( இது ஒரு மீள் பதிவு ! நம்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்க )
சிறு கதை :
"அம்பாசமுத்திரம் கந்தசாமி "
சிறு கதை "அம்பாசமுத்திரம் கந்தசாமி "
"ஸ்ரீ அம்மவுக்கு கந்தசாமி வணக்கங்களோடு எழுதிக்கொள்வது.இங்கு நான் நலம்.அங்கு நீங்கள் , உங்கள் மறுமகள் புஷ்பா,பேத்தி இந்திரா, பேரன் காமராஜ் ஆகியொர் நலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.என்னைப் பற்றி ....
" சோல்ஜெர்ஸ் கம்-அவுட் " என்று காப்டன் ஞானெஷ் வர்மாவின் கர்ஜனை கேட்டதும் கந்தசாமி கடிதம் எழுதுவதை நிறுத்தினான். மூன்று நாட்களாக கடிதம் எழுத நினைத்தும் முடியவில்லை.பங்கருக்குள் உள்ள பெற்றொமாக்ஸ் வெளிச்சத்தில் உட்கார்ந்து எழுத ஆரம்பித்த உடனேயே சிம்மம் கர்ஜித்தது.எழுந்துவெளியே ஒடும்போது மற்றவர்களும் " 'அசெம்பிள்' ஆகியிருந்தனர்.
மலை உச்சியில் பாகிஸ்தான் ராணுவமும் முஜாகிதீனும் இருந்தனர்." ஃபயர்" என்று உத்திரவிட்டதும் பீரங்கி முழக்கமிட்டது.பழுப்புநீற வெளிச்சத்தோடு குண்டுகள் பாய்ந்தன.பத்து நிமிட தாக்குதலுக்குப்பிறகு மவுனம்.
அடுத்த உத்திரவு வரை வேலையில்லை.
மீண்டும்கந்தசாமி பங்கருக்குள் நுழைந்தான்.அவனோடு சிக்னலைச்சேர்ந்த சோமசேகரும் நுழைந்தான். சோமசேகர் கர்நாடகத்துக்காரன்.கந்தசாமி கடிதத்தைத் தொடர்ந்தான் .
"என்னை பற்றி கவலைபட வேண்டாம்.நீங்கள் நம்ம வளவில் உள்ள கோனார்வீட்டு டி.வி யில் பார்த்துவிட்டு என்னைபற்றி பயப்படுவீர்கள் என்று நினைத்துத்தான் எழுதுகிறேன்.இங்கு எங்களுக்குப் பாதுகாப்பு உள்ளது.நல்ல சத்தான உணவு கொடுக்கிறார்கள் .'
. சோமசேகர் எழுந்து தன் வாட்டர் பெக்கில் இருந்து தண்ணிர் குடித்தான்.ஒரு சிகரெட்டை எடுத்துபத்தவைத்து கந்தசாமியிடம்நீட்டினான்.தனக்கு ஒன்றைப் பத்தவைத்துக்கொண்டான்.அவன் மடியில் இருந்த பிளாஸ்டிக் பையில் வறுத்த பயறு இருந்தது. ஒரு பிடியை எடுத்து கந்தசாமி வாயில்போட்டுக்கொண்டான்.மூன்று நாட்களாக நூடில்ஸ்,பயறு ,சிகரெட் தான் ஆகாரம் .
"ஏய!காந்த்! முன்று நாளா உன் பூட்ஸை கழட்டவில்லை" என்றான் சேகர்."
" நீ நான்குநாட்களாக கழட்டவில்லை " என்றான் கந்தசாமி.இருபத்துநான்கு மணிநெரமும் கண்துஞ்சாத பணி.இந்ததேசத்தின் இருத்தலை உணர்த்தும்பணி.கடிதம் எழுதத் துவங்கினான்.
"இங்கு குளிர் அதிகம் தான் .ஆனால் பத்திரிகைச்செய்திகளைப் பார்த்து பயப்படவேண்டாமம்மா! ...குத்தாலத்தில் அருவியில் தலையைக் கொடுத்ததும் உடம்பு முழுவதும் சிலிர்த்து குளிர்பாயும்..அதே பொலத்தான்.. ஒரே ஒரு வித்தியாசம்..அங்கு அருவியிலிருந்து தலையை எடுத்துவிட்டால் குளிர் குறைய ஆரம்பிக்கும்..இங்கு இருபத்து நலுமணி நேரமும் எலும்பிற்குள் பாயும் குளிர் ...."
பங்கிற்கு வெளியே பூட்ஸ் கால்கள் உரசும் சத்தம்.இருவரும்வேளியே வந்தார்கள்.காப்டன் வர்மாகைதேர்ந்த குதிரையை தடவிக் கொடுப்பதைப்போல தடவிக் கொண்டிருந்தார்.இருந்த இடத்திலிருந்து 40கி,மீ.தூரம் குண்டுகளை வீசும் திறன்.மூன்று குன்றுகளைத் தாண்டி எதிரிகள் இருக்கிறார்கள்,அவர்களுடைய பீரங்கி பிரிட்டிஷ் காரனுடையது.25 கி.மீ பாயும்.
" ... எங்களிடம் வலுவன பீரங்கி உள்ளது.பொபர்ஸ் பீரங்கி..செங்கோட்டையிலிருந்து வீசினால் திருநெல்வெலி கொக்கிரகுளம் தகர்ந்துவிடும். அவ்வளவு வலுவானது .அதனால் பயப்பட வேண்டாம்..."
வெளியில் பால் நிலா ரம்யமாக இருந்தது.கந்தசாமி சிகரெட்டைப் பத்தவைத்துக்கொண்டு பங்கர் ஹோல் மூலமாக சிகரட் நுனியை மறத்துக் கொண்டு பார்த்தான் .எதிரிகள் இருக்கும் மலையில் மூன்று பகுதிகளையும் காவல் காக்கிறார்கள்.உச்சியில்இருப்பவர்களை நெருங்கி விரட்ட வேண்டும்.விரட்டமுடியது.அவனிடம் அதிநவீனமான சிறிய ஆயுதங்கள் உள்ளன.அவன் அவற்றை வீணாக்க வேண்டும்.அதற்கு மேலும் ஆயுதங்கள் வருவது தடுக்கப்பட்டு வருகிறது .
மலைகளின் நான்காவது பகுதிசெங்குத்தான பாறைகளைக் கொண்டது.அதன் மூலம் நமது வீரர்கள் ஏறுகிறார்கள்.சிறு சிறு குழுக்களாக..ஆறுஅல்லதுஎட்டுபெர்கொண்டகுழுக்களாக ...கந்தசாமிக்கு மகள் இந்திரா நினைவு வந்தது ...
."..அம்மா இந்திராவை உன் மருமகள் புஷ்பா மருத்துவக் கல்லூரியில் சேர்க்க ஆசைப்படுகிறாள்.நம்மால் முடியுமா? இடம் கிடைக்காது.தவிர பணம்கட்ட முடியுமா? அதனால் அவளை பி.எஸ் ஸியில் சேர்த்துவிடு.நான் தனியாக புஷ்பாவுக்கு எழுதுகிறேன் .அம்பை நகராட்சி உறுப்பினர் ஒருவரை ஆம்பூர் மச்சானுக்கு தெரியும்.அவர் மூலமாக கல்லூரியில் இடத்துக்கு ஏற்பாடு பண்ணு..சவத்துப் பய காசு கேப்பான்..கொடுத்துவிடு...:
மலை ஏறுபவர்கள் மீது உச்சியில் இருப்பவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள். இதில் இரண்டு நன்மைகள்.எதிரிகள் வசமுள்ள ஆயுதங்கள் குறையும்.தாக்குதலையும் மீறி நம் வீரர்கள் உச்சியை அடந்துவிட்டால் லாபம்.இடையே ஏறும் வீரர்கள் தாக்குதலில் உயிரிழந்தால்.. இது ராணுவம் ..நடப்பது யுத்தம்...எதிரிகளிடம் ஆயுதம் குறைந்து வருகிறது என்பது புலப்படுகிறது. ஏறி வருபவர்களை கொல்ல பெரும் பாறைகளை நம் வீரர்கள் மீது உருட்டி விடுகிறார்கள் .கந்தசாமி மீண்டும் தொடருகிறான் .
"... பொட்டல் புதூர் தாவூது ஞாபகம் இருக்கா அம்மா .. நான் பங்களுரில இருக்கும் போது உனக்கு கட்டில் கொடுத்துவிட்டேனே...அவன் போயிட்டான்..."
எதிரிகள் தங்கியிருக்கும் மலை உச்சிக்கு நேர் கீழே தாவூது பதுங்கி யிருந்தான்.நம் வீரர்கள் மலையில் ஏறும்போது நாற்பது கி .மீ. தள்ளி யிருக்கும் வர்மாவுக்கு தகவல்கொடுப்பான்.அவர்கள் ஏறி பாதுகாப்பான பாறைகளுக்கு பின்னால் சென்றதும் பீரங்கி படைக்கு தகவல் கொடுப்பான்.பீரங்கி மலை உச்சியில் உள்ள எதிரிகளைத்தாக்கும்.பீரங்கியால் நம் வீரர்களைப் பார்க்கமுடியாது.நம் வீரர்களால் பீரங்கிபடையை பார்க்க முடியாது.இருவருக்குமிடையே உள்ள இடைவெளியை இட்டு நிரப்பியவன் தாவூது.அவனை கண்டுகொண்ட எதிரிகள் வீசிய பீரங்கிக் குண்டு அவனை ரத்தம்,சதை,எலும்பு என்று பிய்த்து எறிந்துவிட்டது.
கந்தசாமி குளிருக்காக் காலை ஸ்லீப்பிங்க் பாக் கிற்குள் நுழைத்துக் கொண்டான். கடிதம் தொடர்ந்தது
. "...காமராஜை தீர்தபதி ஹைஸ்கூல்ல சேர்த்துடு...புஷ்பா அவனை கான்வெண்ட்ல இங்கிலீஷ் மீடியத்துல சேக்கணம்னு நினைக்கிறா...பெரிய செலவு...அவளுக்கு அப்பர் தெரு சம்முகக்கனி மகனோடு பொட்டி போடணும் ...சம்முகக் கனி இரும்புக்கடை வச்சிருக்கான்.லட்சம்லட்சமா சம்பாதிக்கிறான்...லட்சம்லட்சமா நன்கொடை கொடுக்கவும் முடியும்.நான் திருவனந்தபுரத்திலேருந்து இங்க வந்ததும் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது.குளிரு அதிகம்தான்.பத்தாயிரம் பதினைந்தாயிரம் அடி உயரம்தான்.ஆனா சும்மாவா இதுக்காகவே மாதம் 120 ரூ கொடுக்கான்...சண்டை சீக்கிரமாமுடிஞ் சுடும்னு தோணுது... அது நல்லதுதான்..ஆனா நமக்குதான் கஷ்டம்...கீழ இற்ங்கிபுட்டா ..120 ரூ வெட்டிடுவான்..சண்டை முடிஞ்சதும் லீவு தருவாங்க....உன்னையும் ...குழந்தைகளையும் பார்க்க வருவேன்..".புஷ்பா தினம் சின்னச்சங்கரன் கோவிலுக்கு எனக்காக போறாளாம்...எழுதியிருந்தா...அவள பயப்படாம இருக்கச்சொல்லு ...கொவிலுக்குப் போற பாதை ஒரே புதரும் முள்ளுமா இருக்கப்போவுது.பூச்சி பட்டை இருக்கும்...அதுதான் எனக்கு பயமா இருக்கு...வெளிச்சத்திலேயே போய் வரட்டும்...மத்தப்படி என்னை பத்தி கவலைபட வேண்டாம் .....""
கந்தசாமியின் கடிதம் ஆர்மி பொஸ்டாபிஸில் சேர்க்கப்பட்டது.
அம்பசமுத்திரதிலுள்ள கந்தசாமியின் அம்ம சண்முகவடிவுக்கு "தந்தி"வந்தது. கடிதம் வரும்..
(கார்கில் போர் முடிந்ததும் செம்மலரில் பிரசுரமான கதை)