பாவலர் வரதராஜன் என்ற "மக்கள் கலைஞன்"...........
1971ம் ஆண்டு மதுரையில் மார்க்சிஸ்டு கட்சியின் அகில இந்திய மாநாடு நடப்பதாக இருந்தது.அப்போது அதனை ஒட்டி மதுரையில் "பீப்பிள்ஸ் தியேட்டர்"என்ற நாடகக்குழு ஆரம்பிக்கப்பட்டது.வையைச்செழியன் (பா.ரத்தினம்) எழுதிய "நெஞ்சில் ஒர் கனல்" என்ற நாடகம் போட முடியாயிற்று.நாடகத்தின் ஒத்திகை வடக்கு ,மேற்கு ஆவனிமூலவீதி சந்திப்பில் உள்ள அரசமரம் சந்தில் பொதுதொழிலாளர் சங்கத்தில் நடக்கும் அங்கு தான் பாவலர் அவர்களொடு பழகும் வாய்ப்பு கிடத்தது.
ஒடிசலான கருத்த உருவம்.கூர்மையானமூக்கு.வெள்ளை வெட்டி ஜிப்பா. தோளில் சிவப்புத்துண்டு.இதுதான் பாவலர்.அவரை மேடையில் பல ஆண்டுகளாக பார்த்திருந்தாலும் பழகும் வாய்ப்பு இப்போதுதன கிடைத்தது.
'எங்க கட்சி சின்னகட்சி. பத்தடி கம்புல செங்கொடியப் பறக்க விடுவம்.காங்கிரஸ்காரன் இருவது அடி தேக்கமரத்துல கொடியை கட்டுவான்.தி.மு.க காரன் விடுவானா? 40அடிக்குஇரும்பு குழாயில கட்டி தொங்கவிடுவான்.ஒசக்க,அதுக்கும் ஒசக்க, அதுக்கும் ஒசக்க...எவ்வளவு ஒசக்கடா... வானத்துல ...சந்திரன்லயா ..அரிவாள், சுத்தியல்நட்சத்திர கொடிய என் சோவியத் தோழன் ...சந்திரன்ல பறக்கவிடுட்டான்...... "பறக்குது பார் " என்று செங்கொடிப்படலோடு அவர் ஆரம்பிக்க மக்கள் கைதட்டி அவரை வாழ்த்தும் காட்சி இன்றும் என்கண்முன்னால் நிற்கிற
1967ம் ஆண்டு தி.மு.க.வின் தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு பாவலரின் குரலுக்கு ஒரு பங்கு உண்டு. 1965ம் ஆண்டு இந்தி போராட்டம் நடந்தது. அண்ணாமலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராஜெந்திரன் என்ற மாணவன் இறந்தான்.அவன் ஒரு போலீஸ் காரரின் மகன். அவன் பட்டம் பெற்று வருவான் என்று காத்திருந்த தாய் கதறி அழுவதை பாட்டெழுதிப் பாடும் போது பாவலர் அழுவார். பார்வையாளர்கள் கண்பனிக்க விம்முவார்கள். மெலிதாக கார்வையோடு கூடியகுரலில் "பக்தவத்சலத்திற்கு ஒட்டுப் பொடுவீர்களா?என்று கேட்பார். தொண்டை அடைக்க கண்களை ஒருகையால் துடைத்துக்கொண்டு மறு கையால் இல்லை என்று காட்டுவார்கள்.முதலமைச்சர் பக்தவத்சலம் தொற்றார்.
ஆதித்தனாரை தி.மு.க வினர் நாக்கில் நரம்பில்லாமல் ஏசுவார்கள் .அவரை "சிங்கப்பூர் திருடன்" என்று வர்ணிப்பார்கள். அவர் 67ம் ஆண்டு கூட்டணியில்நின்று வென்றார்.மந்திரி பதவி கொடுக்காமல் சபாநாயகராக்கினார் அண்ணாதுரை அவர்கள்.அண்ணா மறைந்தார் கருணாநிதி முதல்வரானார். ஆதித்தனாரும் மந்திரியானார்.. அப்பொது ஆதித்தனார் கருணாநிதியின் குடும்பக்கட்டுபாட்டு திட்டத்தை அமல் படுத்த முன் கை எடுத்தார். அது வரை குடும்பக்கட்டு
ப்பாடு கூடாது என்று கூறிவந்தவர் ஆதித்தனார்.
அப்பொது "யாதொங்கி..." என்ற இந்திபடம் சக்கைபோடு போட்டது.பாடல்கள் அருமையாக இருந்தன. அதில் " ரூப் தேரா மஸ்தானா " என்ற பாடல் மக்களிடையே பிரபலமாக இருந்தது . அந்தப் பாடலை "லூப் தர்றான் - சர்தானா
மட்டலனா விட்றனா-ஆதித்தனாரு போதித்ததென்ன
போதித்தபின்னே சாதித்ததென்ன" என்று பாவலர் பாடுவார்.மக்களின் கரகோஷத்தில் பாவலர் முங்கிக் குளிப்பார்.எப்பேர்பட்ட கலைஞன் .
பாவலருக்கு வறுமை ஒரு பெரிய சுமை.அதனால் அவருடைய பழக்க வழக்கங்களில் தேவையற்ற மாற்றங்கள் .அதனால் வாய்ப்புகள் குறைந்தன. மேடையில் அமர்ந்துபாடமுடியாத நிலை.தம்பிகள் ராஜா சிங்கும்,அமர்சிங்கும் அற்ற குளத்தைவிட்டு சென்னை சென்றுவிட்டார்கள். பாஸ்கர் மட்டும் வந்துபார்த்துவிட்டு போவார்.அவருடைய நினைவாக அவர் வைத்திருந்த ஆர்மெனியப்பெட்டியை பீப்பிள்ஸ் தியெட்டர் தலைவரிடம் கொடுத்தார்.
பாவலரை அமுக்க அப்பொதைய ஆட்சி "Q" பிரன்சை நாடியது. வழக்கு பொட்டர்கள். வலது கட்சியின் சார்பாக கே.டி.கே தங்கமணி வழக்கை நடத்துவார் என்று ஜனசக்தி அறிவித்தது. அதோடுசரி .
பாவலர் தி.மு.கவில் செர்ந்தார்.வழக்குகள்விலக்கிக் கொள்ளப்பட்டன . தி.மு.க.வில்சேர்ந்ததும் முதல் கச்சேரி மதுரை மில் வாயிலில் உள்ள "மாஸ்கோ காளிகோவில்" அருகில் மேடை தி.மு.க.வினரை விட மார்க்சிஸ்ட் கட்சினர் தான் பெரும் கூட்டமாக வந்திருந்தனர்.பாவலர் பாட ஆரம்பித்தார்."நீ இருக்கும்போது வரவில்லையே- அண்ணா" என்று பாடினார். தோழர்கள் கண்கலங்கி "எப்படிப்பட்ட கலைஞன் எப்படியாயிற்று' என்று வருந்தினார்கள் ."ஏன்? நானிருக்கும் போது வரக்கூடாதா?" என்று தலைமை கழகம் வருத்தப்பட்டதாக செய்திகள் கசிந்தன .
பாவலர் அதன் பிறகு அதிக நாட்கள் இருக்கவில்லை. அந்த கலைஞன் மறைந்தான்.
மேற்கு மலை தேயிலைதொட்டத்து முகடுகளில் ஒலித்த அவன் குரல் வங்கக் கடல் அலைகளொடு சங்கமித்து இன்றும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. மறையாது....
12 comments:
அன்பின் தோழர் என்ன ஒரு அற்புத மான பதிவு இது.
எனது நினைவுக்கு இந்த 25 ஆண்டுகால முற்போக்கு வாழ்கையில் நம்மைப் பிரிந்து போன தோழர்கள் வரிசையாக வந்து நிற்கிறார்கள்.
அன்பு காஸ்யபன்
பாவலர் குறித்து நிறைய செய்திகள் கேள்விப்படுவதுண்டு
ஒவ்வொரு முறையும் பரவசம் தோற்றும்
நீங்கள் தொகுத்திருப்பது மிகவும் கிடைத்தற்கரிய செய்திகளாகும்.
அத்தனையும் அருமை..
அவரது சபை வணக்கம் பாடலை
தீக்கதிர் சென்னை பதிப்பு துவக்க நிகழ்ச்சியில்
தோழர் உமாநாத், சங்கரய்யா முன்னிலையில்
கங்கை அமரன் பாடினார்'
மேடையில் அப்போது இந்தியன் வங்கி எம் கோபாலகிருஷ்ணனும் இருந்தார்.
7 நவம்பர் 1992 என்று நினைவு
பாலைக் குடம் குடமாய்ச் சாமி தலைமேல் கொண்டு போய்க்
கொட்டாத பேர்களுக்கும் வணக்கம்.
முற்போக்குக் கொள்கையை நாட்டில் பரப்பி வரும்
சொர்போழிவாருக்கும் வணக்கம்..
போன்ற வரிகள் அற்புதமானவை...
வறுமை எத்தனை இலட்சியவாதிகளை விலை பேசியிருக்கிறது
என்ற கணக்கு எங்கும் போட முடியாது..பாவலர் வீழ்ந்தது
நமது முற்போக்குப் பண்பாட்டு இயக்கத்திற்கான பின்னடைவு..
பாவலரின் வானுயர்ந்த சோலையிலே பாடலுக்கு எஸ் பி பி
உயிர் கொடுத்துப் பாடியதை எப்போது கேட்டாலும் பாவலர் நினைவுக்கு
வந்து விடுவார்..
எஸ் வி வேணுகோபாலன்
முந்திய பதிவில்,
முற்போக்குக் கொள்கையை நாட்டில் பரப்பிவரும்
சொற்பொழிவாளருக்கும் வணக்கம்
என்று இருக்க வேண்டும்..
மன்னிக்கவும்
எஸ் வி வி
ஆகா!காமராஜ் அவர்களே! வாருங்கள். எவ்வளவு நாளாகிவிட்டது ஐயா!உமது பின்னூட்டத்தப் பார்த்து.!நலம் தானே? வாழ்த்துக்களுடன்---காஸ்யபன் .
வேணு அவர்களே! பாவலர் போன்ற வர்களுக்கு மரணம் வரலாமா? வந்துவிட்டதே! யார்காரணம்?நான்,நீங்கள், அதோ அவன், அந்த மக்கள் ,நண்பர்கள், தோழர்கள்,உறவினர்கள் தான் காரணம். இரவு பத்து -பதினோரு மணிக்கு மேல் சோர்ந்து பொதுத்தோழிலாளர் சங்கத்துக்கு வருவார்."சென்னைக்குப் போங்கள் .ராஜாவாக இருக்கலாம்" என்பேன். ஒரு dry smile--- பேசமாட்டார்.கூர்மையாக பார்த்துவிட்டு தலையை முடியாது என்பது போல் ஆட்டுவர்.---காஸ்யபன்
எல்லாரையும்..எல்லாருமே..ஒரு விலை கொடுத்து வாங்கி விடுகிறார்கள்..
உன்னதமான கலைஞனை பற்றிய பதிவு. பகிர்வுக்கு நன்றி அய்யா.
கம்யூனிஸ்ட் இயக்கத்தின், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் (கலைஞர்) சங்கத்தின் மூத்த தோழரான டி.செல்வராஜ் தீக்கதிர் வண்ணக்கதிரில் (2.10.2005) கூறியிருப்பதை அப்படியே தருகின்றேன்: "பாவலர் வரதராசன் இசைக்குழு அமைப்பதற்கு முன்பே எனக்கு அவரைத் தெரியும். 1958ஆம் ஆண்டில் கேரள மாநிலம் தேவிகுளம் தாலுகாவில் (இப்போதைய இடுக்கி மாவட்டம்), தேயிலைத்தோட்டத் தொழிலாளர் மத்தியில் தொழிற்சங்கப் பணிக்காக தமிழகத்தில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டக்குழுவால் முழு நேர ஊழியராக அனுப்பப்பட்டவர் அவர். அப்படிப்பட்ட சூழலில்தான் கேரள மாநிலத்தில் இருந்த தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு தலைமையிலான கம்யூனிஸ்ட் மந்திரிசபையைக் காப்பாற்றும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தேவிகுளம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. கேரள அமைச்சரவையைக் கவிழ்த்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தனது சக்தி முழுவதையும் திரட்டித் தேர்தல் களத்தில் குதித்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர், கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தோழர் பி.டி.பொன்னூசின் துணைவியார் தோழர் ரோசம்மா பொன்னூஸ்.
"அப்போது முழுநேர ஊழியராக இருந்த தோழர் வரதராசனின் பிரச்சார ஆயுதம் அவரது இசைஞானமும் கவிதையாக்கும் திறமையும்தான். இசைக்கருவிகள் ஏதும் கிடையாது. தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்று 'மைக்'கில் அவர் பாட ஆரம்பித்தார் என்றால் மக்கள் சாரை சாரையாக பாட்டின் நாதம் கேட்டு கூடுவதே பெரும் காட்சியாக இருக்கும். நடுநிசியில் கூட மக்கள் அந்தப்பாடல்களைக் கேட்கக் கூடுவார்கள்.... இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோற்றுப் போனது. அதற்குப் பிறகுதான் பாவலர் வரதராசன், தோழர் ஐ.மாயாண்டி பாரதியின் ஆலோசனை அடிப்படையில் தனது சகோதரர்களை இணைத்து இசைக்குழு அமைத்து தனது இசைப்பயணத்தை ஆரம்பித்தார்".
28 வருடங்களுக்கு முன் பாவலர் பாடல்தொகுப்புக்கு இளையராஜாவே எழுதிய முன்னுரை இது: "இப்பொழுது கூட நான் வேடிக்கையாகச் சொல்வது உண்டு. மாட்டுவண்டி போகாத ஊருக்குக்கூட எங்கள் பாட்டுவண்டி போயிருக்கு. இது வெறும் வார்த்தையல்ல. பதினைந்து ஆண்டுகள் நாங்கள் பெற்ற அனுபவம். இன்றுகூட நான் உபயோகித்துக் கொண்டிருக்கும் ஆர்மோனியப்பெட்டியைப் பல மைல்கள் தலையில் தூக்கி நடந்து சென்று கிராமம் கிராமமாகப் பாடியிருக்கின்றோம்".
...இக்பால்
வாருங்கள் ஆர்.ஆர்.ஆர் அவர்களே! தங்கள் உயிரையே விலையாகக் கொடுத்த பகத் சிங்,ராஜகுரு,சுகதேவ்,ஆகியோரின் நினவு நாள் நேற்று.இங்கு விலை என்பது ஒரு relative term என்று கருதுகிறேன்.---காஸ்யபன்
இக்பால் அவர்களே! எங்கள் பீப்பிள்ஸ் தியேட்டரின் செயலாளராக இருந்தவர் மறைந்த உபெந்திரநாத் ஜோஷி. பாவலரின் முழு பாடல்களையும் தன்னுடைய "கிரண்டிக்" ஸ்பூல் ரிகர்டரில் பதிந்து வைத்திருந்தார். குறிஞ்சி வேலன் என்ற கவிஞர் மூலம் இளையராஜா பாவலர் பாடலகளை தொகுக்கப் போவதாகவும் கொடுத்து உதவ வேண்டும் என்றும் கேட்டார். உபேந்திரன் கொடுத்தார்.இன்று வரை திரும்பி வரவில்லை.---காஸ்யபன்
அற்புதமான பதிவு அய்யா, பாவலரின் குரல் பதிவு ஏதேனும் உள்ளதா ? தெரியவில்லை.
பாவலரோடு பதினைந்து நாட்கள் கேரளாவின் பார்த்தோடு ஊரில் ஒன்றாக இருந்து அவரோடு கட்சி பணி ஆற்றிய நாட்கள் நினைவுக்கு வந்தது .மறக்க முடியாத அனுபவம் அது
Post a Comment