கோவேறு கழுதை நாவலும் ,
எழுத்தாளர் "இமயமும் ".........!!!
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முதன் முதலாக இலக்கியத்திற்காக பரிசளிக்கத் துவங்கிய காலம் அது ! மூத்த எழுத்தாளர் கு.சி.பா தன பெற்றோர்களின் பெயரில் சிறந்த நாவலுக்கு பரிசளிக்க முன்வந்தார் ! பரிசு 3000/-ரூ என்றும் முடிவு செய்யப்பட்டது !
அதற்கான நடுவர் குழுவில் நானும் இருந்தேன் ! நான் ஏற்கனவே "கோவேறு கழுதை " நாவலைப் படித்திருந்தேன் ! சலவைத்தொழிலாளர் குடும்பத்தைச் சுற்றி வரும் நாவல் ! நாவலின் வடிவ நேர்த்தி புதுமையாக இருந்தது ! அதுமட்டுமல்லாமல் நாவலாசிரியரின் எழுத்துக்கு ஊடாக பலகீனமான கோபக்குரல் -மனிதனின் கையாலாகாத - தன்மையைச் சுட்டுகிற ஒலி நாவல் முழுவதும் கேட்டுக் கொண்டே இருந்தது !
நடுவர்கள் பிரியப்பட்டால் அவர்கள் சிறந்தது என்று கருதும் நாவலை வாங்கி பரிசுக்கு அனுப்பலாமென்றும் இருந்தது ! நல்லகாலம் பரிசுக்கு வந்த சில நாவல்களில் இமயத்தின் முதல் நாவல் இருந்தது ! அந்த ஆண்டு முதன் முதலாக இமயம் அவர்களுக்கு பரிசு அளிக்கப்பட்டது !
பரிசளிப்பு விழா மதுரையில் நடந்ததாக நினைவு ! ஒல்லியான ,கருத்த ஒரு இளைஞரை இவர்தான் இமயம் என்று எனக்கு அறிமுகப்படுத்தினார்கள் !அப்போது அவரோடு அதிகம் பேசவில்லை !
சமீப காலங்களில் தொலைக்கட்சிகளில் அவர் அதிகம் தென்படுகிறார் ! தோற்றத்திலும் பொலிவு கூடியிருக்கிறது ! அவருடைய அர்சியல் மற்றும் தத்துவார்த்த நிலை பற்றி எதுவும் தெரியாது !
இந்த மாத புத்தகம் பேசுது இதழில் மதுசூதன் அவர்களின் ஒரு கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் அவருடைய சிந்தனைதெளிவை ,துணிச்சலை பறை சாட்டுகிறது !
கேள்வி : உங்களுடைய கதைகள் "தலித்"களின் வாழ்வை பதிவு செய்வதாகக் கொள்ளலாமா ?
இமயம்: ஒரு எழுத்தாளன் ,அவன் பிறந்த இனத்தாருடைய கதைகளையே எழுதுவான் என்று நம்புவதும் ,அப்படித்தான் எழுதி இருக்கிறான் என்று சொல்வதும் சாதியை வேறு விதமாக அடையாளப்படுத்திக் காட்டுவதுதான் !சுயசாதி மனிதர்களுடைய கதைகளைத்தான் எழுதுகிறேன் என்பது இன்னும் இழிவானது ! இலக்கியத்தை இலக்கியமாக பார்க்காமல் அதை எழுதிய எழுத்தாளனின் சாதியை வைத்து பார்ப்பதால் ஏற்படுகிற விளைவுதான் இந்தக் கேள்வி !
நம்முடைய சமுகம் ,ஒரு மனிதனின் செயல்பாடுகளை ,அவன் எந்த விதத்திலும் பொறுபேற்க முடியாத சாதியை வைத்தே மதிப்பிடுகிறது ! சலுகை காட்டுவது மாதிரி அவமானப்படுத்துகிறது ! ஐயோ பாவம் என்பது போல பிச்சை போடுவதை , கௌரவமாக ஏற்பது எவ்வளவு பெரிய அவமானம் ? நான் "தலித்" எழுத்தாளன் என்று சொல்வது இந்த அவமானத்தை பெருமையாக ஏற்றுக்கொள்வது தான்! திறமையற்றவர்கள் செய்யும் காரியம் இது !
என்னுடைய எழுத்து தலித்துகளின் வாழ்வை சித்தரிக்கிறது என்பதற்குப் பதிலாக மனிதத் துயரத்தை பதிவு செய்கிறது என்று ஏன் சொல்லக்கூடாது !
பிற இனத்தவரின் துயரம் மனிதத் துயரம் ! பிற இனத்தவரின் வாழ்க்கை மனித வாழ்க்கை ! ஆனால் "தலித்" களின் துயரமும் வாழ்க்கையும் மனித துயரமல்ல !மனித வாழ்க்கையல்ல ! அது தலித்துகளின் துயரம் தலித்துகளின் வாழ்க்கை !இந்த மனோபாவத்திற்கு எதிரானது என் எழுத்து ! இது தான் என் எழுத்திற்கான சவால் !'
இமயம் அவர்களே வாழ்த்துக்கள் !!!
2 comments:
இலக்கியத்தை இலக்கியமாக பார்க்காமல் அதை எழுதிய எழுத்தாளனின் சாதியை வைத்து பார்ப்பதால் ஏற்படுகிற விளைவுதான் இது.
சரியான பதில்தான் ஐயா
Post a Comment