Saturday, March 31, 2012

இலங்கைத் தமிழருக்காக .........

இலங்கை தமிழர்களுக்காக........

இலங்கை ராணுவத்தின் திறமை பற்றி ஒரு அனுமானமுண்டு . கிட்டத்தட்ட இருபது விமானங்கள் பராமறிப்பு இல்லாமல் ,இயந்திரக் கோளாரினா ல் வீழ்ந்து நொறுங்கின.தற்போது கற்ற பாடமும் நல்லெண்ணமும் என்ற அறிக்கை ( L.L.R.C) புதிய தகவல்களத்தருகின்றன.

போர் முடிந்து பரிசொதனையில் இந்த விமனங்கள் விடுதலைப்படயினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரியவந்துள்ளது/ அவர்களின் ஆயுத்க்கிடங்குகளில் மிச்சமிருந்த எவுகணைகளை இலங்கராணுவம் கண்டெடுத்துள்ளது.இவை ரஷ்யாவிலிருந்து பெறப்பட்டவை. அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ரஷ்யா ,சீனா போன்ற நாடுகள் எதிர்த்தன .அதற்காக அந்தநாடுகளை திட்டியவர்கள் --அம்மா,அக்க பேரைச்சொல்லவில்லை--உண்டு .நிருபர்கள் கேட்டால் ரஷ்யத்தலைவர்கள். மறுப்பார்கள்.ஏனென்றால் இதில் ராஜீயச்சிக்கல் உண்டு
எனது குடும்பத்தச்சேர்ந்தவர் விமானப்பட்டையில் இருந்தார். தெரிந்து கொள்ள வேண்டியதை தெரிந்து கொள்ளும் இடத்தில் இருந்தர். "என்ன செய்ய மாமா ! அமதிப்படன்னு தான் பேரு! ஹெலிகாப்டர் வந்தா கைகால் போன சொல்ஜர்கள்தான். பாதிப்பேர் தமிழ் பேசரவங்க" என்பார்.

என் சகோதரரின் மகளுக்கு திருமணம் ஆகும்போது மாப்பிள்ளை காஷ்மீரி இருந்தார்.தமிழர் என்பதால் அமைதிபடை மூலம் இலங்கை சென்றார்.எனக்குப் பெருமைதான். வெளிநாட்டில் இருப்பது பெருமை இல்லையா? கூடுதல் சம்பளம் என்று மகிழ்ச்சியாக இருந்தது. நீங்க ஒண்ணு! முக்காத்துட்டு கூட தரமாட்டான் .கைகால் போச்சுன்னா ஆக்சிடென் கணக்கு .அமைதிப்படையில்லா? என்றார். மனம் "திக்" என்றது.

கார்கில் போரின் போது சவப்பெட்டியைச்சுமந்து வந்து" ஓட்டு" கேட்டது ப.ஜ.க அப்போது இறந்த தமிழர்களைவிட அமைதிப்படயில் இறந்த தமிழாகத்து சோல்ஜர்கள் அதிகம்.இவை எல்லம் வரலாற்றின் இண்டு இடுக்குகளில் தான் இருக்கும் .இவற்றை அதிகார பூர்வமாக எற்கவோ மறுக்கவோ மாட்டார்கள்.

எண்பதாம் ஆண்டுகளில் மதுரை பாத்திமா கல்லூரிக்குப் பின்புறம் உள்ள சாந்தி நகரில் குடியிருந்தேன். அங்குள்ள ரயிலார் நகரை ஒட்டி கண்மாய்.மழை காலத்தில் மட்டுமே நீர் இருக்கும். சிறுவர்கள் கிரிக்கெட்,கால்பந்து விளையாடுவார்கள்.விடுதலைபடையினர் அங்கு பயிற்சி எடுப்பார்கள்.கூடல் நகரிலிருந்து அலங்காநல்லுர் வரை " ரூட்மார்ச்சு" நட்த்துவார்கள். அலங்காநல்லுரூர் அருகில் உள்ள அணைக்கரையில் அவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடக்கும். வத்திறாயிருப்பு,குற்றாலம்,ஆனைமலை , மத்தியப் பிரதேச காடுகளில் பயிற்சி நடக்கும். இது உலகம் பூராவும் தெரியும்.

இந்திரா அம்மையார் காலத்திலும் நடந்தது. ராஜீவ் காலத்திலும் நடந்தது.

இந்தியாவின் நல்லேண்ணத்தை வேண்டாம் என்று ஒதுக்கியது யார்?

பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டது யார்?

கோவணத்தையும் இழந்து நிற்பது யார்?

Thursday, March 29, 2012

தியேட்டருக்குப் போய் பருங்கள்.....

தியேட்டருக்குப் போய் பாருங்கள்.....

சமீபத்தில் "கஹானி "என்ற திரைப்படம் பார்க்கச்சென்றிருந்தேன். நான்,என் மனைவி,அவருடை ய சகோதரி ஆகிய மூவரும் .டிக்கெட் ஒன்று 180 ரூ. இரவு சிற்றுண்டி அருந்திவிட்டு வந்தோம். கார் பெற்றொல் சிலவையும் கணக்குப்பார்த்தால் கிட்டத்தட்ட 900ரூ செலவாகியிருக்கும்.

சென்றவாரம் நண்பர் அழைத்திருந்தார் விருந்து முடிந்ததும் "ஹோம் தியேட்டரில் " படம் பார்க்க தொடங்கினோம். சமீபத்தில் தமிழ்நாட்டில் வெளியாகி ஒரு வாரம் தான் ஆகியிருக்கும்படம். ரசித்துபார்த்தேன். எனக்குப் பிடித்து இருந்தது. அதன் இயக்குனருக்கு கை பெசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்தினேன்.இசை , படப்பிடிப்பு, கலை என்று புகழ்ந்தேன் முடிக்கும்போது இயக்குனர் " திருட்டு விடியோவா". என்று கெட்டார்.

"Cine Max-H.D; s.t.productions என்று போட்டிருந்தது" என்றேன் .

எனது நண்பர் ஒருவர் விமானப்படையில் இருந்தார். நேர்மையானவர். மற்றவர்களும்நேர்மையாக இருக்க வேண்டும் என்று வற்புருத்துபவர்.திரைப்படங்களை விடியோவில் பார்க்கக் கூடாது என்று விரதம் எடுத்தவர். அது தவறு என்று கருதுபவர்.இப்போது நாகபுரியில் இல்லை .கோவையில் இருக்கிறார். அவர் அப்படி இருக்க உரிமையுண்டு.நாம் நிம்மதியாகத் தூங்குகிறொம் என்றால் அவரைப் போன்றவர்கள் தூங்காமல் எல்லையைக் காக்கிறார்கள் என்பதால் தான் .

தொலைக்காட்சியில் திரைப்பட விமரிசனங்களப் பார்ப்பேன். ஒவ்வொரு தயரிப்பாளர்களும்,நடிகர்களும்,இயக்குனர்களும் தியேட்டருக்குச்சென்று பாருங்கள் என்று தவறாமல் வேண்டுகோள் விடுப்பார்கள்.நியாயமும் கூட!

திருச்சி,மதுரை,நெல்லை கோவை போன்ற நகரங்களிலும் டிக்கட் கொடுத்து போக முடியாத அளவுக்கு . ஏறிவிட்டது. ஒருநாளைக்கு 500 ரூ சம்பாதிக்கும் கொத்தனாருக்கும் அதே விலைதான். விடியோ மலிவாக கிடைக்கிறது. 10 ரூ க்கு தகடு .வீட்டிலேயே பார்த்துவிடலாம். ஆனால் தயாரிப்பாளர் என்ன ஆவார்?

திரைப்படத்துறையின் Economics விசித்திரமானது. மற்றதுறையில் நூறு ரூ க்கு ரசீது கோடுத்தால் நூரு ரூ தருவார்கள். இங்கு ஒருகோடிக்கு ரசீது கொடுத்தால் இரண்டு கோடி தருவார்கள்.சரிபாதி கருப்பு.

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஷாருக்கான் ஒருபடத்திற்கு 16 கோடி வாங்குவதாகச்சொன்னார்கள். விலைவாசி அவருக்கும் எறத்தானே செய்யும்.தமிழ் நாட்டு நடிகர்களுக்கு,6 கோடி,7 கோடி 10 கொடி ,ஏன் 25 கொடி கொடுப்பதாகக் கேள்விப்படுகிறோம். திரைப்படத்துறையில் நுழைந்து கற்பழியாமல் வந்தவன் என்று முறையில் எனக்கு நேரடி அனுபவம் உண்டு .நடிகர்கள், இயக்குனர்கள் ஆகியோர் வேறு. குட்டி நடிக நடிகைகள் படும் பாடு வேறு.

நடிக்க வந்து வலசரவாக்கத்திலும் கோயம்பேட்டிலும் காய்கறி விற்று ஜீவிக்கும் பேரிளம் பெண்களைகேட்டால் பாடுகள் தெரியும்.பகலில் வெள்ளையடித்துவிட்டு இரவில்
ஸ்டூடியோவில் உழைக்கும் தொழிலாளியைக் கேட்டால் தெரியும் . இவர்களுக்கு ஊதியம் கொடுக்க மறுப்பவர்கள் தான் இந்ததயாரிப்பாளர்கள். தயாரிப்புச்செலவை குறைக்க வேண்டும் என்று ஓலமிடுவார்கள்.தயாரிப்பாளர்களுக்கு பணம் எப்படிவருகிறது?. காவேரிக்கரையில் பொன்விளையும் நிலத்தைவிற்று போடும் தயாரிப்பாளர்கள் இப்போது இல்லை ஆடிட்டர்களையும்,வருமான வரி கணக்கர்களையும் நம்பி இருக்கும் தயாரிப்பாளர்கள் தான் உண்டு.இருந்தும்

" தியேட்டருக்குப் போய் பாருங்கள் " என்று ஜபம் செய்வார்கள்.!

Friday, March 23, 2012

ஐ.நா, மனித உரிமை, அமெரிக்கா, இலங்கை ........

ஐ.நா,மனித உரிமை,அமெரிக்கா, இலங்கை ......

தீர்மானம் நிறைவேறியுள்ளது. அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும் என்று கருணாநிதிவகையறா கேட்டுக்கொண்டதால் இந்திய அரசு ஆதரிக்க நிறைவேறியுள்ளது. இதனை வரவேற்றுப் பேசியுள்ள விஜயகாந்த் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

தீர்மானத்தில் உள்ள முக்கியமான விஷயம், அமல் படுத்த வில்லையென்றால் இலங்கையின் மீது என்ன நடவடிக்கை எடுக்கமுடியும். எதுவும் முடியாது. மனித உரிமை என்று கூறிக்கொண்டு ஒரு நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடக்கூடாது என்பது இந்தியாவின் நிலை.ஆதரிக்க மறுத்ததற்கும் இது தான் காரணம்.தற்போது தீர்மானம் திருத்தத்தொடு நிறைவேறியுள்ளது. எந்த நடவடிக்கயும் இலங்கை அரசின் சம்மதத்தோடு எடுக்கப்படவேண்டும் இலங்கை என்று சம்மதிக்க? என்று நடவடிக்கை எடுக்க?.விஜயகாந்த் கூறியுள்ளது இது தான்.

ஐ.நா வைப்பொறுத்தவரை இன்று வரை மூன்று விஷயங்கள் இத்தனை வருட காலங்களாக மூடிவு செய்யப்படவில்லை.
1. மனித உரிமை என்றால் என்ன?

பிறந்த மனிதனுக்கு மூன்று அத்தியாவசியத்தேவைகள் உண்டு. உணவு,உடை,இருப்பிடம்.அதன் பிறகு வருவது,மற்றவை.பசியில் துடிப்பவனுக்கு, உணவுக்கு அடுத்துதான் பெச்சுரிமை உட்பட சகல உரிமைகளும் என்று சீணா, ரஷ்யா, ஆகியவை கூறுகின்றன, அமெரிக்கா இதனை ஏற்கவில்லை. அதனால் ஐ.நாவும் ஏற்கவில்லை.
2.ஆக்ரமிப்பு என்றால் என்ன?

ஒரு நாட்டின் அரசியல்,சமூக, பண்பாட்டு, வாழ்க்கையில் தலையிட்டு அதனை மாற்ற முயல்வது ஆக்ரமிப்பாகும். இது ஏற்றுக்கொள்ளப்பட்டால் அமெரிக்கா வியட்நாமிலோ, கொரியாவிலோ தலையிட்டிருக்க முடியாது. அதன் காரணமாகவே அமெரிக்கா எற்க மறுக்கிறது. ஐ.நாவும் ஏற்கவில்லை
3.வேலை வாய்ப்பு என்றால் என்ன?

ஒரு நாட்டின்மக்களுக்கு உழைப்பதற்கான உரிமை அளிக்கப்படவேண்டும். மக்கல் அனைவரும் வேலை பெற்று வாழ உரிமை கொடுக்க வேண்டும் .சீனா, ரஷ்யா இதனை ஏற்கிறது. எல்லாருக்கும் வேலை என்பது கூடாது. நாட்டின் மக்கள் தொகையில் தொண்ணுறு சதவிகிதம் வேலை வாய்ப்பு பெற்றாலே பொதும் .ஒரு பத்து சதவீதம் வேலையின்றி இருந்தால் தான் முதலாளிமார்கள் பேரம் பெச முடியும் என்று அமெரிக்கா கூறி ஏற்கமறுக்கிறது. ஐநாவும் எற்கவில்லை

தீர்மானம் நிறைவேறியுள்ளது. வேற்றி விழாவுக்கு மைக்,குழல் விளக்கு என்று அச்சாரம் கொடுத்து லாவணி ஆரம்பித்து விடுவார்கள். தமிழா! கூட்டத்திற்குப் போ! பேச்சைகேள் !

. உன் கடமையைச்செய்!

Thursday, March 22, 2012

பாவலர் வரதராஜன் என்ற "மக்கள் கலைஞன் "........

பாவலர் வரதராஜன் என்ற "மக்கள் கலைஞன்"...........

1971ம் ஆண்டு மதுரையில் மார்க்சிஸ்டு கட்சியின் அகில இந்திய மாநாடு நடப்பதாக இருந்தது.அப்போது அதனை ஒட்டி மதுரையில் "பீப்பிள்ஸ் தியேட்டர்"என்ற நாடகக்குழு ஆரம்பிக்கப்பட்டது.வையைச்செழியன் (பா.ரத்தினம்) எழுதிய "நெஞ்சில் ஒர் கனல்" என்ற நாடகம் போட முடியாயிற்று.நாடகத்தின் ஒத்திகை வடக்கு ,மேற்கு ஆவனிமூலவீதி சந்திப்பில் உள்ள அரசமரம் சந்தில் பொதுதொழிலாளர் சங்கத்தில் நடக்கும் அங்கு தான் பாவலர் அவர்களொடு பழகும் வாய்ப்பு கிடத்தது.

ஒடிசலான கருத்த உருவம்.கூர்மையானமூக்கு.வெள்ளை வெட்டி ஜிப்பா. தோளில் சிவப்புத்துண்டு.இதுதான் பாவலர்.அவரை மேடையில் பல ஆண்டுகளாக பார்த்திருந்தாலும் பழகும் வாய்ப்பு இப்போதுதன கிடைத்தது.

'எங்க கட்சி சின்னகட்சி. பத்தடி கம்புல செங்கொடியப் பறக்க விடுவம்.காங்கிரஸ்காரன் இருவது அடி தேக்கமரத்துல கொடியை கட்டுவான்.தி.மு.க காரன் விடுவானா? 40அடிக்குஇரும்பு குழாயில கட்டி தொங்கவிடுவான்.ஒசக்க,அதுக்கும் ஒசக்க, அதுக்கும் ஒசக்க...எவ்வளவு ஒசக்கடா... வானத்துல ...சந்திரன்லயா ..அரிவாள், சுத்தியல்நட்சத்திர கொடிய என் சோவியத் தோழன் ...சந்திரன்ல பறக்கவிடுட்டான்...... "பறக்குது பார் " என்று செங்கொடிப்படலோடு அவர் ஆரம்பிக்க மக்கள் கைதட்டி அவரை வாழ்த்தும் காட்சி இன்றும் என்கண்முன்னால் நிற்கிற

1967ம் ஆண்டு தி.மு.க.வின் தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு பாவலரின் குரலுக்கு ஒரு பங்கு உண்டு. 1965ம் ஆண்டு இந்தி போராட்டம் நடந்தது. அண்ணாமலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராஜெந்திரன் என்ற மாணவன் இறந்தான்.அவன் ஒரு போலீஸ் காரரின் மகன். அவன் பட்டம் பெற்று வருவான் என்று காத்திருந்த தாய் கதறி அழுவதை பாட்டெழுதிப் பாடும் போது பாவலர் அழுவார். பார்வையாளர்கள் கண்பனிக்க விம்முவார்கள். மெலிதாக கார்வையோடு கூடியகுரலில் "பக்தவத்சலத்திற்கு ஒட்டுப் பொடுவீர்களா?என்று கேட்பார். தொண்டை அடைக்க கண்களை ஒருகையால் துடைத்துக்கொண்டு மறு கையால் இல்லை என்று காட்டுவார்கள்.முதலமைச்சர் பக்தவத்சலம் தொற்றார்.

ஆதித்தனாரை தி.மு.க வினர் நாக்கில் நரம்பில்லாமல் ஏசுவார்கள் .அவரை "சிங்கப்பூர் திருடன்" என்று வர்ணிப்பார்கள். அவர் 67ம் ஆண்டு கூட்டணியில்நின்று வென்றார்.மந்திரி பதவி கொடுக்காமல் சபாநாயகராக்கினார் அண்ணாதுரை அவர்கள்.அண்ணா மறைந்தார் கருணாநிதி முதல்வரானார். ஆதித்தனாரும் மந்திரியானார்.. அப்பொது ஆதித்தனார் கருணாநிதியின் குடும்பக்கட்டுபாட்டு திட்டத்தை அமல் படுத்த முன் கை எடுத்தார். அது வரை குடும்பக்கட்டு
ப்பாடு கூடாது என்று கூறிவந்தவர் ஆதித்தனார்.

அப்பொது "யாதொங்கி..." என்ற இந்திபடம் சக்கைபோடு போட்டது.பாடல்கள் அருமையாக இருந்தன. அதில் " ரூப் தேரா மஸ்தானா " என்ற பாடல் மக்களிடையே பிரபலமாக இருந்தது . அந்தப் பாடலை "லூப் தர்றான் - சர்தானா
மட்டலனா விட்றனா-ஆதித்தனாரு போதித்ததென்ன
போதித்தபின்னே சாதித்ததென்ன" என்று பாவலர் பாடுவார்.மக்களின் கரகோஷத்தில் பாவலர் முங்கிக் குளிப்பார்.எப்பேர்பட்ட கலைஞன் .

பாவலருக்கு வறுமை ஒரு பெரிய சுமை.அதனால் அவருடைய பழக்க வழக்கங்களில் தேவையற்ற மாற்றங்கள் .அதனால் வாய்ப்புகள் குறைந்தன. மேடையில் அமர்ந்துபாடமுடியாத நிலை.தம்பிகள் ராஜா சிங்கும்,அமர்சிங்கும் அற்ற குளத்தைவிட்டு சென்னை சென்றுவிட்டார்கள். பாஸ்கர் மட்டும் வந்துபார்த்துவிட்டு போவார்.அவருடைய நினைவாக அவர் வைத்திருந்த ஆர்மெனியப்பெட்டியை பீப்பிள்ஸ் தியெட்டர் தலைவரிடம் கொடுத்தார்.

பாவலரை அமுக்க அப்பொதைய ஆட்சி "Q" பிரன்சை நாடியது. வழக்கு பொட்டர்கள். வலது கட்சியின் சார்பாக கே.டி.கே தங்கமணி வழக்கை நடத்துவார் என்று ஜனசக்தி அறிவித்தது. அதோடுசரி .

பாவலர் தி.மு.கவில் செர்ந்தார்.வழக்குகள்விலக்கிக் கொள்ளப்பட்டன . தி.மு.க.வில்சேர்ந்ததும் முதல் கச்சேரி மதுரை மில் வாயிலில் உள்ள "மாஸ்கோ காளிகோவில்" அருகில் மேடை தி.மு.க.வினரை விட மார்க்சிஸ்ட் கட்சினர் தான் பெரும் கூட்டமாக வந்திருந்தனர்.பாவலர் பாட ஆரம்பித்தார்."நீ இருக்கும்போது வரவில்லையே- அண்ணா" என்று பாடினார். தோழர்கள் கண்கலங்கி "எப்படிப்பட்ட கலைஞன் எப்படியாயிற்று' என்று வருந்தினார்கள் ."ஏன்? நானிருக்கும் போது வரக்கூடாதா?" என்று தலைமை கழகம் வருத்தப்பட்டதாக செய்திகள் கசிந்தன .

பாவலர் அதன் பிறகு அதிக நாட்கள் இருக்கவில்லை. அந்த கலைஞன் மறைந்தான்.
மேற்கு மலை தேயிலைதொட்டத்து முகடுகளில் ஒலித்த அவன் குரல் வங்கக் கடல் அலைகளொடு சங்கமித்து இன்றும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. மறையாது....

Wednesday, March 14, 2012

தேச பக்தர் வ.உ.சி.யின் பேரனும் "தீக்கதிர்" பத்திரிகையும்.......

தேச பக்தர் வ.உ.சி. யின் பேரனும் "தீக்கதிர்" பத்திரிகையும்...........

நான் முதன் முதலாக "தீக்கதிர்" அலுவலகத்திற்குள் நூழையும் போது மதுரைமீனாட்சி அம்மன் கோவில் வடபகுதியிலிருந்த 1ம் நீர் சந்தில் இருந்தது . அங்குதான் தீக்கதிரில் துணையாசிரியர்களாக பணியாற்றிய மூன்று பேரைச்சந்தித்தேன் .த.மு.எ.சவை உருவாக்கிய வர்களில் ஒருவரான தோழர் வரதன் அதில் ஒருவர்.வரதன் அல்லிநகரத்தை சேர்ந்தவர்.விவசாயி.நாட்டுப்புரப்பாடல்கள் பற்றி ஆராய்ந்தவர்.கவிஞர். ஓவியர்.

கட்சி நிகழ்சிகள்பற்றி அல்லி நகரத்தில் தட்டிபோர்டுவைப்பது.சுவர் விளம்பரங்கள் செய்வது அவருடைய முக்கிய பணியாக இருந்தது. அவரோடு சுவர்களில் எழுதவந்தவர் தான் பால் பாண்டி. பால் பாண்டிதான் பின்னாளில் பாரதிராஜாவாக புகழ்பெற்றார்.

இரண்டாமவர் திண்டிவனத்தச்சார்ந்த வசதியான குடும்பப் பின்னணி கொண்ட இளைஞர்.இன்று கோயம்புத்தூரில் பிரபல கிரிமினல் வக்கீலாகத் திகழும் ஞான பாரதி.

மூன்றாமவர் "ஆ.ச."என்று நாங்கள் அன்போடு அழைத்துவந்த ஆவன்னா.சண்முக சுந்தரம் .சுதந்திரம் என்பிறப்புரிமை என்று கூறியதற்காக ராஜத்துரோக குற்றம் சாட்டப்பட்டு தீவாந்திர சிட்சை பெற்று கோவை சிறையில் செக்கிழுத்த தேசபக்தர் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் பேரன்.

என்னிடம் அமெரிக்காவிலிருந்து வரும்" டைம்" பத்திரிகையிலிருந்து ஒரு சிறு பத்தியைக்கொடுத்து தமிழில் எழுதச்சொன்னார்கள். எழுதினேன்."அட! நல்ல எழுதரீங்களே" என்றார். ஆ.ச .என்னுடைய எழுத்து நானே திரும்பிப டிக்கமுடியாத வடிவழகை கொண்டது. "இவ்வளவு பொடியா எழுதாதீங்க. அச்சுகோக்கிரவங்க படிகணும்லா. எழுத்துக்களை சேத்து சேத்து எழுதவேண்டாம்.தனித்தனியா கலக்கம் கலக்கமா எழுதுங்க "என்றார்.ஆ.ச.

இந்த மூன்று ஆசிரியர்களுக்கும் மாதம் 30 ரூ சம்பளம்.காபிக்காக தினம் 4அணா படிக்காசு. தினம் மாலை 4மணிக்கு அதை வாங்கிகொண்டு அருகில் உள்ள கையெந்துபவனில் வடையும் காப்பியும் சாப்பிடலாம்.வரதன் காப்பி சாப்பிட மாட்டார். அதற்கு இரண்டு இட்லி சாப்பிடுவார்.விவசாயி அல்லவா!


கிட்டத்தட்ட இரண்டுமாதங்களுக்குப்பிறகுதான் ஆ.சா.பற்றி தெரிந்து கொண்டேன். ஆகா! எப்பேற்பட்ட குடும்பம்.எவ்வளவு அண்மை!இப்போது நினத்தாலும் புல்லரிக்கிறது.!

எந்த உதவியும் இல்லாமல் குடும்பம்.படித்த ஆ.சவிற்கு காமராஜர் உதவினார். "பிளாக் டெவலப்மேண்ட் ஆபீசர் பதவியளித்தார்.புதுக்கோட்டை அருகில் வேலை..வி.பி சிந்தனும் காமராஜரும் வெல்லுர் சிறையில் ஒன்றாயிருந்தவர்கள்.இருவருக்கும் ஆங்கிலம் தெரியாது. அவர்களிருவருக்கும் ஆங்கிலம் கற்க ஆசை .சிறையில் பி.ஆர் மூலம் ஆங்கிலம் கற்றார்கள்.ஆ.ச.வுக்கு விபிசி மூலம் இடதுசாரிகளொடு பழக்கம் ஏற்பட்டது. "ஒரு கட்டத்தில் அரசுபணியில் இருக்கமுடியாது என்ற நில எற்பட்டது..முழுநேர ஊழியராக முடிவு செய்தேன்.வி.பி.சி தான் தீக்கதிரில் போய் வேலை செய் என்று அனுப்பிவைத்தார்".என்றார் ஆ.ச.
ஆ.சவிற்கு ஒருமகளூம் மகனும் உண்டூ .மனைவி அரசுமருத்துவ மனையில் பணியாற்றினார். அவருடைய மகளுக்கு சிறு வயதிலேயே உடல் நலம் பாதிக்கப்பட்டதால் 78ம் ஆண்டு வாக்கில் சென்னை சென்றுவிட்டார். சட்டம்படித்தவராதலால் தோழர் செந்தில்நதனோடு ஒரே அறையில் தொழில் செய்தார். 2004 ம் ஆண்டு மறைந்தார்.

Friday, March 09, 2012

"ஐ.மா.பா " என்ற ஐ.மாயாண்டி பாரதி .........

"ஐ.மா.பா " என்ற ஐ.மாயாண்டி பாரதி......

மதுரை "டவுண் ஹால் " ரோடிலிருந்து ரயில் நிலையம் செல்லும் பாதையில் வலதுபக்கம் முதல் சந்து தான் மண்டயனாசாரி சந்து.எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அங்குதான் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் இருந்தது.பிடி.ஆர்,சரோஜ் முகர்ஜி ,சுந்தரய்யா,. இ.எம்.எஸ், என்று அந்த பாரத புத்திரர்களின் பாதம்பட்ட அலுவலகம் அது. அந்த வீடு ஐ.மாயாண்டி பாரதியின் வீடு.

மதுரை மேலமாசிவீதியில் "ரேமாண்ட்ஸ் " இருந்த கட்டடத்தின் மாடியில் தான் ஐ.மா.பா வசித்து வந்தார். அவர் "தீக்கதிர்" அலுவலகத்திற்கு செல்லும் அழகே தனி. வெள்ளை வேட்டி,சட்டை ,கழுத்தில் நேரியல், ஒருபையில் மதிய உணவு,சில புத்தகங்கள், மற்றொரு மஞ்சள் பையில் இனிப்புமிட்டாய் களொடு புறப்படுவார். ஐந்து வயதிலிருந்து சிறுவர்கள் அவர் படியை விட்டு இறங்கியதும் "தாத்தா -தாத்தா" என்று மொய்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கு பையிலிருந்து மிட்டாய் கொடுப்பார். வடக்கு ஆவணி மூல வீதி 1ம் நம்பர் சந்திலிருந்த தீக்கதிர் பை பாஸ் ரொடு போனபிறகும் இது தொடர்ந்தது.

புது அலுவலகத்தில் ரோட்டைப்பார்த்த ஜன்னல் அருகில்தான் அவருக்கு இடம். பள்ளிச்சிறுவர்கள் ஜன்னளொரம் வந்து தினம் மிட்டாய் வாங்கிகொண்டு செல்வார்கள். ஒய்வு நேரங்களீல் அவர்களுக்கு பகத்சிங், திருப்பூர் குமரன்,போன்ற தெசபக்தர்களீன் கதையைச்சொல்வார். கண்கள்விரிய, வாய்பிளக்க, அந்தச்சின்னஞ்சிறிசுகள் பார்க்க நடிதுக்காட்டுவார். அதில் ஒருசிறுவன்தான் படித்து,மாணவர்,இயக்கம்.வாலிபர்சங்கம் என்று வளர்ந்து தீக்கதிர் துணைஆசிரியராக அவர் அருகில் அமர்ந்து பணியாற்றிய பாண்டி என்ற பாண்டியன்

இன்று மதுரை நகரத்தில் பகுதிகமிட்டி,இடைக்கமிட்டி என்று தலமை வகிப்பவர்களில் பலர் அன்று அவரிடம் மிட்டய் வாங்கிய சிறுவர்களாவர். Catch them young என்பதை நடைமுறைப்படுத்தியவர் அவர்.

சுதந்திரப் பொராட்டகாலத்திலும்,தலைமறைவு வாழ்க்கையின் போதும் நடத்திய சாகசங்கள் மெய்சிலிர்க்க சொல்லுவார். காங்கிரஸ் அரசு கம்யூனிஸ்டுகளை நரவேட்டையாடிக்கொண்டிருந்தது.தலமறைவாக இருந்தனர். செலம் சிறையில் கம்யூனிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்." சாமா! இதுக்கு பதிலடி கொடுக்கணம்னு தொணித்து.பவநகர் மகாராஜா தூத்துக்குடி வர இருந்தார். மீள்விட்டான் பக்கத்துலா காத்திருந்தோம். ராத்திரி.தண்டவாளத்தை கழட்டி ரயிலை கவிழ்த்துவது திட்டம். ரயிலும் வந்தது கவிழ்ந்தது.ஆனா அது கூட்ஸ் ரயில் "
என்றுகூறிவிட்டு,"நெஞ்சுல கோபமிருந்தது.வீரமிருந்தது.விவேகமில்ல" என்று முடிப்பார்.

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில தெலுங்கு செட்டியார் வேடத்தில அவர் பாலவிநாயகத்தோட சுத்தியதை கதை கதையாகச்சொல்லுவார்.

" ஐ.மாபா! பத்திரிகைக்கு எப்படி வந்தீங்க?"
"கட்சி வேலை! எதுன்னாலும் செய்யத்தான வேணூம். ஜனசக்தில ஒக்காருன்னாங்க. அங்க ஜீவா,மாஜினி, முத்தையா கூட வேலை.வேடிக்கை தெரியுமா? மூணு பெருக்கும் காதுகேக்காது." என்று கூறி சிரிப்பார்.

கட்சி மீது அவருக்குள்ள விமரிசனத்தை கோபமாக வெளிபடுத்துவார். கே.ஏம் அவர்க்கு விளக்கமளித்து சமாதானப்படுத்துவார்.அவர் போனதும் என்னிடம்" தஞ்சாவூரில் வசதியான குடும்பம். அண்ணமலைல படிக்க அனுப்பினாங்க பால தண்டாயுதம் இவருனு மானவர்களை சேத்தாங்க.பொலீஸ் பிடிச்சுட்டான். அப்பா சத்தம்போட்டார். குடும்பத்துக்கும் எனக்கும்சம்பந்தமில்லனு சொல்லி விடுதலை பத்திரம் எழுதிகொடுத்துட்டு கட்சிக்குவந்துட்டாரு. இப்ப அலுமினிய சட்டியில கரி அடுப்புல மதியசோற பொங்கி சாப்பிடுதாரு." கண்கள் கசிய அவர்கள் இருவரையும் மனதால் தொழுவேன்.

சில சமயம் காரசாரமாக கே.எம் அவர்களோடு விவாதிப்பார். கொபம் கொப்புளிக்கும் கே எம் எழுந்து பொய்விடுவார். கோஞ்ச நேரம் கழித்து கிரஷாம் என்ற ஆபீஸ் எடுபிடி ஐ.மா.பா வை வந்து கூப்பிடுவார்." சமாதானமா! வர முடியாது" என்பார். சிறிது நேரம் கழித்து ஒரு அலுமினிய டம்ளரில் சூடாக டீ யை கே எம் கொண்டு நீட்டுவார். "ஏன் ! இதைக்குடிக்க அங்க வரணுமோ
" சர்யா! ஒரு டீ தான் இருந்தது.எல்லார்முன்னலயும் உமக்குமட்டும்கொடுத்தா ..."
ஐ.மா.பா டீயைக்குடிப்பார்." ஐ.மா..பா. இப்பாடிசண்டை போடவும் வேண்டாம்.குடிக்கவும் வேண்டாம் என்பேன்" நான் .
. "இதபார்ர.சண்டை போட்டதே அதுக்குத்தானே" என்பார் அவர்.

மனித நேயத்தின் உச்சகட்ட வளர்ச்சி தான் மார்க்சிசம் என்பார்கள் .அதை இந்த தெசபக்தர்கள் காலடியில் அமர்ந்து கற்றுக் கொண்டேன் .

Monday, March 05, 2012

கெழுதகை நண்பர் முத்து நிலவன் அவர்களூக்கு ....

கெழுதகை நண்பர் முத்து நிலவன் அவர்களுக்கு......

" காவல் கொட்டம் " விருதுகள்,விழாக்கள்,விவாதங்கல் (3)என்று தீராதபக்கங்களில் வந்த இடுகைக்கு நீங்கள் எழுதியுள்ள பின்னூட்டத்தைப் படித்தேன்.

விருதுநகர் த .மு.எ.க .ச வில் மிகவும் அற்புதமாக இருந்த இரணடு பேரின் பேச்சு எனக்குப் பிடித்து இருந்தது.ஒருவர்,ஊடகங்கள் பற்றி பேசிய சசி குமாருடையது. மற்றொனறு சு.வெங்கடேசனுடையது. பெரியார் பற்றியும், ராமலிங்க அடிகளார் பற்றியும் அவருடைய கணிப்பு வரலாற்று ரீதியாக மிகவும் சரீ என்று கருதுகிறேன்.

ராஜா ராம் மொஹன் ராய் பிரும்ம சமாஜத்தில் செயல்பட ஆரம்பித்தார். அவருடைய பிரதம சீடர்களில் ஒருவர் சிவநாத சாஸ்திரி என்பவர். அவர் உழைக்கும் தொழிலாளி பற்றி வங்கமொழியில் முதல் முதல் "ஸ்ரமஜீவி" என்று கவிதை எழுதியவர்.இந்தியாவில் அப்பொதுதான் பல்வேரு மாகாணங்களில் சீர்திருத்த அமைப்புகள் தொன்றிவந்தன.இந்த அமைப்புகளை ஒன்று படுத்தி பிரிட்டிஷாருக்கு எதிரக அகில இந்திய அமைப்பை உருவாக்க சிவநாத சாஸ்திரி முயன்றார்.

சாதி மத பேதங்கள் பார்க்காமல் இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து விடுபட ஒருஅமைப்பு வேண்டும் என்று கருதி செயல் பட்டார். "சாதி சமய சழக்கை விட்ட " ராமலிங்கரோடு தொடர்பு கொள்ள சென்னை வந்தார். ரங்கநாதம் முதலியார் என்பவர் இதற்கு உதவியாக இருந்தார்..இருவரும்சந்தித்தனர். பேச்சுவார்த்தை நடந்தாது. இறுதியில் ராமலிங்கர் " தான் சமூகத்திலிருந்து விடுபட்டு ஆன்ம விசாரணையில் இறங்கி விட்டதால் உங்களொடு சேர்ந்து செயல்பட முடியாது "என்று மறுத்துவிட்டார்.

நண்பரே! இது வரலாறு. சு.வெங்கடெசனின் பேச்சை இந்த அடிபடையில் நான் வரவேற்கிறேன்.

Thursday, March 01, 2012

இந்த அரைக்கிறுக்கர்களும் உ.பி.தேர்தல்களும்......

இந்த அரைக்கிறுக்கர்களும் உ.பி தேர்தல்களும்....

"அன்னா ஹசாரே" என்ற பெயரை கெட்டாலே எனக்கு கோபம் கோபமாக வரும். அதனாலேயே என்மீது கோபம் கொள்ளும் பதிவர்களும் உண்டு. உண்ணாவிரதமிருந்து முடிந்தவுடன் காந்தி சமாதிக்கு போனார். உலகம் பூராவிலிமிருந்து வந்த ஊடகங்கள் முன்னால் ஐந்து மாநில தேர்தலிலும் காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்தார்.

சமீபத்தில் மகாராஷ்ற்றாவில் நடந்த தேர்தலில் இந்த புண்ணியவான் வாக்குச்சாவடி பக்கமே பொகவில்லை!

இவருடைய பிரதம "சிஷ்யன் " அரவிந்த கேசரிவால் . உ.பி யில் உள்ள இந்திரபுரம் வாக்குச்சாவடியில் அவர் வாக்குப் போடவேண்டும். அவரோ கொவாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டெல்லி விமானநிலயட்ந்திற்கு சென்றுவிட்டார்.இதை அறிந்த உள்ளூர் மக்கள் அவர் வீட்டிற்கு சென்று சத்தம் போட்டனர். உடனெயே தகவல் டெல்லி விமான நிலயத்தில் காக்திருந்த கேசரிவாலுக்கு தெரியாபடுத்தப் பட்டது ."மறந்து விட்டேன். இதோவருகிறென்" என்று கூறி காரில் திரும்பி வந்தார். வாக்குச்சாவடிக்குப் போனார் வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இல்லை .

அரவிந்த் கேசரிவால் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளாதா என்று பரிசீலிக்க மாட்டார். அன்னா ஹசாரே இருந்தாலும் வக்குச்சாவடிக்கு வரமாட்டார்..

இந்த கிறுக்கர்கள் சென்னை வந்த போது இவர்களுக்கு மண்டபம் பிடித்துக் கொடுத்தவர் யார்? உங்களுக்குத்தெரியுமா?