கரந்தை ஜெயக்குமார்
01 மே 2014
3/3
ஹியூகோ சாவேஸ்
ஆண்டு 2002, ஏப்ரல் 11. நாடு முழுக்கக் கலவரம் பரவத் தொடங்கியது. அரசுக்கு ஆதரவுக் கூட்டம் ஒரு புறம், கலகக்காரர்கள் ஒரு புறம் என மோதல்கள் வெடிக்கத் தொடங்கின. கலகக்காரர்களுடன், இராணுவ ஜெனரல்கள் சிலரும் கை கோர்க்கவே, கலவரம் போர்க் களமாய் மாறியது.
அதிபர் மாளிகையில், அதிபர் அமைச்சர்களுடன் ஆலோசனையில் இருந்தார். இராணுவமே எனக்கு எதிராகவா? பின் எதற்காக நான் அதிபராக இருக்க வேண்டும்.
நான் ராஜினாமா செய்கிறேன்
இந்த நிமிடம் முதல், மக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இருக்கக் கூடாது. கலவரம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். கலகக்காரர்களிடம் சொல்லுங்கள்.
2002 ஏப்ரல் 12. விடியற்காலையில் தொலைக் காட்சி, ஒரு வரிச் செய்தி ஒன்றினை ஒளிபரப்பியது.
அதிபர் ராஜினாமா செய்துவிட்டார்.
அதிபர் கைது செய்யப்பட்டு, டியூனா கோட்டையில் அடைக்கப் பட்டார். பெட்ரோ கார்மோனா (Pedro Carmona) என்பவர் இராணுவத்தால் இடைக்கால அதிபராக நியமிக்கப் பட்டார்.
நண்பர்களே, உலகில் வேறு எங்கிலும் இதுவரை நடக்காத செயல், கனவிலும் நினைத்துப் பார்க்க இயலாத காட்சி, அதன்பின், அந்நாட்டில் அரங்கேறத் தொடங்கியது.
மக்கள் முதன் முறையாக களத்தில் குதித்தனர். அதிபர் உண்மையிலேயே ராஜினாமா செய்துவிட்டாரா? அப்படியானால் அதிபர் இப்போது எங்கே இருக்கிறார்? யார் இந்த பெட்ரோ? நாங்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்தவரை வெளியே அனுப்பிவிட்டு, இந்த பெட்ரோவுக்கு முடிசூட, இராணுவத்திற்கு யார் அதிகாரம் கொடுத்தது?
மக்கள் அதிபரைத் தேடத் தொடங்கினார்கள். இருண்டிருந்த எங்களது வாழ்வினில் ஒளியேற்றிய எங்கள் அதிபர் எங்கே? படுக்கவே இடமின்றிப் பரிதவித்த எமக்கு நிலம் கொடுத்த அதிபர் எங்கே? தற்குறிகளாய், கை நாட்டுப் பேர்வழிகளாய், தெருவில் சுற்றித் திரிந்த எங்களுக்கு, எழுத்தறிவு புகட்டிய, அந்த உத்தம அதிபர் எங்கே? மக்கள் தேடத் தொடங்கினர்.
மக்கள் ஒவ்வொருவராய் அதிபர் மாளிகையின் முன் கூடத் தொடங்கினர். நூற்றுக் கணக்கில் திரண்ட மக்களின் எண்ணிக்கை, சிறிது நேரத்தில் ஆயிரக் கணக்காய் மாறியது. நேரம் ஆக ஆக, கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்ததே தவிர குறையவேயில்லை. இலட்சக் கணக்கான மக்கள், பல இலட்சக் கணக்கான மக்கள் அதிபர் மாளிகையையே சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர்.
இராணுவத்தினர் கண்ணீர் புகை, தடியடி என என்னென்னவோ செய்து பார்த்தார்கள், கூட்டம் கலையவேயில்லை. மாறாக கூடிக் கொண்டே இருந்தது.
இன்னும் சிறிது நேரம் தாமதித்தால், அதிபர் மாளிகையின், ஒவ்வொரு செங்கற் கல்லையும் பிரித்து எடுத்து, மாளிகையையே தரை மட்டமாக்கி விடுவார்கள் போலிருந்தது.
எங்கே எங்கள் அதிபர்?
மக்களின் குரலில், அதிபர் மாளிகையே கிடுகிடுத்தது.
அதிபர் மாளிகையினுள் இராணுவத்தினர், முதன் முறையாக உட்கார்ந்து யோசித்தனர். அதிபருக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கின் முழு பலத்தையும், கண் எதிரிலேயே பார்த்துக் கொண்டிருக்கிறாகள் அல்லவா?
அதிபர் விடுவிக்கப் பட்டார்.
ஒரு நாள் மட்டுமே அதிபராக இருந்த பெட்ரோ கார்மோனா வீட்டுக்கு அனுப்பி வைக்கப் பட்டார்.
நண்பர்களே, இது ஒன்றும் கற்பனைக் கதையல்ல. நம்புவதற்கு வேண்டுமானால் சிறிது கடினமாக இருக்கலாம், ஆனால் உண்மை, நடந்த உண்மை. வரலாற்றின் பக்கங்களில் இருந்து, என்றென்றும் அழித்து எடுக்க முடியாத, கல்வெட்டாய் பொறிக்கப் பட்ட உண்மை.
நண்பர்களே, மக்களே ஒன்று திரண்டு அதிபரை மீட்ட நாடு எது தெரியுமா?
வெனிசூலா
மீட்கப்பட்ட அதிபர் யார் தெரியுமா?
ஹியூகோ சாவேஸ்.
---
வெனிசூலாவில் அமைதி தொலைந்து கொண்டிருந்தது.
படித்தவர்களுக்கு வேலை இல்லை. வேலை கிடைத்தாலும சம்பளம் கிடைக்கவில்லை. அப்படியே சம்பளம் கிடைத்தாலும், அது வயிற்றுக்குக் கூடப் போதவில்லை.
ஒரு பேரூந்தில் ஏறி, நான்கு நிறுத்தங்கள் தள்ளி இறங்கினால், கால் வாசி சம்பளம் காலி. ஒரு ரொட்டி சாப்பிட்டுவிட்டு, ஒரு டீ குடித்தால் இன்னொரு கால் வாசி சம்பளமும் காலி.
என்னத்தான் செய்வார்கள் மக்கள். செய்தித் தாட்களைப் பிரித்தால், உலக வங்கியிடம் கடன் வாங்கி இருக்கிறோம். வட்டி கட்டவே வழியில்லை. கஜானாவில் காசே இல்லை என ஆட்சியாளர்களின் புலம்பல். உலக வங்கியிடம் கடன் வாங்கி, என்ன செய்தார்கள் என யாருக்கும் தெரியவில்லை.
பள்ளிப் படிப்பை முடித்த ஹியூகோ சாவேஸ்க்கு ஓர் ஆசை. இராணுவப் பயிற்சிப் பள்ளியில் சேர வேண்டும் என்று. லத்தீன் அமெரிக்காவிலேயே மிகவும் பழமையான பள்ளியாகிய, Venezulean Academy of Military Sciences என்னும் இராணுவப் பள்ளியில் சேர்ந்தார். இந்த இராணுவப் பள்ளியில் வரலாற்று ஆசிரியராக அமைந்தவர்தான், சாவேஸுக்குப் புதுப் புது புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்தார்.
சாவேஸ் படித்தப் பாடங்களிலேயே அவரை அதிகம் கவர்ந்தது அரசியல். குறிப்பாக மாவோ.
வாசிக்க வாசிக்க சில விசயங்கள் அவருக்குத் தெளிவாய் தெரிந்தன. போர் என்பது துப்பாக்கிகளோ, டேங்குகளோ, குண்டு வீசும் விமானங்களோ அல்ல, போர் என்றால் மனிதர்கள். போரில் மனிதர்கள்தான் முக்கியமே தவிர, ஆயுதங்கள் அல்ல.
பால் குடித்தப் பூனையாக மாறினார் சாவேஸ். புத்தகங்களைத் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித்தார். சைமன் பொலிவரை அவர் முழுமையாக உள்வாங்கிக் கொள்ளத் தொடங்கியது இங்குதான். பொலிவரைப் போல் சாவேஸின் மனதில் அத்தனை ஆழமாகப் பதிந்து போனவ்ர்கள் யாரும் இல்லை.
இராணுவப் பள்ளியில் இருந்து வெளியேறிய சாவேஸ், 1983 ஆம் ஆண்டு, ஜுலை 24 ஆம் நாள், பொலிவரின் 200 வது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், பொலிவர் புரட்சி இராணுவம் 200 ( Bolivar Revolutionary Army 200) என்னும் அமைப்பினைத் தொடங்கினார்.
துப்பாக்கி ஏந்தி களத்தில் இறங்கினார். கைது செய்யப் பட்டார்.
அரசுக்கு எதிராகப் புரட்சி செய்த சாவேஸ் கைது செய்யப் பட்டார். சிறையில் அடைக்கப் பட்டார் என்னும் செய்தி காட்டுத் தீ போல் பரவியது. ஒரே இரவில் நாடு முழுவதும் சாவேஸ் பிரபலமாகி விட்டார். நமக்காகத்தான் இவர் போராடுகிறார். நமக்காகத்தான் இவர் சரணடைந்திருக்கிறார்.
சிறையில் சாவேஸ் நடந்து முடிந்த சம்பவங்களை அசை போட்டுக் கொண்டே இருந்தார். தன்னுடைய இயக்கம் தோல்வியைத் தழுவியதற்கு இரண்டு காரணங்களைக் கண்டார்.
ஒன்று மக்களின் ஆதரவு. நாமாகவே சிந்தித்தோம். நாமாகவே ஆயுதம் தூக்கினோம். நாமாகவே போராட முடிவெடுத்து விட்டோம். ரஷ்யா, கியூபா, சீனா போன்ற நாடுகளில் புரட்சி அரசாங்கம் நிறுவப் பட்டது என்றால், அது முழுக்க முழுக்க மக்களின் ஒத்துழைப்பினால் மட்டுமே நிகழ்ந்ததாகும்.
லெனின் செய்தது இதைத்தான். காஸ்ட்ரோ செய்தது இதைத்தான். மாவோ செய்ததும் இதைத்தான்.
இரண்டாவது ஆயுதப் போராட்டம். அதுதான் ஓரே தீர்வு என்ற முடிவுக்கு ஏன் வந்தோம்? யார் சொல்லி ஆயுதத்தைத் தூக்கினோம், மக்களா? இல்லையே.
மொத்தத்தில் தவறு யாரிடம்.
என்னிடம்தான் என தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார்.
1993 இல் வெனிசூலாவில் தேர்தலுக்கான அறிவிப்பு வந்தது. கால்டேரா என்பவர் அரசை எதிர்த்துக் களமிறங்கினார்.
அன்புள்ள வெனிசூலா மக்களே, நாங்கள் உங்களுக்காகவே போராடப் பிறந்தவர்கள். பிப்ரவரி 1992 இல் நாங்கள் நடத்திய வீரப் போராட்டத்தை நீங்கள் யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். உங்களுக்காகவே எங்களது அண்ணன், தானைத் தலைவர், சிங்கத் தளபதி ஹியூகோ சாவேஸ் அவர்கள் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார். சாவேஸின் ஆசி பெற்றவர்கள் நாங்கள். எனவே உங்களது பொன்னான வாக்குகளை ....
செய்தியறிந்த சாவேஸ் சிறையில் கர்ஜித்தார். துப்பாக்கி ஏந்திய, ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவு தருகிறோம் என உறுதியளித்து, கடைசியில் கழுத்தறுத்தவர்கள் அல்லவா இவர்கள். இப்பொழுது என் பெயரைச் சொல்லியல்லவா ஓட்டுக் கேட்கிறார்கள்.
நண்பர்களே, 1994 இல் நடைபெற்றத் தேர்தலில் கால்டேரா வெற்றி பெற்றார். ஆட்சியைப் பிடித்த கால்டேரா செய்த ஒரே உருப்படியான காரியம், சாவேஸை விடுதலை செய்ததுதான். சாவேஸின் பெயரைச் சொல்லியல்லவா வெற்றி பெற்றிருக்கிறார். சாவேஸை உள்ளேயே வைத்திருந்தால், முரண்பாடாகத் தோன்றுமில்லையா? அதற்காக விடுதலை செய்தார்.
சாவேஸ் சிறையை விட்டு வெளியே வந்ததும், வராததுமாக, இயக்கத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார். இயக்கத் தோழர்களை அழைத்தார்.
இதற்கு முன்னாள் நாம் செய்யாத பல விசயங்களை இனி செய்யப் போகிறோம்.
வெனிசூலா வரைபடத்தைப் பிரித்து வைத்துக் கொண்டார். கிழக்குப் பகுதி, மேற்குப் பகுதி, மத்தியப் பகுதி என மூன்றாகப் பிரித்தார்.
ஒவ்வொரு பகுதிக்கும் தனித் தனிக் குழு. ஒரு சந்து, பொந்து விடாமல் முழுப் பகுதியையும் சுற்றி வரவேண்டும். சுற்றி வருவது என்றால், ஜீப்பில் உட்கார்ந்து கொண்டு, ஒலிப் பெருக்கியை அலற விட்டுக் கொண்டு அல்ல.
ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்ட வேண்டும். வீட்டிலுள்ள ஒவ்வொருவரிடமும் பேச வேண்டும். மாணவர்கள், வயதானவர்கள், வேலைக்குப் போகிறவர்கள், வீட்டில் இருப்பவர்கள் அத்தனை பேரையும் சந்திக்க வேண்டும்.
மக்களின் வாழ்க்கை நிலையை ஆராயுங்கள். அவர்களுடைய வீடுகளை ஆராயுங்கள். அவர்களுடைய பொருளாதார நிலையைத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடைய அரசியல் உணர்வுகளைத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடைய அடிப்படைப் பிரச்சினைகள் என்ன? அரசாங்கத்திடமிருந்து அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?
சந்து பொந்தெல்லாம் சென்றார்கள். ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டினார்கள். பேசினார்கள்.
நண்பர்களே, ஒரு நாள் இரு நாள் அல்ல, ஒரு மாதம் இரு மாதமல்ல. இரண்டு ஆண்டுகள் சுற்றினார்கள். கதவுகளைத் தட்டினார்கள். சாவேஸும் சுற்றினார். சுற்றிக் கொண்டே இருந்தார். ஒவ்வொரு வீட்டின் கதவாகத் தட்டிக் கொண்டே இருந்தார்.
தனது இயக்கத்தின் பெயரை ஐந்தாம் குடியரசு இயக்கம் என மாற்றினார்.
1998, டிசம்பர் 6 ல் வெனிசூலாவில் தேர்தல் நடைபெற்றது. 1999, பிப்ரவரி 2 ஆம் நாள், வெனிசூலாவின் அதிபராக ஹியூகோ சாவேஸ் பொறுப் பேற்றுக் கொண்டார்.
அதிபர் பதவியேற்றவுடன் மக்கள் முன் உரையாற்றினார்.
இன்று போர் தொடங்குகிறது. இந்தப் போர் லத்தீன் அமெரிக்க மண்ணில், அராஜகமாகக் குடியேறிய, ஐரோப்பிய, அமெரிக்க, கரீபிய ஆட்சியாளர்களுக்கு எதிரானது. இந்தப் போரில் மடிவதைத் தவிர வேறு வழியில்லை. இனி பணிந்து போவது இயலாது. வெனிசூலாவின் இந்தப் புரட்சிகர மாற்றம், ஒட்டு மொத்த லத்தீன் அமெரிக்கப் புரட்சிக்கும் முன்னோடியாகத் திகழும். தன்மானத்துடன் கூடிய சமாதானத்துக்கானப் போராட்டம் இது.
ஏப்ரல் 1999. இராணுவ உயர் அதிகாரிகளை வரவழைத்துப் பேசினார்.
இன்று முதல் வெனிசூலா இராணுவம் நாட்டுக்காக சில உருப்படியான வேலைகளைச் செய்யப் போகிறது. வெனிசூலாவைக் கட்டமைக்கும் பொறுப்பை உங்களிடம் வழங்கப் போகிறேன். இந்த நிமிடம் தொடங்கி உங்கள் அத்தனை பேருடைய பொறுப்பும் மாறப் போகிறது.
கவனமாகக் கேளுங்கள். நம் நாட்டு மக்கள் ஏழ்மையோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். வீடில்லை, நிலமில்லை, நல்ல உணவு இல்லவே இல்லை. ஆகவே அவர்களுடையப் போராட்டத்தில், நீங்கள் அனைவரும், உங்களையும் இணைத்துக் கொள்ளப் போகிறீர்கள்.
புரியவில்லையே
உங்களுடைய சீருடை, துப்பாக்கி எல்லாவற்றையும், ஒரு மூலையில் வைத்துவிட்டு, மக்களுக்காக வேலை செய்யுங்கள். இத்திட்டத்தின் பெயர் பொலிவர் திட்டம் 2000.
மொத்தம் 40,000 படை வீர்ர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்.
மக்களின் தேவையை உணர்ந்து, அவர்களுடன் இணைந்து பணியாற்றினார்கள். வீட்டில் யாருக்காவது உடல் நலமில்லையா? மருத்துவரை வரவழைத்தார்கள். சாலைகளைச் செப்பனிட்டனர். கிணறுகள் தோண்டினர்.
இராணுவப் படை விமானங்கள் பயணிகள் விமானங்களாக மாறின.
போர்க் கப்பல்கள், கடல் பகுதியில் வாழும் மக்களுக்கு உதவத் தொடங்கின. மீன் பிடித்தொழில எப்படி நடக்கிறது என அருகில் இருந்து பார்த்தார்கள். இதே தொழிலை எப்படி, முறைப்படி செய்தால், ஆதாயம் கிடைக்கும் என்பதைப் புரிய வைத்தனர். மீனவர்களுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தனர்.
பரான்கோ யோபல் ( Barranco Yopal ) என்றொரு பகுதி. வெனிசூலாவுக்குள் இருக்கும் ஒரு சோமாலியா இது பழங்குடியினர் நிரம்பிய பகுதி.
இப் பழங்குடியினருக்கு மருத்துவ மனைகள். குழந்தைகள் படிப்பதற்குப் பள்ளிக் கூடங்கள் கட்டப் பெற்றன.
இராணுவ மருத்துவ மனைகள் பொது மக்களுக்காகத் திறந்து விடப் பட்டன. குட்டி, குட்டியாக பல அரசு மருத்துவ மனைகள், அவசர கதியில், ஊரெங்கும், நாடெங்கும் தோன்றின.
இராணுவத்தையும், மக்களையும் ஒரே நேர்க்கோட்டில் கொண்டு வந்து சாதித்துக் காட்டினார் சாவேஸ்.
நண்பர்களே, இது மட்டுமல்ல, வெனிசூலாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தையே திருத்தி, மாற்றி எழுதினார் சாவேஸ்.
சாவேஸ் திருத்தி எழுதிய வெனிசூலாவின் அரசியலமைப்புச் சட்டம்தான், இன்று உலகிலேயே மிகப் பெரிய அரசியலமைப்புச் சட்டம்.
தேசத்தின் பெயரையும் மாற்றினார். வெனிசூலா என்பது வெனிசூலா பொலிவரியக் குடியரசு ( Bolivarian Republic of Venezula) என மாற்றப் பட்டது.
அடுத்து, சாவேஸின் கவனம் நிலத்தின் மீது திரும்பியது. நாட்டிலுள்ள 75 சதவிகித நிலங்கள், வெறும் ஐந்து சதவிகித மக்களிடம் இருந்தது.
அதிகப் படியான நிலம் வைத்திருப்பவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப் பட்டது.
உங்களிடம் உள்ள நிலத்தில் எண்பது சதவிகிதத்திற்கும் மேல் உபயோகப் படுத்தப் படாமல் இருக்கிறது. ஏன்? உடனடியாக விளக்கம் அளிக்கவும்.
பதில் வரவில்லை.
நிலத்தை ஒப்படைத்து விட்டு ஓடிவிடுங்கள். இல்லையேல் சட்டம் பாயும்.
பண்ணையார்கள் நிலத்தை விட்டு விட்டு வெளியேறிக் காணாமல் போனார்கள்.
கைப்பற்றப் பட்ட நிலங்கள், ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுக்கப் பட்டன. அரசே விவசாயிகளை வரவழைத்து நிலங்களை வளப்படுத்திக் கொடுத்தது.
நண்பர்களே, திட்டங்கள் அனைத்திலும் சீரியதாய், மேலானதாய் ஓர் திட்டம். ராபின்ஸன் திட்டம். எழுத்தறிவிப்பதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
கற்றுக் கொடுக்க விரும்புகிறவர்கள் முன்னால் வாருங்கள்.
கற்க விரும்புகிறவர்கள் தயாராகுங்கள்.
நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான ஆர்வலர்கள் துடிப்புடன் முன் வந்தனர். அனைவருக்கும் எழுதத் தெரிந்திருக்க வேண்டும், படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சின்னச் சின்னக் கணக்குகளை போடத் தெரிந்திருக்க வேண்டும். இதுதான் பாடத் திட்டம்.
ஒரே ஆண்டில் 1,250,000 பேர் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டனர். வெனிசூலாவின் இன்றைய எழுத்தறிவு சதவிகிதம் 99.
நண்பர்களே, சாதித்துக் காட்டிய இவர்தான் சாவேஸ்.
ஆண்டு 2006, செப்டம்பர் 20. ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றார் சாவேஸ்.
சபை நிரம்பியிருந்தது. உரை நிகழ்த்த வேண்டிய சாவேஸ், தன்னுடன் ஒரு மருத்துவரையும், ஒரு பாதுகாப்பு அதிகாரியையும் உடன் அழைத்து வந்திருந்தார். ஆனால் அமெரிக்க அரசாங்கம், அவர்கள் இருவரையும், பார்வையாளர்களாகக் கூட ஏற்றுக் கொள்ளத் தயாரக இல்லை. அவர்களை பிடித்துக் கொண்டு போய், அவர்கள் வந்த விமானத்திலேயே அடைத்து வைத்தது.
தனக்கு வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, அமைதியாய் மேடை ஏறினார் சாவேஸ். கையில் ஒரு புத்தகம்.
உலக நாடுகளை ஆளும், அரசாங்கத்தின் பிரதிநிதிகளே, அனைவருக்கும் என் வாழ்த்தும், வணக்கமும்.
மிகவும் அமைதியாகத்தான் தன் உரையைத் தொடங்கினார். கையோடு கொண்டு வந்திருந்த, புத்தகத்தை, அனைவருக்கும் தெரியும்படி உயர்த்திக் காட்டினார்.
இதுவரை நீங்கள் யாரும் வாசித்திராத, இந்தப் புத்தகத்தை அவசியம் வாசிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள அனைவரும், மிகுந்த மரியாதையுடன் போற்றும், ஓர் அறிவு ஜீவி நோம் சாம்ஸ்கி ( Noam Chomsky) , இவர் சமீபத்தில் எழுதி வெளியிட்டுள்ள புத்தகம் இது.
Hegemony or survival: The Imperialist Strategy of the United States.
இருபதாம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் என்னென்ன நிகழ்ந்தன, இப்பொழுது என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நாம் வாழும் இந்த பூமி எதிர் கொண்டுள்ள பெரும் அபாயங்கள், ஆபத்துகள் என்னென்ன, என்பது போன்ற அத்தனை விசயங்களையும் விரிவாக புரிந்து கொள்ள இந்த நூல் உதவும்.
ஐ.நா சபை உறுப்பினர்கள் அனைவரும் சாவேஸை உன்னிப்புடன் கவனித்துக் கொண்டிருந்தனர். காரணம் நோம் சாம்ஸ்கி ஒரு அமெரிக்க எதிர்ப்பாளர். குறிப்பாக புஷ் எதிர்ப்பாளர்.
சாவேஸ் தனது வழக்கமான தொனிக்கு மாறினார். அவரது முகம் இறுகியது.
அந்த சாத்தான் இதே இடத்திற்கு நேற்று வந்திருந்தது. இதோ இந்த இடத்தில் (மேடையைச் சுட்டிக் காட்டுகிறார்) இங்கேதான் நின்று பேசிக் கொண்டிருந்தது. அது வந்து சென்றதன் அடையாளமாக, துர்நாற்றம், இன்னமும் இங்கே அடித்துக் கொண்டிருக்கிறது.
சாவேஸின் உரையை நேரடியாக பதிவு செய்து கொண்டிருந்த தொலைக் காட்சிக் காமிராக்கள் ஒரு நிமிடம் அதிர்ந்தன. கூடியிருந்த உலகநாடுகளின் தலைவர்களுக்கு, பேச்சு மூச்சு இல்லை.அதிர்ச்சியில் உறைந்தனர்.
இப்படியும் ஒரு மனிதரால் பேச முடியுமா?
எத்தனை நெஞ்சுரம்
எத்தனை துணிச்சல்.
நண்பர்களே, யாருக்கும் அஞ்சாத சாவேஸ். மிகவும் பின் தங்கிய, பொருளாதார பலம் இல்லாத தேசமாக இருந்த வெனிசூலாவை, தனது திறமை மிகுந்த ஆட்சியாலும், அச்சமற்ற நடவடிக்கைகளாலும, வளரும் நாடுகளில் ஒன்றாக உயர்த்திக் காட்டிய சாவேஸ், கேவலம் புற்று நோய்க்குப் பலியானதுதான் சோகத்திலும் சோகம்.
ஹியூகோ சாவேஸைப் போற்றுவோம்.
சாவேஸ் இறுதி ஊர்வலக் காட்சிகள்