Saturday, December 21, 2013

(அமெரிக்காவில் சிகாகோ மாநிலத்தில் வசிக்கும் நண்பர் அப்பாதுரை அவர்கள் ! அமெரிக்க பிரஜையாகி அங்கேயே வசிக்கிறார் ! அவருடைய இடுகையை இங்கு மீள் பதிவு செய்துள்ளேன் )

"அஞசாத சிங்கம் "  





    ந்யூயோர்க் கவர்னர் என்றால் உங்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது யார்?

நினைவுக்கு வந்தவரை அங்கேயே சற்று நிறுத்திக் கொண்டு தொடர்ந்து படியுங்களேன், ப்லீஸ்.

இவன் பெரோஸ்பூரில் பிறந்த பிள்ளை. இரண்டு வயதில் அப்பா அம்மாவோடு அமெரிக்கா வந்தான். 

ந்யூஜெர்சியில் நடுத்தரமாக வளர்ந்த சாமானியன். இளைய வயதிலேயே குறிக்கோள் என்றால் என்னவென்று ஆசிரியர்களுக்குச் சொன்னவன். மிகச் சிறந்த மாணவர்களில் மிகச் சிறந்த ஒருவருக்கே கிடைக்கக்கூடிய பட்டமளிப்பு விழாவின் முதன்மை கௌரவத்துடன் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்தான். வேலடிக்டூரியன். ஆனால் இந்தக் கௌரவம் எல்லாம் சாதாரணம் என்பது உலகத்துக்குத் தெரியாது. ஹார்வர்டில் பட்டப்படிப்பு, தொடர்ந்து கொலம்பியா சட்டக்கல்லூரியில் மேல்படிப்பு முடித்து பிரபல ந்யூயோர்க் செனெடர் சக் சூமருக்கு உதவியாகத் தொடங்கி படிப்படியாக முன்னேறினான்.

தொடக்கத்தின் கேள்விக்கு வருகிறேன். இந்தக் கேள்விக்குப் பெரும்பாலும் ரூடி ஜூலியானி என்ற பதிலே கிடைக்கும். அதற்குக் காரணம் உண்டு. ரூடி ஜூலியானி, ந்யூயோர்க் மட்டுமல்ல அமெரிக்காவின் சிறந்த கவர்னர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர். கருதப்படுவார். கவர்னராக இருந்த போது அவர் மக்களுக்கு செய்தது என்னவோ சாதாரணம். ஆனால் செப்டெம்பர் 2011ல் அயோக்கிய அல்கேதா ந்யூயோர்க்கை நாசமாக்க முனைந்த போது தன் மேலாண்மை தலைமை எல்லாவற்றையும் பட்டை தீட்டி ந்யூயோர்க் நகரம் மீண்டும் தன் காலில் மீண்டும் நிற்க முன்மாதிரியாக இருந்தவர். அதைத் தொடர்ந்து ந்யூயோர்க் நகரில் தீவிரவாதிகளின் அடாத தொந்தரவுகள் இருந்தாலும் தீவிரவாதத்துக்குப் பணிய மாட்டோம் என்ற விடாத தீர்மானத்தையும் தன்னம்பிக்கையையும் நகர கலாசாராமாக்கியவர். இதான் ஜூலியானி. 

பெரோஸ்பூர் பிள்ளை ஒன்றும் லேசுபட்டவனல்ல.

இத்தாலிய மாபியா பற்றி எல்லாருமே அறிவார்கள். அமெரிக்காவின் கேம்பினோ மாபியா குடும்பம் பற்றிப் படித்தால் குலை நடுங்கும். நூறு வருடங்களுக்கு மேலாக வடகிழக்கு அமெரிக்காவை ஆட்டிவைத்த கொலைகார குற்றவாளிக் குடும்பம். அதன் அட்டூழியம் அடங்கிவிட்டது என்று இருபத்தைந்து வருடங்களுக்கு முன் நிறைய பேரை உள்ளே தள்ளி கேஸ் மேல் கேஸ் போட்டாலும் இழுத்து அடித்துக் கொண்டிருந்தார்கள். நம்ம பெரோஸ்பூர் பிள்ளை, வெளியே இருந்து உதவி வந்த இருபத்தாறு சக்தி வாய்ந்த மாபியா ஆசாமிகளை உள்ளே தள்ளினான். புது அரெஸ்டையும் பழைய அரெஸ்டையும் இணைத்து அத்தனையும் ஒட்டு மொத்தமாக உள்ளே தள்ளினான். கேஸ் வெற்றிகரமாக முடிந்து குற்றவாளிகள் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து யாரும் பெரோஸ்பூர் பிள்ளைக்கு ஒரு வாழ்த்து சொல்லவில்லை.

"நான் என்ன கோலி விளையாடறவனையா பிடிச்சு வந்து போட்டிருக்கேன்? சாராயம் காய்ச்சுறவனை பிடிச்சு உள்ளே போட்டிருக்கேன்.. கள்ளச் சாராயம் மேன்?" 

ரஜத் குப்தா. உலகப் புகழ் பெற்ற மெகின்ஸி நிறுவனத்தின் முதல் இந்தியத் தலைவர். மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சேக்ஸின் போர்ட் மெம்பர். சில்லறைக் காசுக்கு ஆசைப்பட்ட நிழல் ஊழல் பேர்வழி. யாராலும் தொடமுடியாது என்று நினைத்து சின்னதும் பெரியதுமான ஊழல்கள் செய்தவரை பச்சக் என்று பிடித்து உள்ளே போட்டான் பெரோஸ்பூர் பிள்ளை. 

அனில் குமார் என்று மிகப்பெரிய பொறுப்பில் இருந்த இன்டெல் விஞ்ஞானி. நம்ம நாட்டு ஆசாமி. ஊழல். பொன், பெண் என்று இரண்டுமே உண்டாம். பங்கு மார்கெட்டில் செய்த ஊழலைக் கண்காணித்து அவனையும் உள்ளே தள்ளினான் பெரோஸ்பூர்.

இலங்கையின் சூது மன்னன் ராஜரத்னம். பிலியன் கணக்கில் ஊரை ஏமாற்றியவன். அவனை உள்ளே தள்ளுவதில் குறியாக இருந்து வெற்றி பெற்றான் பெரோஸ்பூர் பிள்ளை. ரஜத் குப்தா, அனில் குமார் மற்றும் கூட்டாளி ராஜரத்னம் எல்லாரும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தர்மம் வெல்லும் என்ற பெரோஸ்பூர் பிள்ளைக்கும் இந்தியாவில் இருந்து யாரும் வாழ்த்து அனுப்பவில்லை.

மடியிலேயே கை வைக்குமா பிள்ளை? வைத்தது. தவறாக இருந்தால் எந்த மடியாக இருந்தால் என்ன? ந்யூயோர்க் மாநில செனெடர்கள் மூவரை ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்து நிரூபித்து மக்களை ஏமாற்றியக் குற்றத்துக்காக ஏழு வருடம் உள்ளே தள்ளினான் பிள்ளை. தனியானாலும் தலை போனாலும் தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன் என்ற பெரோஸ்பூர் பிள்ளைக்கு இந்தியாவில் இருந்து யாரும் ஒரு வாழ்த்து கூட அனுப்பவில்லை.

அபுதுல்வாலி, பெய்சல் ஷசாத் போன்ற அல்கேதா ஹெஸ்புல்லா தீவிரவாதிகளைக் கொஞ்சம் கூட பிசகாமல் விவரங்களை வரிசையாக அடுக்கி வழக்கு போட்டு உள்ளே தள்ளினான் பெரோஸ்பூர்.

"தீப்பெட்டிக்கு ஒரு பக்கம் உரசினாத்தான் தீப்பத்தும். இந்த பெரோசுக்கு எந்தப்பக்கம் உரசினாலும் பத்திக்கும்"

வேலியே பயிர் மேய்வதைப் பார்த்து நிற்பது நமக்கு ஒன்றும் புதிதல்ல. நமக்கு சூடு சுரணை எதுவும் கிடையாது. நாம் இந்தியர்கள். பெரோஸ்பூர் கொஞ்சம் வித்தியாசமானவன். ந்யுயோர்க் போலீஸ்காரன் ஒருவன் பெண்களைக் கடத்தி அவர்களை வெட்டித் துண்டு போட்டு சமைத்து சாப்பிடப் போவதாகப் பொதுவில் அறிவித்ததும் ஊரெல்லாம் பீதி. அவனை மிகச் சாதுரியமாக மிக விரைவில் பிடித்து உள்ளே தள்ளியவன் நம்ம பெரோஸ்பூர். பிடிபட்ட போலீஸ்காரன், "நான் சொன்னது எல்லாம் சும்மா ஸ்டன்ட். எனக்கு செல்வாக்கு இருக்கு.. வெளில வந்து உன்னை ரெண்டு பண்ணிடுவேன்" என்றபோது பெரோஸ்பூர் பிள்ளை லேசாகச் சிரித்து அவனை 'சரிதான் போடா' என்று நிரந்தரமாக உள்ளே தள்ளினான். "பொது மக்களுக்கு ஊழல் பேர்வழிகளால் ஆபத்து.. தீவிரவாதிகளால் ஆபத்து.. உன் போன்ற முட்டாள்களாலும் ஆபத்து" என்றான். இந்தியாவில் இருந்து அவனுக்கு ஒரு வாழ்த்தும் வரவில்லை.

பெரும் பணமுதலையான பேங்க் ஆப் அமெரிக்கா, வீட்டுக்கடன் ஊழலில் பிலியன் கணக்கில் திருடியதை கொஞ்சம் கொஞ்சமாக அடுக்கி நிரூபித்து தண்டனை வாங்கிக் கொடுத்தான் பெரோஸ்பூர். இந்த ஒரு வழக்கில் மட்டும் இவன் உயிருக்கு எத்தனை ஆபத்து வந்திருக்கும் என்று என்னால் சுமாராகக் கணிக்க முடிகிறது. பெரோஸ்பூரா பயப்படுவான்? அஞ்சாத சிங்கம் என் காளை. அத்தனை பேரையும் உள்ளே தள்ளி பிலியன் கணக்கில் அபராதம் வசூலித்தான். இந்தியாவிலிருந்து ஒரு வாழ்த்து கூட.. இல்லை, வரவில்லை.

Times பத்திரிகையின் 100 most influential people in the world பட்டியலில் இடம்பெற்ற பிள்ளை. அமெரிக்க இன்டியா அப்ராட் பத்திரிகையின் person of the year விருது பெற்ற பிள்ளை. 

அப்பேற்பட்ட ரூடி ஜூலியானியின் இடத்தில் இருந்து கொண்டு இத்தனை சாதனைகளையும் வரிசையாக ரஜினிகாந்த் கண்ணாடி சுழற்றுவது போல் சர்வ சாதாரணமாக செய்து வருகிறான் பெரோஸ்பூர் பிள்ளை. அடுத்து ந்யுயோர்க் கவர்னராகலாம் என்கிறார்கள். ஆகட்டும். 

ப்ரூஸ் ஸ்ப்ரிங்க்ஸ்டீன் பற்றி ந்யூஜெர்சிக்காரர்களுக்கு நன்றாகத் தெரியும். உலக இசை ரசிகர்களுக்கும் தெரியும். இது ப்ரூஸ் பாடிய பாட்டு:
Send the robber barons straight to hell.
The greedy thieves who came around
And ate the flesh of everything they found.

பாடலை பெரோஸ்பூர் பிள்ளைக்கு சமர்ப்பணம் செய்தார் ப்ரூஸ். கூட்டம் பித்தானது. ரஜினிகாந்த் படத்துக்குக் கூட இத்தனை விசில் கிடைத்திருக்காது. அமெரிக்காவின் பெருமை இந்தப் பெரோஸ்பூர் பிள்ளை.

ஊழலும் குற்றமும் புரிந்தால் தப்பிப்பபது கடினம் என்று சமீபமாக நினைக்க வைத்த நகரம் ந்யூயோர்க். அதற்குக் காரணம் நம்ம பெரோஸ்பூர் பிள்ளை. சிகாகோ வாசிகள் தங்களுக்கு ஒரு பெரோஸ் கிடைக்க மாட்டானா என்று ஏங்கினார்கள். ஏங்குகிறார்க்ள். ஏங்குகிறார்.

எதற்குச் சொல்கிறேன் என்றால்..

ஒருவனுடைய செயலில் அவனுடைய சரித்திரமே வெளிப்படும். எனில், பெரோஸ்பூர் பிள்ளை ஒன்றைச் செய்தால் அதன் பின்னே குற்றவாளிகள் இருந்திருக்கிறார்கள். பிடிபட்டிருக்கிறார்கள். இந்த சரித்திரம் ஒரு முறை கூட பிறழாமல் வெளிப்பட்டிருக்கிறது.

வாழ்த்துக்கள் எதுவும் வாராத நிலை மாறி.. ஒரு வாரமாக பெரோஸ்பூர் பிள்ளைக்கு இந்தியாவிலிருந்து கேலிகளும் கண்டனங்களும் சரமாரியாக வந்து கொண்டிருக்கின்றன.

ஏன்? 

ந்யூயோர்க் இந்தியத் தூதரகத் துணைத்தலைவர் தேவயானியைக் கைது செய்தார் பெரோஸ்பூர் பிள்ளை. 

இந்தியாவின் பல கீழ்த்தரங்கள் உடனே ஆ ஊ என்று கூச்சல் போடுகின்றன. ஒரு பெண்ணை துகிலுரித்துத் தேடுவதா அப்படியா இப்படியா என்று பெரிய கூச்சல். எல்லாம் அரசியல் மத ஆதாய ஊழல் குரல்கள். 

இங்கே ஒரு தவறு நிகழ்ந்திருக்கிறது. அதை ஒரு சட்டத்தின் காவலன் பிடித்திருக்கிறான். அதைவிட்டு, என்னவோ "அவங்களை நிறுத்தச் சொல்லு நிறுத்தறேன்.. இவங்களை நிறுத்தச் சொல்லு நிறுத்தறேன்" என்று மயில் குரலில் வசனம் பேசிக்கொண்டு திரிகிறார்கள் அல்பங்கள்.

இங்கே ஒரு சட்டம் மீறப்பட்டிருக்கிறது. தெரிந்தே ஒரு தப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஆணவத்தின் அடிப்படையில் ஒரு ஏழைத் தொழிலாளியின் உரிமை பறிக்கப் பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்படிருப்பவர். செல்வாக்குள்ளவர், செல்வந்தர். ஒரு பெண். இந்தியாவில் பிறந்தவர். இந்தியக் குடிமகளான இந்தப் பெண் இந்தியாவின் தாரகமான தர்மத்தை மீறியவர்.

இங்கே ஒரு சட்டமீறல் பிடிபட்டிருக்கிறது. சட்டத்தின் காவல் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ஏழைகளுக்கும் சட்டப் பாதுகாப்பு உண்டு என்ற சாதாரண நிம்மதி மீண்டும் முன்னிறுத்தப்பட்டிருக்கிறது. வலியுறுத்தியவர் செல்வந்தரல்ல. ஒரு ஆண். இந்தியாவில் பிறந்தவன். இந்தியக் குடிமகனல்லாத இந்த ஆண் இந்தியாவின் தாரகமான தர்மத்தை நிலைநிறுத்தியவன்.

இவனை நான் வாழ்த்துகிறேன்.

பெரோஸ்பூர் சிங்கமே, ப்ரீத் பராரா.. உன்னை எண்ணிப் பெருமையாக இருக்கிறதடா. இந்தியாவிலிருந்து எவரும் வாழ்த்தப் போவதில்லை. அவை உனக்குத் தேவையில்லை. போகட்டும். 

உன் கொள்கையை விட்டுக் கொடுக்காதே. சற்றும் மனம் தளறாதே. பண முதலைகளும் செல்வாக்குப் பச்சோந்திகளும் குரல் கொடுப்பார்கள். மிரட்டுவார்கள். பணியாதே. உனக்கு என் வாழ்த்துக்கள் என்றைக்குமே உண்டு. வாழ்க நீ எம்மான். 

தயவுசெய்து தடுமாறி விழுந்துவிடாதே. நீயும் ஊழலில் இறங்கிவிடாதே. இதுவே என் வேண்டுகோள். என்ன செய்ய, எம் போன்றவர்களுக்கு நம்பிக்கை தந்தவர்களெல்லாம் உடன் குழியும் பறித்திருக்கிறார்கள்.. அதான்!
வு செய்துள்ளேன்)