந்த இலக்குக்கானப் பாதைகள் பலவாக இருப்பதில் பாதகமில்லை என்று நினைக்கிறேன். 'இரண்டுங்கெட்டானை' நாத்திகத்தில் சேர்த்ததற்கான காரணங்களைப் பின்னர் பார்ப்போம். 

அசல் நாத்திகர் அழிவுப் பாதையில் செல்வதில்லை. சிந்தனைகள் ஆக்கச் சிந்தனைகளாகவும், அறிவார்ந்த வெளிப்பாடுகளாகவும் அமைகின்றன. 

அசல் நாத்திகத்தின் வேர், அறிவாகும். ஏதோ ஒரு அபார சக்தி அனைத்தையும் படைத்துக் காத்து அழிப்பதன் முரணை அறிந்துக் களையும் பக்குவம் கொண்டது அசல் நாத்திகம். இல்லாத ஏதோ ஒரு சக்தியின் மேலான நம்பிக்கையின் அடிப்படையில் மனித இனம் தனக்குள் உருவாக்கிக் கொள்ளும் கண்மூடித்தன சடங்கு வழிபாடு தொட்டப் பிரிவுகளையும் கொள்கைகளையும், அறிவார்ந்த நிலையில் எண்ணிக் களைந்து மனித நேயம் பெருக உழைப்பதே அசல் நாத்திகமாகும். 

அறிவிலி நாத்திகரையும் இங்கே அடையாளம் காண வேண்டும். நாத்திகம் என்ற பெயரில் கடவுள் அடையாளங்களை அழிப்பதும், கடவுளையும் கடவுளை நம்புவோரைத் தாக்குவதையும் செய்வோர் அறிவிலி நாத்திகர். அறிவிலி நாத்திகம் அசல் நாத்திகமே அல்ல. நாத்திகத்தில் கடவுள் எதிர்ப்பு கிடையாது. கடவுளே இல்லை எனும் பொழுது அசல் நாத்திகம் அதை எப்படி எதிர்க்கும்?

அறிவிலி நாத்திகம், ஆத்திகத்துக்கு ஒப்பானது எனலாம். அறிவிலி நாத்திகத்தின் வேர் ஆத்திகத்திலிருந்துப் பிரிந்ததாகும். ஆத்திகம் கடவுளை மனதில் நிறுத்தி வைத்திருக்கிறது. அறிவிலி நாத்திகமும் அதையே செய்கிறது - கடவுள் எதிர்ப்பையும் கடவுள் வெறுப்பையும் ஆத்திகர் எதிர்ப்பையும் மனதில் நிறுத்தி வைத்திருக்கிறது. ஆத்திகரை விட அறிவிலி நாத்திகரே கடவுளைப் பற்றி அதிகம் எண்ணுகிறார்கள் எனலாம். இதற்குப் புராணங்களில் பல உதாரணக் கதைகள் உள்ளன. கடவுள் வெறுப்பைத் தூண்டி அழித்து ஆதரவு தந்து ஏற்பதும் கடவுளே எனும் பாணியில் வரும் கதைகள். அறிவிலி நாத்திகர் இதை அறிய வேண்டும். அறிந்துத் திருந்த வேண்டும். ஆத்திகத்தின் வன்முறையும் பகையும் அறிவிலி நாத்திகத்தின் பண்புகள். ஆத்திகக் கண்ணாடியில் பார்த்தால் அறிவிலி நாத்திகம் தன்னைக் காணும். அறிவிலி நாத்திகக் கண்ணாடியில் பார்த்தால் ஆத்திகம் தன்னைக் காணும். ஆத்திகமும் அறிவிலி நாத்திகமும் அழிவுப் பாதையில் பயணம் செய்பவை.

ஆத்திகத்தில் ஆக்கச் சிந்தனைகள் குறைவு. அறிவார்ந்த வெளிப்பாடுகள் குறைவு. இதற்கான உதாரணங்களையும் ஆதாரங்களையும் பின்னர் பார்ப்போம். 

ஆத்திகத்திலும் பல வகை உண்டு. காணாததைக் கடவுளென்பது ஆத்திகம். எனினும், கண்டதையெல்லாம் கடவுள் எனும் ஆத்திகப் பிரிவும் உண்டு. புல்லும் கடவுள், புழுவும் கடவுள், கல்லும் கடவுள், கனியும் கடவுள், எங்கும் கடவுள் எதிலும் கடவுள் என்று முழங்கும் இந்தப் பிரிவு இரண்டுங்கெட்டானுக்கு பல தட்டுக்கள் கீழே எனலாம். 

ஆத்திகர்கள், அசல் நாத்திகரின் எதிரிகள் அல்ல. ஆத்திகர்கள் எப்படி எதிரிகளாக முடியும்? புறத்தே நாத்திகருக்கும் ஆத்திகருக்கும் எந்த வேறுபாடும் இல்லை. பார்ப்பதற்கும் பழகுவதற்கும் நாத்திகர்கள் போலவே ஆத்திகர்களும் காணப்படுகிறார்கள். இருவருக்கும் உள்ளது பகுத்தறியும் அறிவு தானே? ஆத்திகர் மட்டும் திடீரென்று இல்லாத ஒன்றன் பெயரைச் சொல்லி அறிவற்ற செயலோ அல்லது மனித நேயத்துக்குப் புறம்பாக ஏதேனும் செய்கிறார் என்றால்... அது அறியாமை. 'ஆ.. நெருப்புப் பக்கமே போகாதே' என்று அதட்டித் தன் குழந்தையைச் சிறு பொறியினின்றும் விலகச் சொல்லும் அதே வேளையில், 'தீபாராதனை நெருப்பை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்' என்று மணியடித்து முகத்தின் எதிரே நிறுத்தி வற்புறுத்தும் ஆத்திகரின் அறிவுப் பிறழ்சி மீது எரிச்சலோ கோபமோ படுவது முறையாகாது. ஆத்திகரின் அறியாமை களைய நாத்திகர்கள் உதவுவதே முறையாகும். 

மனிதம் இன்னும் பரிணாம வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த வளர்ச்சியின் பலனாகக் கடவுள் மதம் சடங்கு இனம் போன்ற மூட நம்பிக்கைகளும் பிரிவுகளும் ஒழிவது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்வதே அசல் நாத்திகமாகும். உணர்ந்து அதற்கேற்ற வழியினைத் தொடர்ந்து வகுப்பதே அசல் நாத்திகமாகும். அந்த வழியிலே பொறாமை கோபம் வெறி ஆத்திரம் வன்முறைகளைத் தவிர்த்து, குழம்பியிருக்கும் ஆத்திகரைப் பொறுமையாகக் கனிவுடன் தெளிவை நோக்கி நடத்திச் செல்வதே நாத்திகத்தின் கடமையாகும். நாத்திகத்தின் கடமையைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

1க்ரெகரி பார்ஷ் என்பாரின் அறிக்கை, ஸ்டேன்பர்டு பலகலைக்கழகம்

1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான பதிவு ஐயா. தொடருகின்றேன்